Monday 31 December 2012

2012ல் மறக்க முடியாதவை. . .

அருமை நண்பரின் இழப்பு.. . .


 1978ல் இருந்து எங்களின் நட்பு தொடர்ந்து வந்ததென்றாலும், கடந்த பத்தாண்டுகளாக தினமும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இருவரும் எதையாவது கலந்து பேசிக்கொண்டிருப்போம்.  கம்ப்யூட்டர் சம்பந்தமான விசயங்களைத் தெரிந்து கொள்வதில் ரொம்பவும் ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வமிகுதியால் தனியே வலைப்பூ ஒன்றும் தொடங்கி எழுதி வந்தார்.

இலக்கியத்தில் அதுவும் இதிகாசத்தில் அவருக்கு சந்தேகங்கள் அதிகம். ஒவ்வொரு நாளும் எதையாவது கேட்டுக்கொண்டோ அல்லது அவர் காதில் விழுந்தவைகளை விவாதித்துக்கொண்டோ இருப்பார். ராம பிரானும் ராவணனும் அவர்கள் முன் பிறவிப் பயனாகவே ராமாயனத்தில் தோன்றினர் என்றார் ஒரு நாள். அடுத்தனாள், உறவுகள் பாசத்தால் பிணைக்கப் பட்டிருக்கின்றன. பசம் போயின் இவ்வுலகுக்கு வந்த பலன் கிட்டும் என்று சொல்லி ஆச்சரியப் பட வைத்தார். இதுபோல அவர் சொன்ன இன்னும் எவ்வளவோ நுணுக்கமான விசயங்கள் அவருடன் நெருக்கமாகப் பழகியோருக்குத் தெரியும்.


 பல இடங்களுக்கும் ஒன்றாகவே சென்று வந்தோம். பசியைத் தாங்கமாட்டார். எல்லா வகை உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவார். உணவுகளில் பிடிக்காதது குறைவு. உணவைப்போலவே, அவருக்கு நண்பர்கள் ஏராளம். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமும் கலகலப்பாக பேசி அவர்களின் நட்பை சம்பாதிக்கும் குணம் இவரிடம் இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு.

"அதெப்படி செல்வம்? எப்படி உங்களால என்ன நடந்தாலும் இப்படி முகத்தை வச்சிக்க முடியுது? " என ஒரு நாள் வினவினேன்.

 " அட, எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் ..." எனச் சொல்லி சிரித்தார்.



ஓய்வு நேரங்களில் சினிமாவிற்கு செல்வதை வழக்கத்தில் கொண்டிருந்தோம். பொதுவாக ஆங்கில படங்களுக்கு புதன் கிழமைகளில் செல்வோம். அவரிடமிருந்த பிளாஸ்டிக் அட்டைக்கு  ஒரு விலையில் இரு டிக்கட்டுகள் கிடைக்கும். அப்படி பல படங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு நாள், வேறு யாரும் இல்லாததனால், எங்கள் இருவருக்காகவே ஒரு ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது. அந்த நாளை நினைவில் நிறுத்த நான் அவரையும், அவர் என்னையும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலிருப்பது அதில் ஒன்று.



ஆபத்து அவசரங்களின் போது ஓடோடி வந்து உதவுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அப்படி அவருடைய உதவிகளைப் பெற்றோர் ஆயிரத்துக்கும் அதிகமானோர். சில நேரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும், " நீ ரெடியா இரு. நாம ஒரு இடத்துக்கு போறோம்... ". இதன் பொருள், யாருக்கோ உதவி தேவைப் படுகிறது, போகும் போது என்னையும் அழைத்துப் போகிறார் என்பதே.


மின்சாரம், இலெக்ட்ரோனிக், தண்ணீர் பம்புகள், வாகன பழுதுகள் இன்னும் இது போன்ற பலவற்றிலும் இவர் சிறந்தவராக மின்னினார். மற்ற சமூக பிரசினைகளுக்கு என்னிடம் கலந்து கொள்வார். உண்மையில் இவர் பல திறமைகளை தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு
தமிழ்  'மெகாய்வர்' என்பது போலத்தான் இருந்தார். " ஒன்று முடியாவிட்டால் இன்னொன்றை செய்துபார். அதுவும் முடியவில்லை என்றால் அடுத்ததுக்குப் போ..." என்பது அவருடைய கொள்கை. 


இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் அவர் அரசியல் கட்சியொன்றில் சேர எண்ணம் கொண்டிருந்தார். எவ்வளவு தடுத்தும் அவர் அதை மற்றவர்களுக்கு செய்யும் சேவை என திடமாக கூறி ஒரு கிளைத்தலைவராகவும் ஆனார். சேவைகள் தொடங்கின. பல வேலைகள் அவரைத் தேடிவந்தன. பலரும் அவரை எதிர்பார்த்திருந்தனர். புகழ் அவரை அனுகத்தொடங்கியது. அரசியலிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ந்து பணியாற்ற காலம் இடந்தரவில்லை. 56வது வயதில் காலமானார். 34 வருடங்கள் தினமும் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பில் இருந்த ஒருவர் திடீரென மறைந்து விட்டது ஒரு பேரிழப்பு எனக்கு. 

 ( Selvam @ Kumar @ Salivakumar... 22 days before his death... )


உலகில் எதுவும் நிலையல்ல, 
யாரும் நிலைப்பதில்லை
தெரிந்ததுதான்....
என்றாலும், 
மனம் ஏற்றுக்கொள்ள 
சிரமப்படுகிறது
 சில நேரங்களில்....

No comments:

Post a Comment