Tuesday 28 November 2017

அந்தக் காலத்தில்.....

பழைய காலத்தில் இருந்த இவை அனைத்தும் எனக்கு பரிச்சயமானவை.....(கேட்டவை, பார்த்தவை, படித்தவை....)...... பழசுதான், ஆனாலும் என்றும் இனிய எண்ணங்களாய் மலரும் நினைவுகளில் மேகங்களாய் மிதக்கின்றன.


















 




























Sunday 3 September 2017

தடைகளும் வாழ்க்கையில் படிக்கல்லப்பா....

அனிதா என்கிற மாணவி தற்கொலை புரிந்துகொண்டு உயிர் விட்ட சோகம் அதிரடி செய்திகளாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், புதிதாக வெடிக்கும் கிளர்ச்சிகள் நமக்கு வெறுப்பை தருகிறது.
அவர் சிறந்த மாணவி.... ஏற்றுக்கொள்கிறோம்.
அவர் மருத்துவ படிப்புக்கு ஏங்கினார், ஏதோ ஒரு தடைக்கல் அவர்முன் விழுந்து அவரது ஆவலை கலைத்துவிட்டது .... சரி, விளங்குகிறது.
அதற்கு தீர்வு உயிர் துறப்பா?
இதுதான் எனக்கு விளங்கவில்லை.
மலேசிய இந்திய மாணவர்களில் அனிதாவைப் போல எல்லா பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற எத்தனையோ மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பிய மருத்துவ படிப்பு பல காலமாக மறுக்கப்பட்டு வருகிறது இங்கு.
வருந்துகிறோம், வேதனைப்படுகிறோம்...
சில வேளைகளில் வெகுண்டெழுந்து உணர்ச்சி பூர்வமாக விவாதிக்கிறோம். ஆனாலும், யாரும் உயிர் துறப்பது பற்றி எண்ணியதில்லை.
சிறந்தது கிடைக்கா நிலையில், அடுத்ததை சிறந்ததாக்கிக் கொள். இதுதான் எங்கள் தாரக மந்திரம். அதற்காக, எங்களின் நியாயமான போராட்டத்தை கைவிடவில்லை. அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மருத்துவப்படிப்பு கிடைக்கவில்லையே இனி எதற்கு இந்த உயிர் என நினைத்திருந்தால், மலேசிய மாணவர்கள் வருடா வருடம் பலர் மேலே போய்க்கொண்டிருப்பர்.
உண்மையில் அடுத்த நிலையிலும் சாதனைகளை செய்வோர் ஏராளமானோர். மனத்திடத்துடன் போராடி, தடைகளை உதறி வெற்றிப்படிகளில் தொடர்பவர்களே பாராட்டுக்குரியவர்கள்.
ஆனால், தற்கொலை என்பதை பெருமைப்படுத்தி தமிழ் நாட்டில் பலரும் பாடுவதை கேட்க சகிக்கவில்லை. எம்பிபிஎஸ் படிக்க நினைத்த அந்த சகோதரிக்கு, பாரதியார் பற்றி தெரிந்திருக்கவில்லையே....?
இறைவன் கொடுத்த உயிரை இப்படி அல்ப காரணத்துக்காக போக்குவது மஹா பாவம். ஆத்ம உலகில் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ, இந்த முடிவினால்.....
ஒன்றைச் சொல்வேன் நான்....
இனி வரும் காலங்களிலாவது, 'தோல்விகளை தாங்கிக்கொள்வது எப்படி' எனும் இன்னுமொரு பாடத்தை கல்வித்துறை தங்களது கற்றல் கற்பித்தலில் இணைத்துக்கொள்வது நல்லது.
அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Wednesday 16 August 2017

ரூட்ஸ்... அமெரிக்க - ஆப்பிரிக்கர்களின் வேர்களை அறியும் நாவல்!

இன்று ஆகஸ்ட்-17,  அலெக்ஸ் ஹேலி இயற்றிய `ROOTS: THE SAGA OF AN AMERICAN FAMILY' என்ற நாவல் வெளிவந்து, 41  ஆண்டுகள் ஆகின்றன.
அலெக்ஸ் ஹேலி என்கிற ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், தனது குடும்ப வரலாற்றை அறிய தம் முன்னோர்களது வேர்களைத் தேடிச் சென்றபோது, 12 வருட ஆராய்ச்சியின் இறுதியில் கிடைத்ததுதான் இந்தக் குண்டாவின் கதை.

அது எப்படிச் சாத்தியமாகும்?

பண்ணைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டும், பல இன்னல்களுக்கு ஆளாகியும், தனது ஆப்பிரிக்கப் பிறப்பை, கலாசாரத்தை, தான் கடந்து வந்த பாதையை, குண்டா தன் மகளுக்குக் கடத்திட தவறவில்லை. இப்படியே அவர்களது வாழ்வியல் பரம்பரைப் பரம்பரையாகச் செவிவழியாகக் கடத்தப்பட்டு அவர்களது குடும்பத்தின் 200 ஆண்டு வரலாறு  குண்டா-வின் ஏழாம் தலைமுறையான  அலெக்ஸ் ஹேலியிடம் வந்து நிறைவடைகிறது. தனது இந்தக் குடும்ப வரலாற்றை, `ROOTS:THE SAGA OF AN AMERICAN FAMILY' என்ற நாவலாகப் படைக்கிறார் ஹேலி. இந்த நூல் வெளிவந்து இன்றோடு (ஆகஸ்ட்-17)  41  ஆண்டுகள் ஆகின்றன. இது, உலகெங்கும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.

குண்டாவின் கதை, வெறும் கதை அல்ல; அமெரிக்க-ஆப்பிரிக்கர்களின் மெய்யான வரலாறு. ஐந்து கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க-ஆப்பிரிக்கர்களின் வீடுகளில் அது பைபிளைப்போல பாதுகாத்து வைத்துப் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம். அது அமெரிக்க நீக்ரோக்களின் துயரம் தோய்ந்த வரலாற்றை மட்டும் சொல்வதல்ல, இன்று அமெரிக்கா உலகின் மாபெரும் வல்லரசாக உருவாகிய வரலாற்றில், ஒன்றா... இரண்டா... ஏழு தலைமுறைகளின் இழிவும் அவமானமும் அடிமைத்தனமும் ரத்தமும் ஓய்வறியா உழைப்பும் கலந்துள்ள வரலாற்றைச் சொல்வதாகும்.

 அப்படியென்ன துயரங்கள் நிறைந்த வரலாறு?



ஆப்பிரிக்கக் கடலோரக் காடுகள், அவர்களின் துன்பியல் வரலாற்றுக்கு இன்றும் சாட்சி சொல்லி நிற்கின்றன. கடலோரம் ஒரு படகு நிற்கும். தூரக் கடலில் ஒரு கப்பல் காத்திருக்கும். கடலோரக் காடுகளின் இருள் மறைவில் முரட்டு வெள்ளையர்கள் பதுங்கி இருப்பார்கள். ஆப்பிரிக்கக் கறுப்பின ஆண்களும் பெண்களும் அங்கு மரம் வெட்டுவதற்கோ விறகு சேகரிக்கவோ வருவார்கள். அவர்களில் திடகாத்திரமானவர்களை தடித்த கயிறுகளால் ஆன வலைகளை வீசிப் பிடித்து அப்படியே அமுக்கி, படகின் மூலம் கடலில் நிற்கும் கப்பலுக்குக் கொண்டுசென்று நிர்வாணமாக்கி, சங்கிலிகளால் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கப்பலின் அடித்தளத்தில் வீசிவிடுவார்கள். அந்த அப்பாவிக் கறுப்பின மனிதர்கள், மூத்திரத்திலும் மலத்திலும் கிடந்து வாடுவார்கள். பல மாதப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்கக் கடற்கரையை நெருங்கும்போது பட்டினியிலும் நோயிலும் இறந்துபோனோரைக் கடலில் வீசி எறிந்துவிட்டு, எஞ்சியோரைக் குளிப்பாட்டி,  உணவளித்து அமெரிக்க அடிமைச் சந்தைகளில் ஏலம்விடுவார்கள். ஏலத்தில் எடுக்கப்பட்ட அடிமைகள், கடுமையாக உழைக்க வேண்டும். தப்பிச் செல்ல முயன்றால், பாதங்கள் வெட்டப்பட்டுவிடும். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவார்கள். அப்படிப் பிறந்த குழந்தைகள் `கலப்பினக் குழந்தைகள்' (Bi racial) என்ற அவமானத்தைச் சுமந்து திரிய வேண்டும். இது ஆறு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறையின் கதை.   

அமெரிக்காவில் 17 வருடங்களைக் கழித்திருந்த `குண்டா'வைப் பற்றி `ரூட்ஸ்' நாவலில்...

`இவர் இன்னும் ஆப்பிரிக்கர்தானா? இல்லை மற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்களை அழைத்துக்கொள்வதைபோல் ‘NIGGER ‘ ஆகிவிட்டாரா? இவர் தன் தந்தையை இறுதியாகப் பார்க்கும்போது அவருக்கு என்ன வயதோ, அதே வயது மனிதர் ஆகிவிட்டார் இவர். இருப்பினும், இவருக்கென மகன்கள் இல்லை, மனைவி இல்லை, குடும்பம் இல்லை, சொந்த ஊர் இல்லை, மக்கள் இல்லை, வீடு இல்லை. அவரது கடந்த காலம் எதுவும் அவருக்கு இப்போது உண்மையாகத் தெரியவில்லை. எதிர்காலமும் இல்லை. பிறந்த இடமான காம்பியா செல்லவேண்டும் என்பது முன்பு இவருக்கு ஒரு கனவாக இருந்தது, அந்தக் கனவைக் கண்டுகொண்டே உறங்கிக்கொண்டிருக்கிறாரா? அப்படியென்றால், உறக்கத்திலிருந்து என்றாவது எழுப்பப்படுவாரா?'

அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறை முன்னோர்கள் மட்டும் அவர்களுடைய ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்ப வரலாற்றைச் சொல்லிச் சென்றிருக்கவில்லையென்றால், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் அடிமை வரலாறும் அமெரிக்க வெள்ளை இனத்தவரின் கொடூரச் சுரண்டலும் உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அமெரிக்க உருவாக்கத்தில் கறுப்பின மக்களின் ஒப்பற்றப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலே, அமெரிக்க வெள்ளைச் சமுதாயம் வடக்குத் தெற்காகப்  பிரிந்து போரிட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஒபாமா பதவியேற்றபோது கோடிக்கணக்கான அமெரிக்கக் கறுப்பினத்தவர் கண்ணீர்விட்டு அழுத ஒரு காட்சியே அவர்களின் துயர வரலாற்றுக்குச் சாட்சி. இன்று அமெரிக்காவின் உயர் பதவிகளிலும், திரைப்பட நாயகர்களாகவும், மிகச்சிறந்த படைப்பாளிகளாகவும் மனித உரிமைப் போராளிகளாகவும் கறுப்பின (நீக்ரோ) மக்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் துயரத்தையே சுமந்து போராடிப் போராடி வளர்ந்துவந்த ஏழு தலைமுறைகள் இருக்கின்றன என்பதை அலெக்ஸ் ஹேலி எடுத்துச் சொல்லியபோது, அமெரிக்க-ஆப்பிரிக்க சமுதாயம் முழுவதும் அவருக்குக் கண்ணீரைக் காணிக்கையாக்கி நன்றியைத் தெரிவித்தது.  

இருப்பினும் இன்றும்கூட அவர்கள் வெள்ளையர்களின் இனவெறியிலிருந்து முழுவதுமாக விடுபடவில்லை. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அமெரிக்க மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் நிறவெறியை ஊக்குவித்து வருகிறது. கறுப்பின அப்பாவிகள் காவல் துறையால் அவமதிக்கப்படுவதும், கேட்பாரின்றிச் சுட்டுக்கொல்லப்படுவதும் அடிக்கடி செய்திகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் தங்கள் வேர்களையும் அதையொட்டிய வரலாற்றையும் அறிந்திருந்தால் மட்டுமே இவர்களது உண்மையான விடியலுக்கான கலகக்குரலை உயர்த்த முடியும். இன்னும் பல லிங்கன்களும் மார்டின் லூதர் கிங்குகளும் தோன்றி, இறுதியான வெற்றியை ஈட்டுவார்கள்.

எந்த ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமும் தனது வேர்களை, தமது வாழ்வின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் செல்லவில்லை என்றால், அந்தச் சமூகம் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவது எளிதல்ல.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வேர்கள் நமக்கு எதற்கு?

இந்தியாவில்கூட `ஒடுக்கப்பட்ட சமூகம்' பொதுவெளியில் நிர்வாணம் ஆக்கப்பட்டும், மலம் அள்ளவைத்தும், ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டும் பல நூற்றாண்டுகளாகத் துன்பங்களையும் துயரங்களையும் இழிவையும் அவமதிப்பையும் அனுபவித்துவருகிறது. அமெரிக்காவில் கறுப்பர்கள் சமூகத்தைப்போல தனது துயரங்களின் தொடர்கதைக்கான வேர்களைக் கண்டறிவதுதான் அதன் விடுதலைக்கு வழிவகுக்கும். அரசியலிலும் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு என்பது ஓர் இடைக்கால நிவாரணமே அன்றி விடுதலைக்கான தீர்வு அல்ல.

அது பயணிக்கவேண்டிய தூரம் அதிகம். அமெரிக்காவைப்போலவே இங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. ஆனால், அவர்களின் விடுதலைக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்காமல் இருப்பதும், அதன் தலைவர்கள் சிலர் ஆளும் வர்க்கத்திடம் விலைபோவதும் அந்தத் தூரத்தை அதிகரிக்கவே செய்யும்.

மாயா ஏஞ்சலூ  ஓர் இடத்தில், ``நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் வரலாற்றை அறிந்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்கள் சுதந்திரமாக உணர்வீர்கள்” என்று கூறுவார்.

வரலாற்றை அறிவோம்,
விடுதலை உணர்வைப் பெறுவோம்.

- கீ.இரா. கார்த்திகேயன் ( விகடன் )

Thursday 3 August 2017

அரவானின் சோகமான கதை!

அரவானின் சோகமான கதை!


நம்மில் பலருக்கும் மகாபாரதம் மிகவும் குழப்பமான ஒரு கதையாக விளங்கும்.

அதற்கு காரணம் மகாபாரதத்தில் உள்ள அத்தனை பாத்திர படைப்புகளும், அந்த ஒவ்வொரு பாத்திரமும் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதமும் தான்.

இந்த காவியத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் போன்ற பல புராந்த பாத்திரங்கள் உள்ளனர். இவர்களைச் சுற்றி தான் முழுக் கதையும் சுழலும்.

அதனால் இந்த காவியத்தில் வரும் இதர பாத்திரங்களைப் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிவதில்லை. இன்று நாம் பார்க்க போவது அரவானின் கதையைப் பற்றி.

இது ஒரு சின்ன பாத்திரம் தான் என்றாலும் கூட, மகாபாரதத்தில் வரும் முக்கியமான பாத்திரமாகும். இவரின் பரம்பரையில் இருந்து தான் திருநங்கை என்ற மற்றொரு பாலினமே பிறந்தது.

அதனால் தான் திருநங்கைகளை அரவாணி என அழைக்கப்படுகின்றனர். மகாபாராதத்தில் உள்ள சோகமான கதைகளில், அரவான் தேவன் பற்றிய கதையும் ஒன்றாகும்.

பிறரின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்து கொண்ட கதையாகும். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு தன் பரம்பரையை விட்டு சென்றார்.

இதனால் மனித இன வரலாற்றில் அவர் நிலைத்து நின்றார். அவர் கதையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!


அரவான்: அர்ஜுனனின் மகன்
அரவான் என்பது மிகப்பெரிய மகாபாரத போர் வீரரான அர்ஜுனன் மற்றும் அவர் மனைவியான நாக தேவதை உலுப்பிக்கும் பிறந்த புதல்வனாவான்.அரவான் என்பது கூத்தாண்டவர் வழிப்பாட்டின் மைய கடவுளாவார்.அவர் தந்தையைப் போல அரவானும் கடுமையான போர் வீரராக திகழ்ந்தார். தன் தந்தை மற்றும் பிற பாண்டவர்களுடன் குருக்ஷேத்ர போரில் கலந்து கொண்டார்.
போரில் மிக வீரமாக சண்டையிட்டு, மிகப்பெரிய தியாகத்தை செய்தார்.


போருக்காக அரவானின் பலி
9 ஆம் நூற்றாண்டின் தமிழ் பதிப்பான, பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி முன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
அதற்கு போர்களத்துக்காக பலி கொடுத்தல் என அர்த்தமாகும். இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும்.இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார்.


மூன்று வரங்கள்
போரில் தான் வீர மரணம் அடைய வேண்டி கிருஷ்ணரிடம் அரவான் வரம் கேட்டதாக பாரத வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.அரவானுக்கு இரண்டாவது வரம் அளிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதன் படி, அவர் 18-ஆம் நாள் போரைக் காண வேண்டும்.


மூன்று வரங்கள்
மூன்றாவது வரம் வாய்வழி சடங்குகளில் மட்டுமே உள்ளது. அதன் படி, பலி கொடுப்பதற்கு முன் அரவானுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்.அதற்கு காரணம் தன் ஈமச்சடங்குகளை (திருமணமாகாதவர் என்றால் புதைக்கப்படுவார்கள்) உரிமை கொண்டாட ஒருவர் வேண்டும் என்பதாலேயே.
இருப்பினும்    எந்த ஒரு பெண்ணும் அரவானை திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை.அதற்கு காரணம் தவிர்க்க முடியாத விதவை கோலத்தைப் பெற வேண்டும் என்பதால் தான். கூத்தாண்டவர் வழிபாடு பதிப்பில், கிருஷ்ணரே இதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அவரே மோகினி என்ற பெண் வடிவத்தை எடுத்து, அரவானை திருமணம் செய்து கொண்டார்.அன்றைய இரவு முழுவதும் அரவானுடன் கழித்தார்.கூவாகம் பதிப்பு கூடுதலாக இப்படி கூறுகிறது – மறுநாள் அரவானின் பலிக்கு பிறகு ஒரு விதவையாக கிருஷ்ணர் ஒப்பாரி வைத்தது நிகழ்ந்தது.
அதன் பின் போரின் போது தன் சுய ரூபத்திற்கு சென்றார் கிருஷ்ணர்.


மூன்றாம் பாலினம்: அரவாணிகள்
அரவானை கூத்தாண்டவர் என சிலையில் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.அதுவே முதன்மையான கடவுளாகவும் விளங்குகிறது. இங்கே அரவான் மற்றும் மோகினியின் திருமணம், அவள் விதவையாவது, அரவானின் பலிக்கு பின் ஒப்பாரி வைப்பது, என இவையனைத்துமே வருடாந்திர திருவிழாவின் 18-ஆம் நாளின் மைய கொண்டாட்டங்களாகும்.
இது தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமியின் போது நடைபெறும். அரவாணிகள் கூவாகம் திருவிழாவில் கலந்து கொண்டு, அரவான் மற்றும் மோகினியின் திருமணத்தை அரங்கேற்றுவார்கள்.அனைத்து அரவாணிகளும் அரவானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நம்பப்படுகிறது. அதனால் இந்த பலி மீண்டும் அரங்கேற்றப்பட்டு, அரவாணிகள் அரவானின் விதவை மனைவியாக மாறி, ஒப்பாரி வைப்பார்கள்.

Tuesday 18 July 2017

இப்படித்தான் உருவானது தமிழ்நாடு!


மொழிவாரி மாநிலங்கள் 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதன்படி ஹைதராபாத் மற்றும் இதர சில பகுதிகளை இணைத்து ஆந்திரப்பிரதேசமும், திருவிதாங்கூர் மற்றும் இதர சில பகுதிகளை இணைத்து கேரளமும் உருவானது. ஆனால், சென்னை மாகாணமும் இதரப் பகுதிகளும் பெயர் மாற்றப்படாமல் அப்படியே இருந்தன.  சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கோரி, தியாகி சங்கரலிங்கனார் 73 நாள்கள் பட்டினிப்போராட்டம் நடத்தி உயிர்த் தியாகம் செய்தார்.



தமிழ்நாடு உருவாக காரணமான சங்கரலிங்கனார்

அதன்பிறகு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 1967ல்,  அறிஞர் அண்ணா  முதல்வரானதும் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.  பின்னர், ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. இறுதியாக, ம.பொ.சி கூறியபடி 'TAMIL NADU' என்பதை அண்ணா ஏற்றுக்கொண்டார்.



சட்டமன்றத்தில் தீர்மானம்

அதன்படி, அதே நாளில் (18.7.1967)  இதற்கான தீர்மானம்  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில், முதல்வர் அண்ணா 'தமிழ்நாடு' என்று கூற,  உறுப்பினர்கள் அனைவரும் 'வாழ்க' என்று முழங்கினர். இதேபோன்று மூன்று முறை முழக்கமிடப்பட்டது.

- நன்றி : விகடன்

Sunday 11 June 2017

தீபமேற்றும் எண்ணெய்யும், எலுமிச்சையும்....

இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.
இல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.
தற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.
தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.
இதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.
உண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.
ஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.
நாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,
ஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.
அதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.
ஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.
ஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.
நமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது?
ஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.
சரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்?
இல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .
1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.
எல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.
இவைகளையும் (நெய்யை,தேங்காய்எண்ணையை,நல்லெண்ணையை)
தனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.
இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுகிறது எலுமிச்சம்பழம்.
மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம் , தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எல்லா நிலைகளிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாதது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).
இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீஸ்ரீ துர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி , அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது.
ஏதோ விபரமறியாத சில ஜோதிடர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி அதனால் அவர்களுக்கே தெரியாமல் மேலும் மேலும் துன்பங்களை அடைகிறார்கள். இந்த காரியத்தினால்தான் நாம் துன்பம் அடைகிறோம் என அறியாமல் மக்கள், “ நானும் துர்க்கைக்கு வாராவாரம் விளக்கெல்லாம் வைத்தேன் , ஆனால் ஒரு பயனும் இல்லை “ என சலித்துக் கொள்வார்கள் .
அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன , அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப்பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா ? என்றால் ஏற்றலாம்.
ஆனால் , சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்...
எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதிஅளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில் ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து , அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து , இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்கி வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீஸ்ரீ துர்க்கையின் பாதங்களில் சார்த்தி , பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.
இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள்.
இறைவன், இறைவி உலக மக்களின் நன்மையை கருதி தரும் எல்லாமே கீழ்நோக்கியே இருக்கும், நாம் கையேந்தி வாங்குவதாக அமையும் , ஆனால் இயற்கையை மீறி இறைவனை எதிர்த்து மேல் நோக்கி இருக்கும் அந்த எலுமிச்சம்கனியை அன்னை தனக்கே தீபமேற்ற பணிக்கிறாள் , அதை விடுத்து அவள் நமது நன்மைக்காக தந்த பரிசினை அவள் எதிரிலேயே கசக்கி பிழிந்து எரியூட்டினால் நன்மை விளையுமா ? தீமை விளையுமா?
விளகேற்றுவதால் நன்மையும் , எலுமிச்சம் கனியில் ஏற்றியதால் துயரமும் உருவாகும் 
- திருச்சி லால்குடி., ஸ்ரீ சப்தரீஸ்வரர் கோவில்
.

Monday 22 May 2017

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் பிடித்தது...

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் உங்களுக்குத் பிடித்தது எது என ஒரு நண்பர் என்னிடம் வினவினார். அருமையான கேள்வி.
இளம் வயதில் அப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்த புத்தகங்களில் சிலவற்றை படித்திருக்கிறேன். பெயர் தெரியா எழுத்தாளர்களாகவே அவர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, 'ரோமுக்கு அப்பால்...", துப்பறியும் புதினம்.
ஆனாலும் நான் மொழிபெயர்ப்பதில் வல்லுனர்களான பலரின் புத்தகங்களை படித்ததில்லை. எனக்கு பிடித்தது... நான் ரசித்தது... ரா.கி.ர எனும் காலஞ்சென்ற குமுதம் உதவி ஆசிரியர், அய்யா ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்களை மட்டுமே.
''லாரா'', ''ஜென்னிபர்'', ''தாரகை'' போன்ற சிட்னி செல்டனின் நாவல்கள் இவர் கைப்பட தமிழில் புகழ் பெற்றன. அதிலும், அவரின் ''பட்டாம் பூச்சி'' ஒரு இமையம். அதற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பேன் நான்.

Image may contain: 1 person, eyeglasses

ஆங்கில நாவலையும், தமிழிலில் வெளிவந்த மொழிபெயர்ப்பையும் படித்திருந்ததால், ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்தெந்த பகுதிகளில் கவனத்தை செலுத்த வேண்டும் எனும் நுணுக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது.
மூல ஆசிரியர் ஹென்றி ஷாரியார் கதைக்கருவில் இருந்து அவர் நழுவிடவில்லை. ஆயினும், நாவல் நடையினில் அப்படி ஒரு சுதந்திரத்தை அய்யா ரா.கி.ர கையாண்டார். இதை வெட்டலாமா, அதை சுருக்கலாமா என அவர் யோசித்தது கிடையாது. நாவலின் சுவாரஸ்யம் கருதி இரண்டையும் செய்தார். அதனால்தானோ என்னவோ, அவரின் இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனே அவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது.... பட்டாம் பூச்சி நிலைத்து நிற்க காரணமுமாகியது.
மூலப் பிரதியையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் படித்திருந்தாலும், எனக்கு என்னவோ தமிழில் வந்ததே நினைவில் நிற்கிறது.

பட்டாம் பூச்சி நாவலின் ஆங்கில அசலை எழுதியவர்.

1973ல் திரைப்படமாக வந்த போது....

ஜெயமோகன் பலரும் அறிந்த நல்ல எழுத்தாளர். அவரின் பார்வையில் நாவலும், திரைப்படமுமாக ஒரு விமர்சனத்தை ''பட்டாம் பூச்சியின் சிறகுகள்'' என ஆகஸ்ட் 29, 2014\ ல் தந்திருந்தார். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். http://www.jeyamohan.in/7939#.WSLsMeuGOM8