Saturday 31 August 2013

நாயே நாயே ...


ஒரு வெளிவராத படம்... பெயர் : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... சற்று நீளமான தலைப்பு. ஆனால், அதில் ஒரு பாட்டு " நாயே நாயே " என்று ஆரம்பிக்கிறது. பின்னனியில் நாய்கள் குரைக்கும் ஒலி பாடல் முழுவதுமாக சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, பாடல் ரசிக்கும்படியே இருக்கிறது.

தெரு நாயை திட்டும்விதமாக இருந்தாலும் ஜாக்கிரதை.... இதை வைத்து சக மனிதர்களை திட்டாமல் இருப்போமாக. அது நாய்களுக்கு செய்யும் கொடுமையாக இருக்கும் என்பதனால் சொல்கிறேன்.

Bagan Lalang Beach...




Thursday 29 August 2013

பரிந்துரை...

வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நம்மிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிடுவதுண்டு. நிறுவனங்களில் பொறுப்பாளர்களாக இருந்தால் ஏதாவதொரு பகுதியில் வேலைக்கு அமர்த்திவிடலாம். ஆனால், நாமே நோயின் நிமித்தம் வீட்டிலிருந்து ஓய்வெடுக்கும் போது, நம்மைத் தேடி வருவோரை எப்படி நம்பிக்கையூட்டி அனுப்பி வைப்பது...?

ஆகட்டும் பார்க்கிறேன் என பலரிடம் சொல்லலாம். ஒரு சிலரிடம் சொல்ல முடிவதில்லை. அப்படி ஒரு கணக்கியல் மாணவி  என்னைத்தேடி வந்தார்.

கடந்த ஏழுவருடங்களாக அவரை என் குடும்பத்தினருக்கும் எனக்கும்  தெரியும். வேற்று மதத்தவரான அவர், அமைதியானவர், அன்பானவர், ஒரு புத்தகப் புழு, வெளியே அதிகம் சுற்றாதவர், இன மத பேதம் இன்றி பெரியோரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர். இது போன்ற குணங்களுக்கு உத்திரவாதம் தரலாம்.

ஆனால் இவை மட்டுமே ஒருவருக்கு பணியிடத்தை நிச்சையமாக்கித் தந்துவிடுமா? கல்வித்தகுதியினைப்பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? பரிந்துரை செய்யும் ஒருவருக்கு வேறென்னதான் தெரிந்திருக்க வேண்டும்? அடிப்படை சரியாக இருந்தால் மற்றனைத்தும் சரியாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை.  அதன்படி  பரிந்துரைக்கான கடிதத்தை எனக்குத் தெரிந்த எனது  நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

வேலை தேடும் பலரும் எதிர்பார்ப்பது ஒரே ஒரு நேர்காணலுக்கான சந்தர்ப்பத்தையே. அந்த ஒரு சந்தர்ப்பம் எனது கடிதம் மூலம் இவருக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.



 

Tuesday 27 August 2013

என்னைத் தெரியுமா?


புன்னகை மனதை இலகுவாக்குகிறது...
 
ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்பார்கள்.  இரண்டும் வேண்டாம், இன்முகம் போதும் எவ்வித சூழ் நிலையையும் சமாளிக்க.
 
இதையத்தில் இருப்பதை எடுத்துகாட்டும் பணிதான் முகத்துக்கு. ஆயினும் பொய்யுரைக்க முடியா பணி அது. மனதை நிஜமாகவே இனிமையாக வைத்துக்கொள்வதன் வழி முகத்துக்கு உண்மை அடையாளத்தைத் தரலாம்.
 
 
 
 


Monday 26 August 2013

அளவுக்கு மீறினால்...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. என்றோ சொல்லப்பட்ட இது இன்றைய நடமுறைக்குப் பொருந்துமா? இன்று மட்டுமல்ல, என்றென்றும் எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளகூடியவற்றையே நமது முன்னோர் சொல்லிச் சென்றனர்.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்...."
இது குரள்.

மயிலிறாகானாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றும்போது வண்டி பழுதாகிவிடும். அதன் பாரம் தாங்கும் பகுதி உடைந்து விடும் என்று வள்ளுவர் சொல்லியது பலவற்றுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்.

ஆக, இவ்வளவுதான் அளவு. அளவுக்கு மேல் போகும் போது பாரம் மட்டுமல்ல, எதுவும் நமக்கு பயன் தராது. சில நேரங்களில் அவை நமக்கு எதிராகவும்  மாறிவிடும் என்பது நமக்கு விளக்கப்பட்டு விட்டது.

தனிப்பட்ட வகையில் நம்முடைய.....  நமக்கு மட்டுமே உரிய அளவினை அடையாளம் காண்பதுதான் நமக்கு புரியாத புதிராக இருக்கிறது.

"ஹவ் மச் இஸ் டூ மச்?" என்று நகைத்தவர்கள் வாழ்வு இன்று எப்படியெப்படியோ மாறிவிட்டது.  அளவுக்கு மீறிய அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் விஷமாகிவிட்டது.

அவஸ்தையின் உச்சக்கட்டம், அளவை மீறுவதே.

 

Saturday 24 August 2013

தமிழ்ப்பட வரலாற்றின் பொற்காலம்...

தமிழ்ப்படங்களின் பொற்காலமாக பலரும் கருதுவது 1955லிருந்து 1970 வரை. அன்று வந்த படங்களின் கதைகளும் பாடல்களுமே பலவிதங்களில் புதுமைப்படுத்தப்பட்டு அதன்பின் புதுப்படங்களாக வெளிவரத்தொடங்கின. அப்படியே புத்தம் புது அசல் திரைப்படங்களாக வந்திருந்தாலும் அவை எண்ணிக்கையில் மிகச் சொற்பமாகவே இருக்கும். திரைப்படத்துறையின் ஆரம்பமாக இருந்தாலும் நல்ல கதைகளும், உணர்ச்சிபூர்வமான  நடிப்பும், மிகச் சிறந்த பாடல்களுமாக மக்களை மயக்கியது இந்த பதினைந்து ஆண்டுகள்தாம். ராஜா ராணி, இறையம்ச படங்கள் மட்டுமல்ல, சமூகப்படங்களாகவும் முத்திரைப் பதித்த காலம் அது.
 
ஆடல், பாடல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளையும் வஞ்சகமில்லாது வாரி வழங்கிய படங்கள் அவை.
 
 










 
மேலே உள்ள திரைப்படத் தொகுப்பு, விக்கிபீடியாவிலிருந்து.
 
 


Thursday 22 August 2013

ஷேக்ஸ்பியர்...

தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் போல காலம் கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கில இலக்கியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களாகும்.

ரோமியோ அன்ட் ஜூலியட், ஒத்தெல்லோ, ஹெம்லட், கிங் லியர், மெகாபெத், டெம்பஸ்ட்,  தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் , அஸ் யூ லைக், ட்வெல்த் நைட், ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்,  அந்தோனி கிளியோபாட்ரா,  தி டூ நோபிள் கின்ஸ்மென், 'பெரிகிள்ஸ்...பிரின்ஸ் ஆஃப் டைர்'  மற்றும் மச் அடு அபௌட்  நத்திங் ( இல்லாத ஒன்றுக்குப் பொல்லாத ஆர்ப்பாட்டம் ) போன்றவை காலம் உள்ளளவும் உயிரோடு வாழும் காவியங்களாகும். உண்மை நிகழ்வுகள் போலவும், நிஜ மாந்தர்கள் போலவும் தோன்றுபவைகளாகும். அதே நேரம் , கற்பனைக் கதாபாத்திரங்கள் போல இருந்தாலும்,  ஜூலியஸ் சீசர் போன்ற உண்மைக் கதாபாத்திரப் படைப்புக்களையும் அவர் படைத்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இனம் கடந்து, மொழி கடந்து பல நாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு  வந்த ஒரு சில காவியங்களில் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும் அடங்கும். மொத்தம் 38 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

ரோமியோ ஜூலியட் பற்றி தெரியாத காதலர்கள் இருக்க முடியாது. காதலின் எல்லை எது என்போர்க்கு, ஷேக்ஸ்பியரின் பதிலாக வந்தது ரோமியோ ஜூலியட். தமிழில் உதாரணமாக கொள்வதென்றால் "தேவதாஸ்" திரைப்படத்தை சொல்லலாம். ஆயினும், ரோமியோ ஜூலியட் தாக்கம் என்பது பல இன மக்களாலும் உணரப்பட்ட ஒன்றாகும். காதலில் வீர தீரச் செயல்களாக, காதலின் புனிதத்தை சொல்லியிருந்தார். ஒருவருக்காக மற்றவர் எதையும் தியாகம் செய்யும் நிலையைய்யும் அழகாக விளக்கி இருப்பார். ஒத்தெல்லோவின் முடிவும், ரோமியோ ஜூலியட்டின் முடிவும் அதிக சோகத்தை வழங்கிய நாடகங்களாக இன்றளவும் குறிப்பிடப்படுகின்றன. அதிலும், ஒதெல்லொவின் நாயகனாக ஒரு கறுப்பினத்தவரை உருவாக்கி இருந்தது பல விமர்சனங்களுக்கு அவரை இலக்காக்கி இருந்தது.

காதல் காவிய சகாப்தமாக கருதப்பட்ட இவர், நகைச்சுவை, சரித்திரம், சோகம்  என மூன்றிலும் பெயர் பதித்தவர். எனக்கு பிடித்த இவரின் பன்ச் வரிகள், "இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி"( டு பி ஒர் நொட் டு பி ) என்பதாகும்.

இவரது படைப்புக்களில் என்னை அதிகம் பாதித்தது  ஹெம்லட். எனது இடை நிலைப் பள்ளி காலத்தின் போது பாட புத்தகமாக வில்லியம் ஷேக்ஸ்பியரின்  14 நாடங்கள் இருந்தன. அதில் ஒன்று,   ஹெம்லட்.

ஹெம்லட், ஒரு அரச குமாரன். தன் தந்தையையின் காதில் விஷம் ஊற்றி கொன்றுவிட்டு தன் தாயை கவர்ந்துகொள்ளும் சிற்றப்பனை பழிவாங்கச் சொல்லி ஆவியாக வரும் தந்தையின் வேண்டுகோளை ஏற்று அது ஒன்றை மட்டுமே நினைவில் கொண்டு வாழ்ந்து மறையும் ஒரு வீரனின் கதை.

இக்கதையில் எனக்குப் பிடித்தது இறுதி காட்சிகளாகும்.   தனது காதலி ஒப்பீலியாவின் தந்தையாயிருந்தாலும்,தனது சிற்றப்பனோடு சேர்ந்து சதி செய்த மந்திரியைக் கொன்றுவிடும் ஹெம்லட் நாடு கடத்தப்படுகிறான். சிறிது காலம் சென்று நடு திரும்பும் ஹெம்லட், எதிரே ஒரு சவ ஊர்வலம் வருவதைப் பார்க்கிறான்.  அது தனது காதலி ஒப்பீலியாவின் இறுதி ஊர்வலம் என அறிந்ததும் கவலையும் அதிர்ச்சியும் ஒருங்கே அவனை வாட்டுகிறது.

புதைகுழியுனுள் குதித்து ஒப்பீலீயாவைக் கைகளில் ஏந்தி கதறுகிறான். அவன் பகை தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற சிற்றப்பன் மேலும், அவனுக்கு உதவியாயிருந்த ஒப்பீலியாவின் தந்தை மந்திரியின் மேலும் தான். அதே நேரம், அங்கு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒப்பீலியாவின் சகோதரன், தனது சகோதரி ஒப்பீலியாவும், தனது தந்தையும் இறப்பதற்கு காரணமான ஹேம்லட்டுடன் சண்டையிடுகிறான்.

சிற்றப்பனின் சூழ்ச்சியில் மந்திரி மகனின் வாளில் விஷம் பூசப் படுகிறது.  சிறிது பட்டாலும், ஹேம்லட் இறந்துவிடுவான் என திட்டமிடுகிறான் அரசனாக இருக்கும் சிற்றப்பன். அதே போல சண்டையில் மந்திரி மகனின் விஷம் தோய்ந்த வாள் அவனக் கீறுகிறது. ஆனால் தனது வாளை இழக்கும் ஹேம்லட், மந்திரி மகனின் வாளை பறித்து அவனையே குத்திவிடுகிறான்.

இதற்கிடையே, தனது மகன் வெற்றி பெற்றுவிட்டான் எனும் மகிழ்ச்சியில் அருகில் இருந்த மதுக்கோப்பையை எடுத்து அதில் இருந்த பானத்தை அருந்திவிடுகிறாள் அரசி. அது, 'ஹேம்லட் ஒரு வேளை ஜெயித்து வந்துவிட்டால், அவனுக்காக தயாரிக்கப்பட்ட விஷம் கலந்த பானம்.
திகைத்து நிற்கும் ஹேம்லட்டிடம் வாளில் விஷம் தோய்ந்திருந்ததையும், சிற்றப்பனின் சூழ்ச்சியையும் மரணப்படுக்கையில் சொல்லிவிடுகிறான் மந்திரி மகன்.  இதையறிந்த ஹேம்லட் மீண்டும் அந்த விஷம் தோய்ந்த வாளை எடுத்து தன் சிற்றப்பனைக் குத்திவிடுகிறான். அனைவரும் இறக்கிறார்கள்.

இதுவே ஹேம்லட்டின் கதை.

இதுபோல ஷேக்ஸ்பியரின் கதைகளில் சுவாரஸ்யம் குன்றாத காட்சியமைப்புக்கள்  அதிகம் இருப்பதைக் காணலாம்.
ஆங்கிலம் கற்றிருப்போருக்கு ஷெக்ஸ்பியர் புத்தகங்கள் சுலபத்தில் கிடைத்துவிடும். மொழிமாற்றம் கண்டு தமிழில் இப்புத்தகங்கள் வேண்டுவோர், தலை நகரில் இருக்கும் பெரிய புத்தகக் கடைகளில் தேடிப்பார்க்கலாம். இல்லையேல், தமிழ் நாட்டு புத்தக பிரசுரித்தாரிடம் நேரிடையாக தொடர்புகொண்டு தருவித்துக்கொள்ளலாம். உலகமயமாக்கலில் எளிமையாகிவிட்டது இது இப்போது.











Selingan...



இப்போ படத்தைப் போட்டு இடம் பிடித்து வைப்போம். 
அப்புறமாக பதிவெழுதிக்குவோம்...

சிலர்... பலர்... நாம்...

"எதடா வாழ்க்கை...?
இதுவா வாழ்க்கை....?
என்னடா வாழ்க்கை...?
எல்லாமே செயற்கை!!!"
....என எதிர்மறையாக பேசுவதால் எவ்வித நன்மையும் நமக்கு ஏற்படப் போவதில்லை. உபயோகப் படாத, நமது முன்னேற்றத்துக்கு எந்தவகையிலும் பயனற்ற ஒரு சிந்தனை நமக்குத் தேவையா? ஆனாலும், பலர் நம்மிடையே இப்படி பேசக் கேட்கிறோம்.

"என்ன சார் சொல்றது... நான் ஒண்ணு நினைச்சா, அது ஒண்ணு நடக்குது.  எல்லாம் விதி சார்.."
என்று சிலர் விதியின் மேல் பழியைப் போடுகிறார்கள்.  நினைத்தது நடக்கவில்லையானால் நினைத்ததில் தான் தவறு.  நடக்கவியலாதது எப்படி நடக்க முடியும்...? நடப்பதை அல்லவா நினைத்திருக்க வேண்டும்.  இங்கே நினைப்பதை சரிபடுத்திவிட்டால், நடப்பவை சரியாகி விடும்.

இன்னும் சிலர் கைகளில் கண்ணாடியுடன் அலைவார்கள், கண்களில் அல்ல. யார் எதைச் செய்தாலும் அதில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயிற்சிபெற்றவர்கள் போல் நடந்துகொள்வார்கள் இவர்கள். பொதுவாக மற்றவர் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். உற்று நோக்கினால், நமது உறவினர், நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களை அதிகம் காணலாம். தன் நிலையை உயர்த்திக்கொள்ளாது, பிறரின் வெற்றியில் மனப் புழுக்கம் கொள்ளுவார்கள்.
"அவனுக்கு உதவ ஆள் இருந்தார்கள், முன்னுக்கு வந்தான். எனக்கு யார் இருக்கிறா, உதவி செய்ய?" என தன்னைத் தானே தற்காத்து பேசி தங்களின் மந்தமான சிந்தனைகளை வெளிப்படுத்துவார்கள். நிஜத்தில் எவ்வளவு உதவி பெற்றாலும், அத்தனை உதவிகளும் கடலில் பெய்த மழைபோல பலனற்று போகுமே தவிர, இவர்கள் எந்த வகையிலும் மேல் எழுந்திருக்க மாட்டார்கள். ஆனால், 'இது தவறு...அது தவறு' என வாய்ச்சொல்லில் வீரர்களாக வலம் வருவார்கள்.

சிலரின் பேச்சில் ஏளனம் கலந்திருக்கும். கூர்மையான கத்தியை விட, இவர்கள் வார்த்தைகள் இன்னும் பயங்கர விபரீதத்தை உண்டுபண்ணும். எப்படியும்  வாழலாம் என நினைப்பவர்கள் இவர்கள். இவர்கள் சொல்கேட்டு இணைந்திருப்பதைத் தவிர வேறு எந்த எதிர் கருத்தும் இவர்களிடம் செல்லாது. 'எப்படியும் பேசலாம்' என்பதே இவர்களின் பண்பு. 'இப்படித்தான் பேசவேண்டும்' என நாம் உணர்த்தமுனையும் போது ஒரு பிரளயமே ஏற்பட்டுவிடும். அன்பான எண்ணமும், பண்பான வார்த்தைகளுமே நமது அடையாளம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிடுமூஞ்சி குணத்தினர் பலரை நாம் பார்த்திருப்போம். புன்னகை என்பது மருந்துக்கும் இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது.  ஒரு சில நேரங்களில், " அவனிடம் பார்த்து பேசுங்கள். அவன் சரியான சிடுமூஞ்சி" என பாதிக்கப்பட்ட சிலர் நம்மை எச்சரிப்பதும் உண்டு. அவ்வளவு புகழ் பெற்றுவிட்டார் அவர் என இதற்குப் பொருள். சில நாட்கள் மட்டுமில்லாமல், வாழ் நாள் முழுவதுமாக இந்தக் குணமுடனே சிலர் இருப்பது சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. பாவம் அவர்தம் குடும்பத்தினர். எப்படித்தான் தினமும் அவரோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்களோ என அவர்கள் மேல் நமக்கு பரிதாபமும் எழும். அருகில் சென்று அதுபற்றி கேட்டால், " அது பழகிப் போச்சுங்க...." என்பார்கள்.

எனக்குத் தெரிந்த சுவாமிஜி ஒருவர், இது அவர்களின் ஜாதக அமைப்பு என்றார். 'சிடுசிடு கடுகடு' என இருப்பது அவர்களின் பிறந்த நேர பலன்கள் என்றார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது இப்படி சிடுமூஞ்சி மனிதர்கள் செயலை ஜாதகத்துடன் சம்பந்தப்படுத்துவது. இதில் எவ்வளவு உண்மை மறைந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், எல்லோர் குணங்களையும் இப்படி ஜாதக, கிரக நிலைகளுடன் தொடர்பு படுத்திவிடலாமே....

நாம் கடந்து வந்த பாதையில் இன்னொரு வகையினரையும் பார்த்திருப்போம். எதைச் செய்தாலும், அதில் 'ஒரு பங்கு' மூளையைக்கூட உபயோகிக்காமல் செய்வார்கள். 'ஏதோ செய்தோம் நம் பங்குக்கு ...' என வாழ்ந்து கொண்டிருப்போர் அவர்கள். யோசித்து செய்யும் குணம் இவர்களிடம் இருக்காது. ஒரு சில செயல்களில் செய்தபின் வருந்தும் நிலையும் தோன்றும்.  ஆனால், அது தற்காலிகமே. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பழையபடி தங்களின் வழக்கமான வாழ்க்கையை தொடர்வார்கள். இப்படி நான் கண்டவர்களில் பலர் அதுபற்றிய எவ்வித வருத்தமும்  இன்றி மகிழ்வுடனே வாழ்கிறார்கள்.

மனிதர்கள் அனைவரும் சமமல்ல. இது நமக்குத் தெரியும்.   நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ஒருவர் இல்லாததை நாம் உணர்ந்து கொண்டால், அவர்பால் தோன்றும் பல எதிர்மறை எண்ணங்களை  துவக்கத்திலேயே தடுத்துவிடலாம். சிலருக்கு இயற்கையிலேயே எல்லாத் திறமைகளும் வந்துவிடுகிறது. சிலருக்கு வாழ்வின் அனுபவங்கள் அத்திறமைகளை அளிக்கின்றன. வேறு சிலர் வெறுமனே வாழ்ந்து மறைகிறார்கள். இதில் குறை சொல்ல ஒன்றுமில்லை. இந்தக் கலவைதான் உலகம் .

பெற்றெடுத்த சில மணி நேரத்தில் குழந்தையை வீதியில் வீசிச் செல்லும் பெற்றோர்களும் உண்டு. தங்கள் உயிருக்கும் மேலாய் பாதுகாத்து எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் பெற்றோரும் உண்டு. அதேபோல, காலமெல்லாம் கனிவுடன் பெற்றோரை போற்றிப் புகழும் பிள்ளைகளும் உண்டு,  அடித்தாலும் உதைத்தாலும், பெற்றபிள்ளையே கதியென காலத்தைக் கழிக்கும் பெற்றொரும் உண்டு.

இதில் சாந்தமிகு கருத்தொன்றும் உண்டு, எதிர்மறை குணமுடையோர்  எண்ணிக்கையில் குறைவு. ஆக, இன்னும் இவ்வுலகில் தெய்வத்தன்மை நின்று நிலை நாட்டுகிறது என துணிந்து கூறலாம்.




Wednesday 21 August 2013

உலக புகைப்பட நாள்...

அனைத்துலக புகைப்பட நாள் ஆகஸ்ட் மாதம் 19 தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. நம்மில் பலருக்கு அதைப்பற்றி தெரியாதிருக்கலாம். புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளோர் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படப் போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். தற்போது கைபேசிகளும் தரமான முறையில் படங்களை எடுக்கும் வசதிகளைக் கொண்டிருப்பதால், பலரும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஜனவரி 9, 1839ல் புகைப்படம் எடுக்கும் வசதியினை ஜோசெப் நைஸ்ப்ரோ மற்றும் லூயிஸ் டக்குரே எனும் பிரென்சுக்காரர்கள் கண்டுபிடித்தனர். அந்த கண்டுபிடிப்பினை 19.8.1839 அன்று பிரென்சு அரசாங்கம் "உலகிற்கு ஒரு இனாம்" என அறிமுகப்படுத்தியது. அந்த நாளை நினைவுபடுத்தும் நாளாக ஆகஸ்ட் 19 உலக புகைப்பட நாளாக நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு, புகைப்படங்களின் நினைவுகளில் மகிழ்கிறோம்.

"புகைப்படம் புகைப்படம்னு சொல்றாங்க..ஆனா எந்த படத்திலும் புகையையே காணோம் ", என சிலர் சொல்வது காதில் விழுகின்ற காரணத்தினால் அவர்களை திருப்திப்படுத்த இந்த 'புகை' படத்தை இங்கே தருகிறேன்.

இன்று பலவிதமான நினைவுகளை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். அவர்களோடு நாம் இருந்த நாட்களை நாம் நினைவு படுத்தி மகிழ்கிறோம். அதிகாரபூர்வமற்ற அனைத்து விசயங்களிலும் நாம் மகிழ்ச்சியான சம்பவங்களையும் இனிமையானவர்களையும் மட்டுமே புகைப்படமாக எடுத்து மகிழ்கிறோம். இழப்புக்களையும் மனதுக்கு வருத்தமளிக்கும் வேறு எதையும் பொதுவில் நாம் புகைப்படமாக எடுப்பதில்லை. ஆனால், புகைப்படக்கருவிகள் இல்லாத அந்த நாளும் இருந்திருக்கிறது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அக, முக்கிய நிகழ்வுகளை எப்படி நினைவில் கொள்ள வழி செய்திருப்பார்கள்...? அதை ஆராயும் போது, அன்று திறமையாக படம் வரையக்கூடிய பலர் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. நூறு விழுக்காடு அச்சு அசலாக இல்லாதிருப்பினும், சுமார் நிலையில் ஒரு புகைப்படக் கருவியின் வேலைகளை பலர் செய்து வந்திருக்கின்றனர் என்பதை படிக்கும்போது நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என யூகிக்க முடிகிறது. 

ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள உறவினர்களையும் நண்பர்களையும் நேரிடையாக பார்க்கும், அவர்களோடு உறவாடும் அதி நவீன நிலை வந்து விட்ட இப்போதும், புகைப்படங்கள் எடுத்து நம் இனிமை நினைவுகளை பத்திரப்படுத்தும் செயல்பாடு எல்லளவும் குறைந்ததாகக் காணோம்.

இதுவே புகைப்படக் கலையின் சிறப்பு. ஆல்பமாக கையில் வைத்து பார்க்காவிடினும், கணினியில் பல "ஃபோல்டர்களில்" நாம் அவற்றை சேமித்து வைத்திருக்கிறோம்.  

சில நேரங்களில் சில நபர்களால் சில அத்துமீறல்கள் ஆங்காங்கே நடப்பதைக் கேள்விப்படுகிறோம். ஆனால், எதில் இல்லை இது போன்ற  எதிர்மறை செயல்கள்? 

புகைப்படக்கலைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். அதுபோல், வார்த்தைகள் இன்றி போகும் சூழ் நிலைகளின் போது புகைப்படங்களே அரும் பெரும் இலக்கியங்களாக ஆகியிருக்கின்றன.

1974ம் ஆண்டு ஹெலிஃபெக்ஸ் கேமராவில் புகைப்படங்கள் எடுக்கப் பழகியவன் நான். அதன் விலை அன்று வெறும் 14 ரிங்கிட்தான். அதன்பின் பல கேமராக்களை  வாங்கி உபயோகித்து விட்டேன். திருமணம், பிறந்த நாள், காது குத்து, வெளியூர்ப் பயணங்கள் என பலவற்றையும் படமெடுத்தாகிவிட்டது. இப்போது எனக்குப் பிடித்தது, இரட்டை வேடங்களில் மற்றவர்களை படமெடுப்பதுதான். அதுபோன்று வேறெங்கும் இல்லாததால் அதில் ஒரு மகிழ்ச்சி எனக்கு. கடந்த இரண்டு வருடங்களில், அப்படி இரட்டைப் படமெடுப்பது பற்றி என்னிடம் கற்றுக்கொண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.


Monday 19 August 2013

கோழி கூவுது ...


கோழி வளர்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...?

 நான் ஈமு கோழி எனும் பண்ணைக் கோழிகளைச் சொல்லவில்லை. கம்பத்துக் கோழி என சொல்வோமே அவற்றைச் சொல்கிறேன்.

கோழி வளர்ப்பு என்பது நமது தோட்டபுறங்களில் ஒரு சாதாரண ஒன்றாக இருந்தது. பொதுவில் பலரும் சொந்த உபயோகத்துக்குத்தான் வளர்த்து வந்தோம். அவற்றுக்கு அளித்த உணவுகளில் எவ்வித கலப்படமும் நச்சுத்தன்மையும் இருந்ததில்லை. கோழித்தீனி என உடைபட்ட சோளத்தை அவற்றுக்கு உணவாக இட்டு வளர்த்து வந்தது இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. அதன் முட்டைகளும் நமக்கு இழந்த பலத்தை மீட்டுத் தரும் சத்தானதாக இருந்தது. உடல் நோயுற்ற போது  நமக்கு நல்லதொரு மருந்தாக இருந்தது இந்த கம்பத்துக் கோழிகள் தான். வீட்டில் யாருக்காவது நோய் எனக் கண்டால் உடனே அன்று கோழி சூப் இருக்கும். அதென்னமோ கோழி சூப் உட்கொண்டதும் அந்த நோயில் இருந்து நிவாரணமும் கிடைத்துவிடும். அன்றைய கோழிகள் நமக்கு ஆரோக்கியத்துக்காக வளர்க்கப்பட்டன.

ருசியான சமையலாக கோழி அன்று நமக்குதவியது. அப்படி ஒரு சுவை அதில். கோழிக்கறி என்றால் மற்ற இனத்தவரும் ருசித்துச் சாப்பிடும் உணவாக நமது தாய்க்குல சமையல் இருந்தது.

தலைகீழான நிலை இன்று. கோழியின் ஆயுள் வெறும் 30லிருந்து 45 நாட்களே இப்போது. அதற்குள் கோழியின் எடை 2 முதல் 3 கிலோவிற்கு வந்துவிடும் படி ஊசிகள் மூலம் அதற்கேற்றபடியான மருந்துகள் புகுத்தப்படுகின்றன. 45 நாட்களுக்குப் பின் பண்ணையில் இருக்கும் ஒவ்வொரு கோழியும் நஷ்டத்தை தருவிக்கும் என பண்ணை முதலாளிகள் குறிப்பிடுகின்றனர்.

கம்பத்துக்கோழிகள் மிகவும் குறைந்து விட்ட நிலையில், நம்முடைய அன்றாட தேவைக்கு நாம் இப்போது இந்த பண்ணைக்கோழிகளையே நம்பி இருக்கிறோம். உடல் பருக்கும், எடை கூடும் மருந்து செலுத்தப்பட்ட இவ்வகை கோழிகளே வாராவாரமும் நம் இல்லங்களில் சிறப்புச் சமையலாக அலங்கரிக்கிறது உணவு மேஜைகளில்.

அட இதுகூட பரவாலங்க...தோல் நீக்கிவிட்டு, கோழியின் கழுத்து, கால்கள், இறக்கை என ஒதுக்கிவிட்டு சமைக்கலாம். இந்த 'கே எஃப் சீ', 'மெக்டோனல்ட்', 'ஏபிசி ஃப்ரை' என அதிக கொழுப்புடைய கோழிகளையும் நாம் நமது பிள்ளைகளுக்கு வாங்கித் தருகிறோம் பாருங்க, அதுதான் இப்போ பல நோய்களுக்கும் காரணமாகிறது.

பாதி ருசி +  பாதி எண்ணெய் = மொத்தம் கூட்டினால்..அதிகப்படியானகொழுப்பு.

அப்படி என்னதான் இருக்கிறதோ, இன்றைய இளையோர் அதில் பைத்தியமாகி ஐக்கியமாகிவிடுகிறார்கள். இதுபோன்ற மேற்கத்திய உணவு வகைகளை நிறுத்தினாலே நம்முடைய உடல் ஆரோக்கியம் தானே சிறந்துவிடும்.

மேலே : முகநூலில் இருந்து ஒரு ஃபோட்டோ

Friday 16 August 2013

படித்ததில் பிடித்தது... மாமிச உணவு சரிதானா?

மாமிசம் சாப்பிடுவது பற்றி சாத்திரங்கள் என்ன சொல்கின்றன? 

சோ : இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். முன்பு – அதாவது நீண்ட, நெடுங்காலத்திற்கு முன்பு – எல்லோரும் மாமிச உணவை ஏற்றார்கள் – பிராமணர்கள் உட்பட. அது சர்வ சாதாரணமாக நடந்து வந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு நிகழ்ச்சியின் காரணமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது பற்றி, மஹாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ‘இனி பிராமணன் மாமிசம் சாப்பிடக் கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திய நிகழ்ச்சி அது. ‘இனி சாப்பிடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளதால், அதுவரை சாப்பிட்டார்கள் என்றுதான் ஆகிறது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி மஹாபாரதம் கூறுவதைப் பார்ப்போம்.

இல்வலன், வாதாபி என்ற இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் பலம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது என்பது, மிக மிகக் கடினம். நமது புராணங்கள், இதிஹாஸங்கள் – இவை எல்லாவற்றிலுமே ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. அசுரர்கள், அரக்கர்கள் ஆகியோர் கொடூரமானவர்களாக வர்ணிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் அவர்கள் பலமற்றவர்களாகவோ, கோழைகளாகவோ சித்தரிக்கப்படவில்லை; மிகவும் சக்தி படைத்தவர்களாக அவர்கள் கூறப்பட்டிருக்கிறார்கள்; அவர்களில் பலர் நன்கு படித்தவர்கள்; சாத்திரம் தெரிந்தவர்கள். அவர்களை வெல்வது கடினம் என்ற நிலைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் மாயவேலைகளில் நிபுணர்கள். நினைத்த உருவத்தை எடுப்பார்கள். அது தவிர, எந்த நெறிமுறைக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால், அவர்களுடைய தாக்குதல்கள், விதிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல் நடத்தப்பட்டன. அவர்களை எதிர்த்த நல்ல சக்திகளோ, பாவ புண்ணியத்திற்கு அஞ்சியும், நியாய அநியாயம் பார்த்தும் செயல்பட வேண்டியிருந்தது. இதனால் தீய சக்திகளின் கை ஓங்கி இருந்தது.

அதனால்தான், அந்தத் தீய சக்திகளை அழிப்பது கடினமாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில், கடவுளே ஒரு அவதாரம் எடுத்து வந்து, சில தீய சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டியிருந்தது.

இந்த இல்வலனும், வாதாபியும் பலரைக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அவர்கள் கையாண்ட வழிகளில் ஒன்று – விருந்து வைப்பது. ஒருவரை அழைத்து விருந்து வைப்பார்கள்; வாதாபியை வெட்டி, மாமிச உணவாகச் சமைத்து, விருந்தாளிக்கு இல்வலன் படைப்பான். விருந்தாளி சாப்பிட்டவுடன், ‘வாதாபி! வெளியே வா!’ என்பான் இல்வலன்.

உடனே விருந்துண்டவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வாதாபி வெளியே வருவான். விருந்துண்டவர், வயிறு கிழிபட்டு உயிர் துறப்பார். இப்படித் தங்களுக்கு வேண்டாதவர்கள் பலரை, மிகச் சுலபமாக அந்த அசுர சகோதரர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

இதே வழியில் அகஸ்திய முனிவரைக் கொன்று விடத் திட்டமிட்ட அந்தச் சகோதரர்கள், அவரை விருந்துக்கு அழைத்தனர். வழக்கம் போல, வாதாபியை வெட்டி அவருக்கு விருந்து படைத்தான் இல்வலன். அவருடைய தவ வலிமையின் முன்பு, அந்த அசுரர்களின் மாயாஜாலம் எடுபடாததால், சாப்பிட்ட உடனேயே, நடந்தது என்ன என்பது அகஸ்தியருக்குப் புரிந்து விட்டது.அவர் உடனே ‘வாதாபி! ஜீர்ணோ பவ!’ என்றார். அதாவது ‘வாதாபி! நீ ஜீர்ணம் ஆகிவிடுவாயாக!’ என்றார் அகஸ்தியர். அவ்வளவுதான். அவன் ஜீர்ணமாகி விட்டான். இல்வலன் வழக்கம் போல, ‘வாதாபி! வெளியே வா!’ என்று உரக்கக் கூப்பிட்டான். ஆனால், எப்படி வருவான் வாதாபி? அவன்தான் ஜீர்ணமாகி விட்டானே! இல்வலன் பல முறை ‘வாதாபி! வெளியே வா!’ என்று கதறியும், வாதாபி வரவில்லை. அவன் அத்தியாயம் முடிந்தது. பின்பு இல்வலன் வீழ்த்தப்பட்டான்.அன்று இம்மாதிரி நடந்தவுடன் அகஸ்தியர் சொன்னார்: ‘இந்த நிலை ஏன் வந்தது? நான் மாமிசம் சாப்பிட்டதால்தான், இப்படி நேர்ந்தது. அதனால் இனி ஒரு விதி செய்கிறேன். இனி பிராமணர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது; மதுவையும் தொடக் கூடாது!’ என்றார்.இப்படி அகஸ்திய முனிவர், ஒரு விதிமுறையை ஏற்படுத்தினார். அவருடைய ஆணை அது. அதிலிருந்துதான் பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுவது கிடையாது என்ற பழக்கம் வந்திருக்கிறது.

ஆனால், இன்றைக்கு உள்ளவர்கள், அகஸ்தியருக்கு முந்தைய காலத்திற்குத் திரும்பப் போய் விட்டார்கள்! இன்று நாம் எல்லாவற்றிலும் பின்னோக்கித்தானே போகிறோம்! அப்படி இதிலும் பின்னோக்கிச் சென்று, அகஸ்தியருக்கு முன்பு இருந்த பழக்கத்தை இன்று சிலர் ஏற்றிருக்கிறார்கள்.


தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

அறிவியல் வளர்ச்சி...

தகவல் சாதனங்களின் வளர்ச்சி நமது கலாச்சாரத்தின் மான்பையும் மதிப்பையும் கெடுத்துக்கொண்டு வருகிறது இன்றைய அதி நவீன சூழ்நிலைகளில்.

அதில் உள்ள நன்மைகளை அதிகரித்துக்கொள்வதை விட அனாகரிகமான செயல்களை சித்தரிப்பனவற்றில் மதி மயங்கி தங்களின் காலத்தையும் நேரத்தையும், ஏன் தங்களின் எதிர்காலத்தையுமே அழித்துக்கொள்கின்றனர் இன்றைய இளம் பருவத்தினர்.

ஊடகங்களின் தாக்கம் ஒரு புறம், குடும்பத்தினர் தரும் அதிக சுதந்திரம் மறுபுறம்.  இவற்றுக்கிடையே இறை நம்பிக்கை மங்கிப்போய்க் கொண்டிருப்பது பலருக்கு இன்னும் புரியாமலே இருக்கிறது.

முகநூல் பற்றி நாம் ஏற்கனவே இங்கு சொல்லி இருக்கிறோம். அதில் நன்மைகளை விட ஆயிரம் மடங்கு தீமைகளே அதிகம் என பலரும் சொல்லி வந்தாலும், இளையோர் என்னவோ தங்கள் காதுகளில் அவை விழவில்லை என்பது போலவே நடந்து கொள்கின்றனர். அதுவும், தனியாக விடப்படும் போது, தங்களின் உடல் அழகினை ஊராருக்கும் காட்டத் துணிகிறார்கள், முகநூலில் அதுபோன்ற படங்களை பதிவிட்டு.

அறிந்தும் தெரிந்தும் தான் இப்படி செய்கிறார்களா என எண்ணி முடிவெடுக்கும் கால கட்டத்திற்குள் அதன் தாக்கமும் பாதிப்பும் கட்டுக்கடங்காமல் போய்விடுகின்றது. பல இளையோரின் வாழ்வு பாழ்பட முகநூல் ஒரு முக்கிய காரணம் என துணிந்து கூறலாம். இருந்தும் இந்த சீர்கேடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

செயற்கை மழை 1960ம் ஆண்டுகளில் பெரும் பிரபலமான ஒன்றாக இருந்தது. உப்புத் துகள்களை பனிபோல மேகங்களிடயே தூவிட, அதன் குளிர்ச்சியினால் பெய்த மழையினை செயற்கை மழையென பெருமை பட்டுக்கொண்டோம் அன்று.

இன்றைய நிலை வேறு. காமா கதிர்களிலிருந்து நானோ  நுண்ணணுக்க முறை கூட வர வர பழையதாகிவிட்டது. அறிவியல் என்பது காலத்துக்குக் காலம் மாற்றங்களோடு வளர்ந்து கொண்டுபோகும் ஒன்றென்பது விஞ்ஞானிகளின் கூற்று. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

அறிவியலின் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் உயிர் காக்கும் தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து வருகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த காலங்களில் பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருந்திருப்பதற்கான அதிர்ச்சி தகவலின்படி, கோடிக்கணக்கான மக்கள்  பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் தந்தது.

ஆயினும் 2006-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொண்டு பல உயிர்களைக் காக்கும் யுக்திகளை நாம் பெற்றுவிட்டோம்.

இதற்கு, கதிரியக்கக்கரிம ஆய்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை துள்ளியமாக அறிந்து, இனி எப்படி அதுபோன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பனவற்றை அறிவியல்தான் நமக்குச் சொல்லித்தருகிறது.

ஆனால், இந்த அறிவியல் சாதனைகள் ஒரு தனி நபர்  முன்னேற்றத்துக்கு எப்படி உதவுகின்றன....?

ஒரு நாடு மற்ற நாட்டுக்கு இடும் சவால், தனது விஞ்ஞானிகளையும் அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புக்களையும் பறைசாற்றிக்கொள்வதே.
 இதனால் ஒரு நாட்டின் நன்மதிப்பு கூடுகிறது. தற்காப்புக்கென பல நவீன ஆயுதங்கள், வெளி உலக தொடர்புக்கான ஆரய்ச்சிகள், நோய்களை முன்கூட்டியே அறியும் திறன் போன்ற செயல்கள் நாட்டின் அறிவியல் வளர்சியின் அளவுகோல்.

ஆயினும் பலவித புதுமையான கண்டுபிடிப்புக்களின் வழி நாடு சிறக்குமே தவிர, நம் குடும்பமும் சமூகமும் சிறக்க இது போன்ற கண்டுபிடிப்புக்கள் காரணமாக இருக்க முடியாது. இவை நம் வாழ்வுக்கு ஒத்தாசையாக வருவனவே.

அப்படியானால், அறிவியல் வளர்ச்சி நமக்கு பாதகமானதா?

சரியாக, முறையான வகையில் பயன் படுத்தும் நெறிகளை மீறிடும் போது, அவை ஆக்க சக்தியாக முடியாது....அழிக்கும் சக்தியே.

முந்தய காலத்தில் தகவல் பரிமாற்றம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது. நாட்டு மக்கள் எதையெல்லாம் கேட்கவேண்டும் என செய்திகளை பிரித்து மக்களுக்குச் சென்றடைய அரசாங்கம் தகவல் துறையின் மூலம் ஏற்பாடு செய்திருந்தது.

பத்திரிக்கைகள் படிப்போரும் மிகக் முறைவு. வானொலியில் வெளிவருவதை கவனிக்க ஒரு குழுவும் இருந்தது. ஆக, உலகில் வேறு எங்கு தவறான செய்கைகள் இருந்தாலும் அவை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வருவதை தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடிந்தது.

அறிவியல் வளர்ச்சி எனும் பார்வையில் தொடர்புத்துறை முன்னேற்றம் அடைந்து விட்ட இந்நாட்களில், நல்லதை விட தீயன பற்றிய செய்திகளை தடுக்கும் சந்தர்ப்பங்கள் இன்று அரசாங்கத்துக்கு கூட இல்லை எனும் நிலையாகிவிட்டது.  இதைத்தான் நாம் கவனமுடன் கையாளவேண்டும் என்கிறோம்.

நமது இளைஞர்கள் மிக மிக விழிப்புடன்  செயல் படக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகிவிட்டது.  புதுமையை விளங்கிக் கொள்ளுதலில்  தவறு நேரும்போது அது அவர்களின் வாழ்க்கையே பாதிக்கிறது.

நம் மலேசிய நாட்டில் தினமும் 18 வயதுக்கும் குறைவானோர் காணாமல் போகும் எண்ணிக்கை 15 ஆகும். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 6. சமூக அமைப்புக்கள் இணையத்தையும், தனிப்பட்டவரின் ஒழுக்க நெறிகளையுமே இங்கு முன் வைக்கின்றன.  கற்கும் வயதில் நம் இளைஞர்கள் கத்தியைத் தூக்குவது அதிரும் வகையில் பெருகி வருகிறது.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி என பலரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். உடனடியாக நம் நினைவுக்கு வருவது இறை நம்பிக்கை மட்டுமே. மற்ற மாற்றங்கள் பின்னர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஆயினும், இன்றே ஏதாவதொரு விழிப்பு நிலையை நாம் இளையோருக்கு காட்டவேண்டியதிருப்பதால் இறை நம்பிக்கையைத் தவிர உடனடி தீர்வாக நமக்கு வருவது வேறொன்றும் இல்லை.

எந்நிலையில், யாருடன் இருந்தாலும் அல்லது யாருடனும் இல்லாது தனித்திருந்தாலும், ஒருவரை ஒழுக்கமுடன் வழி நடத்திச் செல்வது இறையருளே. அன்று அதன் அடிப்படை நம் சமூக மக்களின் ஒவ்வொரு குடும்பங்களிலும் இருந்தது. தொன்றுதொட்டு, குடும்பம் குடும்பமாக, வழி வழியாக இறைவனை வணங்கி வாழும்  நேரான  சிந்தனை நிலை அனைவருக்கும் இருந்தது. மொத்த மக்களில் தவறு செய்வோர் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை என்றே படித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, அன்று இருந்தோரும் , வெளியிடப்பட்ட புத்தகங்களும் நல்லவற்றையே எடுத்துச்சொல்லி வந்தன. அதனால் நல்லதை பின்பற்றுவோர் குறைவில்லாமல் இருந்தனர்.

தற்போதைய சமூக நிலை மாற்றங்கள் எவ்வித நன்மைகளும் செய்வதாயில்லை.

பேய் இருப்பதாகவும், அதன் சேட்டைகளை அடக்கியாள்வது எப்படி என்றும் புத்தகங்கள் வெளிவருகின்றன தற்போது.   சினிமா, தொலைக்காட்சி, யூ டியூப்  என மிக எளிதில் மக்களுக்கு கிட்டிவிடுகிறது. அதில் உள்ள விரசம் அதிகம் விலைபோகின்றது.  அதன் தாக்கம் மக்களை சீரழிக்கிறது.  சாதுக்களின் கருத்துக்களை பிழை  எனச் சொல்வோரும் வந்துவிட்டனர், தானே கடவுள் எனச் சொல்லிக் கொள்ளும் குருமார்களும் மலிவாக காணப்படுகின்றனர் எல்லா ஊர்களிலும்.  சமயத்தினை போதிக்கத்தான் குருமார்கள் எனும் நிலை மறைந்து, சில குருக்கள் தாங்களே கடவுள் என சொல்லிக்கொள்ளும் அவல நிலை இப்போது நம் கண் முன்னே நடக்கின்றது. நமது திருக்குறளை குறை சொல்வோரும், காந்தியடிகளின் கொள்கைகளே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என வாதிடுவோரும்கூட மலிந்து விட்டனர்.

இவை நமக்கு எதை காட்டுகின்றது...?
அறிவியல் வளர்ச்சி என நாம் பின்பற்றும் அதிக சுதந்திரத்தையே.

கண்டுபிடிப்புகள் இயந்திரங்களாகவோ, தொடர்புத்துறை நுணுக்கங்கங்களாகவோ இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆயினும், செயல்படுத்தப்படும்போது அது நமது ஒழுக்க நிலையை அசைத்துப்பார்த்தால் அந்த வளர்ச்சி பாதகத்தையே செய்யும்.

சவாலான பல சூழ்நிலைகளில் இன்றைய இளைஞர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதனால், அவர்களாகவே திருந்தி வெளிவராவிடில் மற்றவர்  உதவி என்பது குறிப்பிடும்படி எங்கிருந்தும் வரப்போவதில்லை என்பது இப்போது நம் கண் முன்னே காட்சியாக தெரிகிறது. அனைவரும் சுயநலத்திலேயே நாட்டமுடன் செயல்படுவதால், இளையோருக்கான உதவிகள் அவர்களைத் தேடி வரப்போவதில்லை. இது நிச்சயம்.

தாங்களே தங்களை உயர்த்திக்கொண்டால்தான் உண்டு. அதில் ஒன்று தான், கணினி மற்றும் கைபேசி தொடர்பான ஒழுக்க நிலை.... தவறெனப்படுவதை தவிர்க்கும் மனப்பக்குவம்.

இதில் பெற்றோர்களின் பங்கும் நிறையவே இருக்கிறது. பிள்ளைகள் கேட்கிறார்களே என புத்தம் புது மோடல்களில் கைபேசிகளை வாங்கித் தருகிறார்கள். பலருக்கு அவற்றின் விலை பற்றிய கவலையே இல்லை. அப்படி வாங்கித்தரும் பெற்றோர் அவ்வப்போது பிள்ளைகளின் கைபேசி 'மெமரி கார்டு'களை வாங்கி திடீர் பரிசோதனை செய்தாலே இன்றைய இளையோரின் அவல நிலை தெரியத்தொடங்கி விடும்.

ஆகவேதான் சொல்கிறோம், அறிவியல் வளர்ச்சி சில நேரங்களில் எதிர்மாறான அசம்பாவிதங்களுக்கும் காரணமாகிறது என்று.

Thursday 15 August 2013

அசைவ உணவு ஏன் பலருக்கும் பிடிக்கிறது?

இன்றைய உலகில் காய்கறி சாப்பிடுவோரை விட மாமிச உணவினை விரும்புவோரே அதிகமாக இருப்பது போல ஒரு தோற்றம் தெரிகிறது. இது உண்மைதானா? அப்படி உண்மையானால்,  மாமிச உணவு ஏன் பலருக்கும் பிடிக்கிறது?

ஆன்மீகத்தில் தாவர உணவுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் போது, நம்மவர்களில் பலர் இன்னும் மாமிச உணவின் மேல் பற்று கொண்டிருப்பதன் நோக்கம் என்ன...? அறியாமையா அல்லது அதன் சுவையை தவிர்க்க முடியாத நிலையா?

எங்கே பிராமணன் எனும் தொலைக்காட்சித் தொடரில் புகழ்பெற்ற நடிகரும், துக்ளக் ஆசிரியருமான திரு சோ என்ன சொல்கிறார் என்பதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.






மரக்கலங்கள்...


சாண்டில்யன் அவர்களின் 'கடல்புறா'  நாவலின் மூன்று பகுதிகளையும் படித்து முடித்தப்பின் கடலில் பயணிக்கும் மரக்கலங்களின் மேல் ஒரு வித மோகம் ஏற்பட்டது எனக்கு. திரையிலோ, தொலைக்காட்சித் தொடரிலோ அல்லது புத்தகங்களில் இடம்பெறும் புகைப்படங்களிலோ மனம் லயித்துவிடும். அந்த ஒரு தாக்கத்தை "கடல்புறா" எனக்குத் தந்திருந்தது 1980களில்.

அன்று போர் புரியவும், வணிகம் தொடர்பான வெளி நாட்டுப்பயணங்களுக்கும் மரக்கலங்களே உதவி இருக்கின்றன. அதன் பலனாக பெரும் நகரங்கள் பலவும் ஆற்றோரமோ அல்லது கடல் சார்ந்த பகுதிகளிலோதான் இருந்திருக்கின்றன. இந்துமாக் கடலில் ஒரு காலத்தில் தமிழர்களின் மரக்கலங்களே கோலோட்சிவந்திருக்கின்றன என்பதனை படிக்கும் போது நமக்குள் மகிழ்ச்சி பெருகுகிறது. நமது முன்னோர்களின் கட்டடக்கலையின் திறமைகளை போற்றிப்புகழும் அதே நேரம் அவர்களின் மரக்கலங்கள் இந்தியக் கடலில் சாகசம் புரிந்து வந்தது பெருமை கொள்ள வைக்கிறது.


Wednesday 14 August 2013

சொன்னார்கள் மற்றவர்கள்...2

படித்ததில் பிடித்த, வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்களை மற்றவர்கள் சொல்லும் போது, அவற்றை படித்துவிட்டு அப்படியே விட்டுவிட முடியவில்லை. இந்த வலைப்பூவின் வருகையாளர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இங்கே அவை மீண்டும் பதிவிடப்படுகின்றன.

காப்பி அடிப்பது நமது நோக்கமல்ல. ஆயினும் வாழ்க்கையே காப்பி அடிக்கும் செயல்தானே.  நல்லவற்றை காப்பி அடிப்போம். நல்லபடி வாழ்வோம்.

 



Tuesday 13 August 2013

கதை சொல்கிறோமா கதை விடுகிறோமா?


தோல்வி...

தோல்வியால் துவண்டு விடுவது இயற்கை. ஆனால் சற்று ஆழமாக சிந்திக்கும் போது, அந்தத் தோல்வியில் ஒரு சிறு பகுதி மட்டுமே "தோல்விக்கான" காரணமாக இருப்பதைக் காணலாம். 

அந்த சிறு விசயத்தினால்  நாம் தோல்வியடைந்து விட்டோம் என நமக்கு நாமே சொல்லிக்கொண்டு தவிக்கிறோம்.  மீதமுள்ள பெரும் பகுதியில் நாம் சாதித்த பல நம் கண்களுக்கு தெரிவதில்லை. இலைமறைக் காயாய் முன்னுக்கு வராமல் ஒளிந்து கொண்டுவிடுகின்றது.

அது தோல்வி என நாம் நினைப்பதாலேயே அது தோல்வி ஆகிறது. வெற்றியடவதற்கான ஒரு முயற்சி என நாம் நினைக்கத் தொடங்கினால் நமக்கு அது ஒரு பெரிய திருப்பமாக தோன்றத் தொடங்கும்.  நாம் தவற விட்டதை மீண்டும் கண்டுகொள்ள வழிகள் பல பிறக்கும்.

வாழ்வில் ஜெயித்தவர்களாக நாம் கருதும் பலர் பல முறை தோற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். அப்படி இருக்க ஒரு தோல்வியால் துவண்டு போய் உலகமே இருண்டுவிட்டதாக எண்ணிக்கொள்வது சரிதானா? அடுத்தது என்ன என்பதே நம்மை தெளிந்த சிந்தனையாளராக அடையாளம் காட்டும் ஒன்றாகும்.

பெற்றோர் நமது பொக்கிஷம்...

நமது தாய் தந்தையரின் அருமை பெருமை எல்லாம் நாம் வளரும் போது நமக்குத் தெரிவதில்லை. நமது பிள்ளைகளை வளர்க்கும் போது பலருக்கு புரியத் தொடங்குகிறது.

ஆயினும் பாவம், ஒரு சிலருக்கு சாகும்வரை விளங்காத ஒன்றாகவே போய்விடுகிறது, நமது குடும்ப தெய்வங்களாம் பெற்றோரைப் பற்றி.

அவர்களை அலட்சியம் செய்வதிலும் உதாசீனப்படுத்துவதிலும் இந்த உண்மை வெளிப்படுகிறது. பெற்ற பிள்ளைகள் மதிக்காத போது மற்றொரு குடும்பத்திலிருந்து வருவோர் மதிப்பளித்து கௌரவிப்பர் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

பாவத்தைக் கட்டிக் கொள்வதென்பது இதுதானோ...?

பெற்றோர் நமது பொக்கிஷம்...அவர்களை பத்திரப்படுத்தி, பாதுகாப்போம். வாழையடி வாழையாய் குலம் தளைக்க  அதுவே சிறந்த வழி.

Wednesday 7 August 2013

நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள்....

ஹரி ராயா கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய நோன்புத் திருநாள் வாழ்த்துக்கள்....


&


செம்பருத்தி...

 நமது நாட்டின் தேசிய மலராம் செம்பருத்தியின் சில வகைகளை இங்கே பார்க்கலாம்.











செம்பருத்தியப்பற்றிய பதிவு முன்பே நமது வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆதலால் சில புதுப்படங்கள் மட்டும் இங்கே...

குமுதம் அட்டைப்படங்கள் - ஜூலை 2013






Lest have some colours in our life. Kumudam provides you colours and coverages that will keep you going. Get rid of your boredom by being a kumudam reader...