Sunday 3 September 2017

தடைகளும் வாழ்க்கையில் படிக்கல்லப்பா....

அனிதா என்கிற மாணவி தற்கொலை புரிந்துகொண்டு உயிர் விட்ட சோகம் அதிரடி செய்திகளாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், புதிதாக வெடிக்கும் கிளர்ச்சிகள் நமக்கு வெறுப்பை தருகிறது.
அவர் சிறந்த மாணவி.... ஏற்றுக்கொள்கிறோம்.
அவர் மருத்துவ படிப்புக்கு ஏங்கினார், ஏதோ ஒரு தடைக்கல் அவர்முன் விழுந்து அவரது ஆவலை கலைத்துவிட்டது .... சரி, விளங்குகிறது.
அதற்கு தீர்வு உயிர் துறப்பா?
இதுதான் எனக்கு விளங்கவில்லை.
மலேசிய இந்திய மாணவர்களில் அனிதாவைப் போல எல்லா பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற எத்தனையோ மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பிய மருத்துவ படிப்பு பல காலமாக மறுக்கப்பட்டு வருகிறது இங்கு.
வருந்துகிறோம், வேதனைப்படுகிறோம்...
சில வேளைகளில் வெகுண்டெழுந்து உணர்ச்சி பூர்வமாக விவாதிக்கிறோம். ஆனாலும், யாரும் உயிர் துறப்பது பற்றி எண்ணியதில்லை.
சிறந்தது கிடைக்கா நிலையில், அடுத்ததை சிறந்ததாக்கிக் கொள். இதுதான் எங்கள் தாரக மந்திரம். அதற்காக, எங்களின் நியாயமான போராட்டத்தை கைவிடவில்லை. அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மருத்துவப்படிப்பு கிடைக்கவில்லையே இனி எதற்கு இந்த உயிர் என நினைத்திருந்தால், மலேசிய மாணவர்கள் வருடா வருடம் பலர் மேலே போய்க்கொண்டிருப்பர்.
உண்மையில் அடுத்த நிலையிலும் சாதனைகளை செய்வோர் ஏராளமானோர். மனத்திடத்துடன் போராடி, தடைகளை உதறி வெற்றிப்படிகளில் தொடர்பவர்களே பாராட்டுக்குரியவர்கள்.
ஆனால், தற்கொலை என்பதை பெருமைப்படுத்தி தமிழ் நாட்டில் பலரும் பாடுவதை கேட்க சகிக்கவில்லை. எம்பிபிஎஸ் படிக்க நினைத்த அந்த சகோதரிக்கு, பாரதியார் பற்றி தெரிந்திருக்கவில்லையே....?
இறைவன் கொடுத்த உயிரை இப்படி அல்ப காரணத்துக்காக போக்குவது மஹா பாவம். ஆத்ம உலகில் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ, இந்த முடிவினால்.....
ஒன்றைச் சொல்வேன் நான்....
இனி வரும் காலங்களிலாவது, 'தோல்விகளை தாங்கிக்கொள்வது எப்படி' எனும் இன்னுமொரு பாடத்தை கல்வித்துறை தங்களது கற்றல் கற்பித்தலில் இணைத்துக்கொள்வது நல்லது.
அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.