Thursday 30 January 2014

31.9.2009 நாகேஷ் நினைவு நாள்.


தமிழ்த்திரையில் நகைச்சுவை என வரும்போது நமக்கு உடனே நினைவுக்கு வருபவர், திரு நாகேஷ் அவர்கள். நாகேஷ், ஒரு அலாதியான நடிகர்... அவரின் நடிப்பு பல படங்களில் பிரகாசித்தது. "அன்பே வா", "எங்க வீட்டு பிள்ளை" போன்றவை இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன... அதே போல, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் படங்களில் பிரமாதப்படுத்தினார். சோ, தேங்காய் சீனிவாசன் மற்றும் தங்கவேலு போன்ற சக நகைச்சுவைக் கலைஞர்களுடன் இணைந்த படங்கள் அவரின் நடிப்பினை மக்கள் மனங்களில் என்றென்றும் நிறுத்தி வைக்கும்.

நாளை அவரின் நினைவு நாள். நம்மை சிரிக்க வைத்த அந்த சாதனையாளரை நினைத்துப்பார்க்கிறேன், முகத்தில் ஒரு புன்னகை ததும்புகின்றது...

Wednesday 22 January 2014

தேவை, துணிச்சலும் தன்னம்பிக்கையும்...

தன்னம்பிக்கை பல சாதனைகளைச் செய்ய உந்துதல் சக்தியைத் தரவல்லது.

பல்லாயிரம் பேர் இருந்தாலும் யாரொருவர் ஓடி ஒளியாது, மற்றவர் முன்னால் துணிச்சலுடன் வந்து தான் நினைக்கும் கருத்தை முன்வைக்கிறாரோ, அவர் அனைவராலும் வரவேற்கப்படுவார். துணிச்சல்தான் வெற்றியின் முதல் படி. அந்த துணிச்சலுக்கு  தேவை, தன்னம்பிக்கை.

 நம்மைவிட மற்றவரிடத்தில் நல்ல செயல்திட்டங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை தன்னுள்ளேயே ஒருவர் வைத்திருப்பாரானால் அதனால் அவருக்கும், மற்றோருக்கும் என்ன பயன்?

படிக்கத் தெரியாதோருக்கு கீதையும் ஒரு தலையணை மட்டுமே என்பதற்கிணங்க, வெளிக்கொணர முடியா சிறப்புத்திட்டங்கள் எதுவும் நன்மை பயக்கப்போவதில்லை.

"எனக்கு என்னவோ, ஒருவித கூச்சம் உடனிருந்து என் செயல்களைத் தடுக்கின்றது...அதனால் மற்றவர் முன்வர தயங்குகிறேன். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ...? " என்பது, நாம் எங்கும் கேட்கும் பலரின் தேசிய கீதம். " எனக்கு வெட்கமா இருக்கிறது, என்னால் முடியாது..." என்பதைச் சொல்ல யாரும் வெட்கப்படுவதில்லை.

இது தேவையற்ற வீண் பயம். அடுத்தவர் எதைச் சொன்னால் நமக்கென்ன? நாம் வெற்றிபெற்றால் அவர்களே நம்மை புகழவும் செய்வார்கள் எனத் தெரியாதா உங்களுக்கு?

அவர்களைப் போல நீங்களுமா?

தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருவோரிடம் இசைஞானி இளையராஜா  ஒன்றைச் சொல்வாராம்.
"மனோ போல பாடுவதற்கு மனோ இருக்கிறார்.
எஸ்.பி.பாலா போல பாட எஸ்.பி.பாலா இருக்கிறார். அதனால் அவர்களைப்போல் பாட நீங்கள் எதற்கு? "

இதை தெரிந்துகொண்டோர்,  இனி அவரிடம் அப்படி ஒரு அறிமுகத்தைச் சொல்வார்களா...?
" ஐயா, நான் என்னைப்போலத்தான் பாடுவேன் " என்றல்லவா சொல்லி வாய்ப்புக்களை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்குத்தானே வாய்ப்புக்களும் வந்து சேரும்.

எஸ்.பி.பாலாவின் தியாகத்தையும் கடுமையான பயிற்சியினையும், அவர் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளையும் கிரகித்துக்கொள்ளுங்கள்.
மனோவின் முயற்ச்சிகளை கவனியுங்கள். அவரின் மேடை நாகரிகத்தையும், இன்முகத்தையும் கவனியுங்கள். இருவரின் குரல் வளத்தை முன்னுதாரணமாகக்கொள்ளுங்கள். இவை தவறல்ல. ஆனால், உங்களின் நிஜத்திறமையினை வெளிப்படுத்துங்கள். இதனால், நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

இதன் அடிப்படையில்தான், வாழ்க்கையில் வெற்றிபெற்ற மற்றவர்களின் நற்குணங்கள ஏற்றுக்கொண்டு, அவர்களின் யுக்திகளைப் பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற நான் எடுக்கும் முயற்சிகளும்.

வெற்றிபெற்றோர் செயல் திட்டங்களை காப்பியடிப்பதில் தப்போ, தவறோ இல்லை. தகுந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளின் படி சீர்திருத்தப்பட்ட செயல்திட்டங்களாயின் அதிக பலனுண்டு என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

Monday 20 January 2014

அலட்சியம் வேண்டாம்....

உலகம் பலவிதம்... அந்த உலகத்தில் நாம் ஒருவிதம். எப்படி வாழ்ந்தாலும் இரு பிரிவைனர் உண்டு. நல்லது சொல்லவும் கெட்டது சொல்லவும் நிச்சயம் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் அதனிலும் நான் கற்றுக்கொண்ட பாடமும் முக்கியமான ஒன்றுண்டு...

தெரிந்தோ தெரியாமலோ மற்றவரை அலட்சியப்படுத்துவதையும், உதாசீனப்படுத்துவதையும் நாம் தவிர்க்கவேண்டும் என்பதே அது.

நாம் விரும்பிச் செய்யப்போவதில்லை...அது நம் குணமும் இல்லை. ஆனாலும், நம்மையறியாமலும் கூட இப்படி ஏதும் நடவாமல் பார்த்துக்கொள்வது நமக்கு பின்காலத்தில் ஏற்பட விருக்கின்ற பல இன்னல்களை அகற்றுகின்ற வல்லமை கொண்டதாக அமையும்.

நம் உறவினர்களிலும், நண்பர்களிலும் பலர் எதையும் நேரிடையாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில்லை. தாங்கள் அலட்சியப்படுத்துவது போலவோ, உதாசீனப்படுத்தப்படுவது போலவோ உணர்ந்தால் சுமூகமான வழிகளில் பேசி சமரசம் காண முன்வருவதில்லை. பின்னொரு நாளில் தகுந்த சந்தர்ப்பம் கிட்டும் போது, ஏதாவதொரு சூழ்ச்சியானால் பழிவாங்கிவிடுகின்றனர். இது நடைமுறையில் பல இடங்களிலும் நடக்கின்ற, பார்க்கின்ற பொதுவானதுதான்.

 நமது இன்னல்களுக்குப் பின்னால் இருப்பது யாரென்று அறியும் சந்தர்ப்பம் பொதுவில் நமக்குக் கிட்டுவதில்லை. நேரிடையாக மோதும் திறனற்றோர் ஒளிந்து மறைந்துதான் தங்களின் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அவர்கள் யார் ... ஏன் இப்படிச்செய்கின்றனர்...என அறிந்துகொள்ளும்போது, வியப்படைகிறோம். அற்பமென நாம் நினைத்த ஒன்று இப்படி பூதாகரமாக அவர்கள் மனதில் தோன்றி பழிவாங்கும் நடவடிக்கையில் வந்து முடிந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறோம்.

"அட, இதை அப்போதே பேசி பரஸ்பர உறவை நிலை நிறுத்தி இருக்கலாமே.." என நம் மனதில் தோன்றினாலும், கோழைத்தனமான அவர்களின் செயல்களைப் பார்க்க வெறுப்பே மிஞ்சுகிறது.

ராமாயணத்தில், இராமனின் இளம் பிராயத்தில் இராமனுக்கும், கூனிக்கும் நடந்த நிகழ்வினால், வாலிபப் பருவத்தில் தனது நாட்டை விட்டு வனவாசம் போகவேண்டிய சூழ்நிலை இராமனுக்கு வந்ததை நாம் படித்திருப்போம்.  புராணத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூனியைப்   போன்று பழிவாங்கும் செயல்களில் இறங்குவோர் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

ஆக, விளையாட்டென நாம் செய்யும் ஒன்று பின்பு பெரிய மரமாகி நம்மையே தண்டிக்க முற்படுவதை இப்போதே நாம் நிறுத்திவிடலாம். யாருடன் எப்படி பழகுவது எனவும், உறவினில் எதுவரை நமது எல்லை எனவும்  புரிந்திடும் போது எதிர்கால பிரச்சினைகளினால் நமக்கு தொல்லை இல்லை.

Saturday 11 January 2014

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்...

பத்திரிகையில் வரும் ஒரு சில நல்ல விசயங்கள் பலரையும் சென்றடைவதில்லை. பல காரணங்கள் இதற்குச் சொல்லலாம். அவ்வாறு
விடப்படும்  ஒன்றிரண்டு நல்ல விசயங்களை  நமது பதிவுகளில் அவ்வப்போது இடம்பெறச்செய்து வருகிறோம் . அந்த வகையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஒரு செய்தி அதன் முக்கியத்துவம் கருதி  இன்று இங்கே இடம்பெறுகிறது.


சிதறும் செல்வத்தை சீரான செயல்களுக்கு செலவு செய்வோம்... பி. ப. சங்கம் வேண்டுகோள்.

தைப்பூசம் நெருங்க நெருங்க தேங்காய்களின் விலையும் சிறுகச் சிறுக உயர்ந்துகொண்டே போவது அதிர்ச்சியைத் தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூருகிறது.

அதே நேரத்தில் உடைபடாத நிராகரிக்கப்பட்ட தேங்காய்களையும் சிலர் விற்று விடுவதாகவும் பி.ப.சங்கம் கல்வி ஆய்வு பிரிவு அதிகாரி என். வி. சுப்பாராவ் கூறினார்.

ஒரு பையில் 50  தேங்கய்காய்களை கட்டி, தேங்காய் உடைக்க வரும் பக்தர்களிடம் விற்கின்றனர்.ஆனால் அந்தப் பையில் நல்ல தேங்காய்களோடு நிராகரிக்கப்பட்ட சுமார் 10 அல்லது 20 தேங்காய்கள் இருப்பதை தேங்காயைக் காசு கொடுத்து வாங்குபவர் அறிவதில்லை. உண்மையில் இப்படி நிராகரிக்கப்பட்ட தேங்காய்களுக்கும் ஒரு பக்தர் பணம் செலுத்துகின்றார். இதனால் ஒரு பக்தர் ஏறக்குறைய 20லிருந்து 30 ரிங்கிட் வரைக்கும் ஏமாற்றப்படுகின்றார் என்றார் சுப்பாராவ்.

தேங்காய் விலையேற்றம் தொடர்பாக புலம்பிக் கொண்டிருக்கும் பக்தர்கள் இந்நேரத்தில் உடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொள்ளும்படி அவர் வேன்டுகோள் விடுத்தார்.


தேங்காய் உடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், யாரோ ஒருவர் ஆயிரக்கணக்கில் உடைக்கின்றார் என்பதற்காக நாமும் காரணம் தெரியாமல் அவரோடு சேர்ந்து  ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைப்பது சரியாகாது என்றார் அவர்.

அநாதைகள், அபலைகள், கல்வியைத் தொடர முடியாமல் தவித்துக்கொண்டிருப்போர், பணம் இல்லாத காரணத்தால் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இருப்போர் என்று தைப்பூச நாளில் இவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் சுமையைக் குறைக்கலாம்.

இதுவும் தெய்வத்திற்குச் செய்யும் பெரிய சேவைதன் என்றார் அவர்.

 நன்றி : மலேசிய நண்பன்

Wednesday 8 January 2014

மனதைக் கவரும் ரோஜா...


 மனித மனங்களைக் கவரும் சிலவற்றுள் மலர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பொதுவில் எல்லோருக்கும் மலர்களும் அதன் வாசனையும் பிடிக்கும். மல்லிகை ஆர்க்கிட், தாமரை, அல்லி என்பவையோடு ரோஜாவும் ஒரு முக்கிய மலராக கருதப்படுகிறது.

தற்காலத்தில் மற்றவைகளைவிட ரோஜாதான் இளம் வயதினரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.... காதலர் தினத்தில் பார்க்கவேண்டுமே ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் நிலையை...

யாரையும் வசீகரிக்கும் மனமும் குணமும் கொண்டது ரோஜா. இதை யாரும் மறுபதற்கில்லை... அழகிய அதன் இதழ்கள் மனதுக்கு இதமனவை...

புத்ரா ஜயாவில் ஆண்டுதோரும் நடந்தேரும் ஃபுலோரியா புத்ராஜயா மலர்க்கண்காட்சியில்  பலவண்ண ரோஜாக்களைக் காணலாம்.  பல நாடுகளில் இருந்து அவர்களின் சிறந்த தேர்வுகளாக தருவிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு சுமார் இரு வார காலம் வைக்கப்பட்டிருக்கும்.

Tuesday 7 January 2014

இரட்டை வேடங்களில் பாவ்...


புத்ராஜயா..
பல அழகிய கட்டிடங்களைக் கொண்ட ஒரு இடம்.

அம்பர் தெனாங், காலவேய், பெராங் பெஸார், வெஸ்ட் கண்றி, ஐஓஐ போன்ற பல தோட்டங்களை அழித்து அங்கே நிறுவப்பட்ட ஒரு நவீன இடம்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இங்கிருக்கும் கட்டிடங்கள் இருக்கும்.

அதேபோல அவை கட்டப்பட்டதன் பீன்னனியிலும் பல எஸ்டேட்டுகளில் வேலையில் இருந்த நம்மவர்களின் தியாகமும் நிறைந்திருக்கும். சரித்திரத்தில் மாற்றப்பட முடியாத ஒரு உண்மை அது.

அந்த தோட்டப்புறங்களில் இருந்த தமிழர்களின் நிலைதான் இப்போது என்னவானதெனத் தெரியவில்லை.

அது அவ்வாறிருக்க,  மேலே படத்தில், தேசிய அரசாங்க அலுவலகத்தின் முன்னே  நான் நிற்கிறேன்.



அங்கேயே ஒரு இரட்டைவேட படமொன்று.
ஒருவர் சற்று மெல்லிய உடலுடனும், மற்றவர் சற்று பருமனாகவும்...



1920களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பேராக் மாநில மியூசியம் இது. ஆச்சரியம் என்னவெனில் இதில் ஒரு ஆணியும் அடிக்கப்படவில்லையாம்.
அந்த கட்டிடத்தின் முன்னே இரட்டை வேடத்தில் நான்...

Saturday 4 January 2014

குமுதம் கவர்ஸ்... டிசம்பர் 2013

1972ம் ஆண்டு முதல் குமுதம் படித்துவருகிறேன். அப்போதெல்லாம், இந்தியன் மூவி நியூஸ், கல்கண்டு, குமுதம் தவிர  வேறு வார, மாத இதழ்கள் எங்கள் ஊரில் படிக்கக் கிடைப்பது கடினம்.  தமிழ் படிக்கும் ஆர்வத்தில் நான் தேர்ந்தெடுத்த வார இதழ் குமுதம். அதன் விலை அன்று 25 காசுகள், இப்போது 3.00 மலேசிய ரிங்கிட்.

" பட்டாம்பூச்சி, மலர்கின்ற பருவத்திலே, நெருங்கி நெருங்கி வருகிறாள், அப்புசாமியும் ... " போன்ற தொடர்கள் ஒரு வார காலத்திற்கு நேரத்தை செலவிட அப்போது போதுமானதாக இருந்தன. அன்றிருந்த  அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. 

பல பிரிவுகளாக குமுதம் வெளிவந்தாலும், எனக்குப் பிடித்தவை ஹெல்த், பக்தி போன்றவையே... கருப்பு வெள்ளை பக்கங்களில் வெளியிடப்பட்ட குமுதம், தற்போது அழகிய வண்ணங்களில் வருவது ரசிக்கும்படி இருக்கிறது.

குமுதம் படிப்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுவதைக் காணலாம். சிலர் அது நேரத்தை பயனில்லாது செலவிடும் வழி என்கின்றனர். வேறு சிலர், குமுதம் ஒரு குப்பை என்கின்றனர். சில சினிமா நடிகைகளின் படங்கள் இருப்பதால் அதையும் ஒரு குறையாகச் சொல்வோரும் உண்டு. 

இப்படி குறை காணுவோர், குறைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்களேயன்றி வேறு எந்த தமிழ் வார, மாத நாளிதழையும் வாங்கிப் படிக்க நினைக்க மாட்டார்கள். 

குமுதம் பல இலக்கிய ஆசிரியர்களை உருவாக்கி விட்டிருக்கிறது.  பல அருமையான நூல்கள் வெளிவர காரணமாயிருந்திருக்கிறது. 
எல்லோருக்கும் ஏதாவதொன்று இவ்விதழ்களில் ஒன்றில் நிச்சயம் இருக்கும். வாங்கிப் படிப்பதனால் மட்டுமே அதை உணர முடியும்.












மலரும் நினைவுகள்...