Monday 30 November 2015

படித்ததில் பிடித்தது : அந்தக் கால ஹீரோ, டி.ஆர்.ராமச்சந்திரன்

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ, சிவாஜி செகண்ட் ஹீரோ - டி.ஆர்.ஆர் நினைவு தினக் கட்டுரை

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே செக்கண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. 

கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம் ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன். அப்பா ரங்காராவ் விவசாயி. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை. திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப் பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். காரணம். குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.
பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பெனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது, அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.
வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்டார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை ஆகிய படங்களில் நடித்தார். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார். 

படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
நன்றி : சினிமா விகடன் Last updated : 17:46 (30/11/2015)

திரையுலகின் தனிப்பெரும் ஞானி....'கலைஞானம்'

படித்ததில் பிடித்தது....
----------------------------------------------

திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை. தமிழ் சினிமாவை அத்துப்படியாக அறிந்த ஞானி. பல கனவு நாயகன்களும், நாயகிகளும் புகழின் உச்சத்திற்கு செல்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிரம்மா.கறுப்பு வெள்ளை திரைப்பட காலம் முதல் தொடரும் டிஜிட்டல் காலம் வரையிலுமான சினிமாவின் வாழும் மந்திரச் சொல் 'கலைஞானம்'.

200 படங்களுக்கு திரைக்கதை, 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களை தயாரித்தவர். நடிகர், பாடலாசிரியர் என சினிமாவில் எவரும் எளிதில் எட்டமுடியாத சாதனைகளை தொட்ட 86 வயது 'இளைஞர்'. தமிழ் சினிமாவின் மூத்த இக்கலைஞர், சென்னை வாசியாக இருந்தாலும் பிறந்தது, வளர்ந்தது மதுரை அருகே எழுமலை.

சினிமா துறையில் அரை நுாற்றாண்டை கடந்த தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இவர் எழுதிய, 'சினிமா சீக்ரெட்' மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. இவருக்குள் இருந்த திரைஞானம் தான் பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இருந்த இவரை கலைஞானமாக மாற்றியது.
சமீபத்தில் எழுமலையில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த அவருடன் ஒரு நேர்காணல்.

* நடிப்புக்கு படிப்பு இல்லாத காலத்தில் நடிப்பு எப்படி சாத்தியமானது?
18 வயதில் நாடகம் நடிக்கத்துவங்கினேன். அப்போது நாடக ஒத்திகை நடந்த போது எனக்கு பேச்சில் வல்லினம், மெல்லினம் உச்சரிப்பு சரியாக வரல்ல. எல்லோரும் சிரிச்சாங்க. அதையே நான் வைராக்கியமா நினைத்து தமிழ் படிச்சேன். அதுவும் ஒரு வாரம் தான். ஊரில் வரும் தமிழ் பேப்பரை மற்றவங்க எப்படி உச்சரித்து படிக்கிறாங்க என அவங்களுக்கு தெரியாம கேட்பேன். நான் 2ம் வகுப்பு வரை படித்திருந்ததால கொஞ்சம் எளிமையா இருந்தது. 1949ல் தி.மு.க.,வின் ஆசைத் தம்பி எழுதிய 'வாழ்க்கை வாழ்வதற்கே' நாடகம் தான் என் முதல் நாடகம்.

* நாடக அனுபவங்கள் எப்படி இருந்தது?
நாடகத்தில் தொடர்ந்து வில்லனாகவே நடித்தேன். தி.மு.க., உருவாகிய அக்காலகட்டத்தில் கருணாநிதியின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்த போது, அதில் கதாநாயகிகளாக மதுரை சகோதரிகள் மீரா, சுப்புலட்சுமி நடித்தனர். பின்னாட்களில் அவர்கள் சினிமாவில் புகழ் பெற்றனர். எனக்கு மேடைகளுக்கான வாய்ப்புகளை எனது சகோதாரர்
ஆர்.எம்.கிருஷ்ணசாமி உருவாக்கி கொடுத்தார். அவரும் கதாநாயகனாக நடித்தார்.

* நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தது?
ம.பொ.சி., தமிழரசு கழகத்தை நடத்திய போது, தி.மு.க., வை எதிர்த்து அவரது பிரசார நாடகமான 'எழுச்சிக்கடல்' நாடகத்தில் உசிலை சோமநாதன் கதாநாயகனாக நடித்தார். அதில் நான் வில்லனாக நடித்தேன். காரைக்குடியில் நாடகம் நடந்த போது கொட்டகையில் கல்வீச்சு நடந்தது. அத்துடன் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றேன்.

* சினிமாவில் எளிதாக நுழைய முடிந்ததா?
நாடக மேடை என்ற பள்ளிப்படிப்பு இல்லாமல் அக்காலத்தில் சினிமாவில் நுழையவே முடியாது. நான் எழுதி, இயக்கிய நாடக அனுபவங்கள் இருந்ததால் சினிமாவில் சில தடைகளை தாண்டி 1966 ல் 'காதல்படுத்தும் பாடு' படத்தில் கதை வசனம் எழுதினேன். தொடர்ந்து நுாற்றுக்கணக்கான படங்களுக்கான வாய்ப்பு கிடைத்தது.

* பல நட்சத்திரங்கள் உங்கள் கதைகளில், தயாரிப்புகளில் அறிமுகமாகியுள்ளனரே?
பைரவியில் ரஜினிகாந்த், கீதா, குறத்திமகனில் கமல், காதல்படுத்தும் பாட்டில் வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன், சுருளிராஜன், புதிய தோரணங்களில் மாதவி, நெல்லிக்கனியில் ஸவப்னா இப்படி நீளமான பட்டியல் உள்ளது.

* சினிமாவில் கற்றுக்கொண்டதும், பெற்றுக் கொண்டதும் என்ன?
புகழிலும், பொருளாதாரத்திலும் உயரத்தில் இருந்த என்னை புரட்டி போட்டது மிருதங்கசக்ரவர்த்தி படம். 1986 ல் சிவாஜி நடிப்பில் நான் தயாரித்த இப்படத்தால் ரூ.25 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. தாங்க முடியாத இந்த இழப்பில் இருந்து என்னை வெளிக்கொண்டு வந்தது எனது மாணவர் பாக்கியராஜ். 'இது நம்ம ஆளு' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்து மீண்டும் இத்துறையில் தொடர்ந்து செயல்பட வைத்தார். இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ளவர்களும் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டேன்.

* அக்கால, இக்கால சினிமாவிற்கு பெரும் வித்தியாசம் உள்ளதே?
விஞ்ஞான வசதிகள் எந்த வடிவில் வந்தாலும் கலை தெரிந்தால் போதும். வடிவங்கள் மாறும். 1974 ல் நான் எழுதிய 'கணவன் மனைவி' படத்தின் அதே கதை தான் பிற்காலத்தில் வந்த 'மன்னன்' படம். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இக்காலத்திற்கும் ஏற்ற வகையில் என்னால் படம் எடுக்க முடியும்.

* கனவுலகமான இத்துறையில் ஜெயிக்க என்ன வழி?
தமிழகத்தில் இருக்கும் மிக மூத்த கலைஞர்களில் நானும் ஒருவன். 1949 முதல் இன்று வரை இத்துறையோடு பயணிக்கிறேன். கஷ்டங்கள், நஷ்டங்கள் இப்படி பல இருந்தாலும் நம்பிக்கை இருந்தால் சாதித்து விடலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி இப்படி பலரோடு பயணித்த அனுபவங்கள் பல. வெற்றிகள் எப்படி சாத்தியமாயின என்பவை எல்லாம் என் புத்தகங்களின் பக்கங்களை புரட்டினால் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம்.

திரையுலகின் கலைப்பொக்கிஷமான கலைஞானத்தோடு பேச 96770 61186.

Thursday 5 November 2015

படித்ததில் பிடித்தது: நல்ல நண்பன்...


ஒரு பெரிய மருத்துவமனை... 
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..
ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார் என்று.
அன்பு நண்பர்களே ..
தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமாக வைத்திருப்பவனே நல்ல நண்பன்.