Monday 30 November 2015

திரையுலகின் தனிப்பெரும் ஞானி....'கலைஞானம்'

படித்ததில் பிடித்தது....
----------------------------------------------

திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை. தமிழ் சினிமாவை அத்துப்படியாக அறிந்த ஞானி. பல கனவு நாயகன்களும், நாயகிகளும் புகழின் உச்சத்திற்கு செல்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிரம்மா.கறுப்பு வெள்ளை திரைப்பட காலம் முதல் தொடரும் டிஜிட்டல் காலம் வரையிலுமான சினிமாவின் வாழும் மந்திரச் சொல் 'கலைஞானம்'.

200 படங்களுக்கு திரைக்கதை, 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களை தயாரித்தவர். நடிகர், பாடலாசிரியர் என சினிமாவில் எவரும் எளிதில் எட்டமுடியாத சாதனைகளை தொட்ட 86 வயது 'இளைஞர்'. தமிழ் சினிமாவின் மூத்த இக்கலைஞர், சென்னை வாசியாக இருந்தாலும் பிறந்தது, வளர்ந்தது மதுரை அருகே எழுமலை.

சினிமா துறையில் அரை நுாற்றாண்டை கடந்த தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இவர் எழுதிய, 'சினிமா சீக்ரெட்' மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளி வந்துள்ளது. இவருக்குள் இருந்த திரைஞானம் தான் பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இருந்த இவரை கலைஞானமாக மாற்றியது.
சமீபத்தில் எழுமலையில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த அவருடன் ஒரு நேர்காணல்.

* நடிப்புக்கு படிப்பு இல்லாத காலத்தில் நடிப்பு எப்படி சாத்தியமானது?
18 வயதில் நாடகம் நடிக்கத்துவங்கினேன். அப்போது நாடக ஒத்திகை நடந்த போது எனக்கு பேச்சில் வல்லினம், மெல்லினம் உச்சரிப்பு சரியாக வரல்ல. எல்லோரும் சிரிச்சாங்க. அதையே நான் வைராக்கியமா நினைத்து தமிழ் படிச்சேன். அதுவும் ஒரு வாரம் தான். ஊரில் வரும் தமிழ் பேப்பரை மற்றவங்க எப்படி உச்சரித்து படிக்கிறாங்க என அவங்களுக்கு தெரியாம கேட்பேன். நான் 2ம் வகுப்பு வரை படித்திருந்ததால கொஞ்சம் எளிமையா இருந்தது. 1949ல் தி.மு.க.,வின் ஆசைத் தம்பி எழுதிய 'வாழ்க்கை வாழ்வதற்கே' நாடகம் தான் என் முதல் நாடகம்.

* நாடக அனுபவங்கள் எப்படி இருந்தது?
நாடகத்தில் தொடர்ந்து வில்லனாகவே நடித்தேன். தி.மு.க., உருவாகிய அக்காலகட்டத்தில் கருணாநிதியின் விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்த போது, அதில் கதாநாயகிகளாக மதுரை சகோதரிகள் மீரா, சுப்புலட்சுமி நடித்தனர். பின்னாட்களில் அவர்கள் சினிமாவில் புகழ் பெற்றனர். எனக்கு மேடைகளுக்கான வாய்ப்புகளை எனது சகோதாரர்
ஆர்.எம்.கிருஷ்ணசாமி உருவாக்கி கொடுத்தார். அவரும் கதாநாயகனாக நடித்தார்.

* நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தது?
ம.பொ.சி., தமிழரசு கழகத்தை நடத்திய போது, தி.மு.க., வை எதிர்த்து அவரது பிரசார நாடகமான 'எழுச்சிக்கடல்' நாடகத்தில் உசிலை சோமநாதன் கதாநாயகனாக நடித்தார். அதில் நான் வில்லனாக நடித்தேன். காரைக்குடியில் நாடகம் நடந்த போது கொட்டகையில் கல்வீச்சு நடந்தது. அத்துடன் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றேன்.

* சினிமாவில் எளிதாக நுழைய முடிந்ததா?
நாடக மேடை என்ற பள்ளிப்படிப்பு இல்லாமல் அக்காலத்தில் சினிமாவில் நுழையவே முடியாது. நான் எழுதி, இயக்கிய நாடக அனுபவங்கள் இருந்ததால் சினிமாவில் சில தடைகளை தாண்டி 1966 ல் 'காதல்படுத்தும் பாடு' படத்தில் கதை வசனம் எழுதினேன். தொடர்ந்து நுாற்றுக்கணக்கான படங்களுக்கான வாய்ப்பு கிடைத்தது.

* பல நட்சத்திரங்கள் உங்கள் கதைகளில், தயாரிப்புகளில் அறிமுகமாகியுள்ளனரே?
பைரவியில் ரஜினிகாந்த், கீதா, குறத்திமகனில் கமல், காதல்படுத்தும் பாட்டில் வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன், சுருளிராஜன், புதிய தோரணங்களில் மாதவி, நெல்லிக்கனியில் ஸவப்னா இப்படி நீளமான பட்டியல் உள்ளது.

* சினிமாவில் கற்றுக்கொண்டதும், பெற்றுக் கொண்டதும் என்ன?
புகழிலும், பொருளாதாரத்திலும் உயரத்தில் இருந்த என்னை புரட்டி போட்டது மிருதங்கசக்ரவர்த்தி படம். 1986 ல் சிவாஜி நடிப்பில் நான் தயாரித்த இப்படத்தால் ரூ.25 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. தாங்க முடியாத இந்த இழப்பில் இருந்து என்னை வெளிக்கொண்டு வந்தது எனது மாணவர் பாக்கியராஜ். 'இது நம்ம ஆளு' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்து மீண்டும் இத்துறையில் தொடர்ந்து செயல்பட வைத்தார். இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ளவர்களும் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டேன்.

* அக்கால, இக்கால சினிமாவிற்கு பெரும் வித்தியாசம் உள்ளதே?
விஞ்ஞான வசதிகள் எந்த வடிவில் வந்தாலும் கலை தெரிந்தால் போதும். வடிவங்கள் மாறும். 1974 ல் நான் எழுதிய 'கணவன் மனைவி' படத்தின் அதே கதை தான் பிற்காலத்தில் வந்த 'மன்னன்' படம். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இக்காலத்திற்கும் ஏற்ற வகையில் என்னால் படம் எடுக்க முடியும்.

* கனவுலகமான இத்துறையில் ஜெயிக்க என்ன வழி?
தமிழகத்தில் இருக்கும் மிக மூத்த கலைஞர்களில் நானும் ஒருவன். 1949 முதல் இன்று வரை இத்துறையோடு பயணிக்கிறேன். கஷ்டங்கள், நஷ்டங்கள் இப்படி பல இருந்தாலும் நம்பிக்கை இருந்தால் சாதித்து விடலாம். எம்.ஜி.ஆர்., சிவாஜி இப்படி பலரோடு பயணித்த அனுபவங்கள் பல. வெற்றிகள் எப்படி சாத்தியமாயின என்பவை எல்லாம் என் புத்தகங்களின் பக்கங்களை புரட்டினால் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம்.

திரையுலகின் கலைப்பொக்கிஷமான கலைஞானத்தோடு பேச 96770 61186.

No comments:

Post a Comment