Sunday 26 August 2018

புளோரியா புத்ராஜெயா 2018

சுமார் பத்தாண்டுகளாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நிகழ்வாக இருந்து வந்த புத்ராஜெயா மலர்கண்காட்சி, ஓராண்டுக்குப் பின் மீண்டும் இடம்பெறுகிறது.

நேற்று, சனிக்கிழமை முதல் எதிர்வரும் செப்டெம்பர் 2ம் தேதி வரையில் புத்ராஜெயா பிரிசின்க்ட் 4ல், தாவரவியல்  சம்பந்தமான பயிரினங்களையும், மலர்த்தோட்டங்களையும், வெவ்வேறு நாடுகளின் மலர் அலங்காரங்களையும்  கண்டு களிக்கலாம்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற எல்லா மலர்க்கண்காட்சிகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்வேன்.... கண்களுக்கு குளிர்ச்சியாக, மனதுக்கு இதமாக, கவர்ந்திழுக்கும் வண்ணக்குவியல்கள் போன்ற மலர்களில் மிதக்க ஓடி வாருங்கள். இது வருடத்துக்கு ஒருமுறையே வரும் சந்தர்ப்பம்.

2017ல் இந்நிகழ்வு இடம்பெறவில்லை. கடந்த அரசு அதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டியது. இன்றைய அரசோ, தேசிய தினத்தையே புத்ராஜெயாவில் கொண்டாட திட்டம் வகுத்து அதற்கேற்றார்ப்போல் மலேசியர்கள் பலரையும் கவரும் இந்த மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.

2016ல் இடம்பெற்ற நிகழ்வின்போது பிடித்த படங்களில் சில இங்கே.
இவ்வருடத்திய படங்கள் நாளை முதல் இடம்பெறும்.....























Sunday 27 May 2018

எண்ணை மாற்றி வெற்றி பெற முடியுமா?


பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த ஒன்றை
இன்று உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

எண் கணிதம் பற்றி தெரியும். எழுத்துக்களுக்கு, அதுவும் ஆங்கில எழுத்துக்களுக்கு எண் கணிதக்காரர்கள் தரும் சக்தியும் தெரியும்.
நமது அழகிய பெயரின் ஒரு எழுத்தை அங்கேயும் இங்கேயுமாக மாற்றி நமது தலைவிதியை மாற்றித்தருகிறோம் என பிதற்றிக்கொள்ளும் இந்த எண் ஜோதிடர்கள் ஏன் தங்களது பெயரை அவ்வண்ணம் மாற்றிக்கொண்டு எல்லா வளங்களையும் பெற்று வாழ முடியாது...?
இதில், தமிழிலில் பெயர்களை வைத்துக்கொண்டு ஆங்கில எழுத்துக்களில் சக்தியை சேர்த்துத் தருகிறேன் என பொய்யான முகவுரை வேறு....



மகளின் திருமண அழைப்பை வழங்கும் போது
இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது.

கண்ணன் எனும் அழகிய பெயரை  KANNAN  என எழுதாமல்   KANNAA என எழுதினால்தான் அதற்கு முழு சக்தியாம். என் நண்பருக்கு ஒரு எண் ஜோதிடர் ஆலோசனை கூறி இருக்கிறார்.

நல்ல வசதியான நண்பர் அவர். திடீரென பெயர் மாறி இருப்பது கண்டு விசாரித்ததில் தெரிந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, இந்த பெயர், எழுத்துக்கள் மாறிடும் முன்பே வாழ்வின் நல்ல நிலைக்கு வந்துவிட்டவர் அவர்.

ஆனாலும் விதி யாரை விட்டது.... ?
இப்போது அவரும்  KANNAA  என்றே எழுத தொடங்கியிருக்கிறார்.

இருக்கட்டும், அவர் பெயர், அவர் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் நாம் ஏன் தலையிடவேண்டும்?

இதுபோன்ற நபர்களை சந்திக்கும் போது இயற்கையாகவே சில சந்தேகங்களும் பிறந்துவிடுகின்றன.

உதிக்கும்போது விதிக்கப்பட்டது என்பதில் உள்ள சிறு நம்பகத்தன்மைகூட இதில் இல்லையே...?
இப்படியான பெயர் மாற்றங்கள் அறிவியலோடு ஒத்துப் போகவில்லையே?
ஆயிரம் பேருக்கு சொல்லப்படும் எதுவும், ஒரு சிலரின் வாழ்வில் நடந்திருக்கும்தானே?
இதற்கு ஜோதிடர்கள் சொன்னால்தான் நடக்கும் என்பதில்லையே?
யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாமே?

உதாரணம், டோட்டோ, மெக்நம், கூடா எனும் நமது வாராந்திர பந்தயங்களில்.   எண்களை  பேருக்கு தந்திடும் போது, அதில்   பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதுவா ஜோதிடத்தில் கணிக்கப்பட்டது?
இதை விளங்கிக்கொள்ளாத மக்களின் அறியாமையை என்னெவென்பது...?

நமக்கு ஒரு கேள்வி, அதென்ன இந்த கணித ஜோதிடர்கள் , அடுத்தவர்களுக்கு பெயர்களின் எழுத்துக்களை மாற்றித்தந்து அவர்கள் தரும் அஞ்சுக்கும், பத்துக்கும் தங்களது வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்? இதை கவனித்தாவது மற்றவர்கள் திருந்த வேண்டாமா?

வேதாளத்தை வீழ்த்தி உடலை எடுத்துச் செல்லும் விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்வி இது.

பதில் தெரிந்தும் நீங்கள் சொல்லாவிட்டால்.....