Monday 31 August 2015

மருத்துவ பரிசோதனை...

ஆண்டுக்கொருமுறை  நாம்  நிச்சயம்  மருத்துவ  பரிசோதனை  செய்து  கொள்ள  வேண்டும்  என்பதை  மருத்துவ  உலகம்  வலியுறுத்துகிறது.

நம் சமூகத்தினர் உடல் நலம் பேணுவதில் அக்கறை இன்றி இருக்கிறார்கள். இந்த பொறுப்பற்ற குணம் மாறவேண்டும். குடும்பத் தலைவர்களும், வாகன ஓட்டுனர்களும் தங்களை சார்ந்திருக்கும் மற்றவர்களையும் நினைத்துப் பார்த்து செயல் பட வேண்டும். அதற்கு, மருத்துவ  பரிசோதனை அவசியமாகிறது.

இறப்பைப் பற்றி பேச 'இன்சுரன்ஸ்காரர்கள்' என்றுமே பயந்ததில்லை. அது அவர்களின் தொழில் சார்ந்த தர்மம். மற்றவர்களுக்கு புரியவைக்க இதுபோன்ற அதிரடி விளக்கம் அவசியமாகிறது. அதன் வகையில், திடீர் மரணங்களுக்கு முக்கிய காரணம், தங்களுக்கு இருக்கும் நோயைப் பற்றிய எவ்வித அறிகுறியும் தெரியாதிருப்பது. ஒரு குடும்பத் தலைவரின் திடீர் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைக்கிறது. ஒரு வாகன ஓட்டியின் திடீர் மரணம், அவருடன் அல்லது அவர் அருகில் பயணிக்கும் மற்றவர்களையும் ஆபத்துக்கு இட்டுச் செல்கிறது.

இதை, வருடாந்திர மருத்துவ  பரிசோதனையின் மூலம் எதிர்கொள்ளலாம். தனது உடல் நிலை பற்றி தெரிந்துகொண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்த்து விடலாம்.

அதனால் தான் சொல்கிறோம், மருத்துவ பரிசோதனை ஒவ்வொருவருக்கும் அவசியம் என. அதிலும், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மிக மிக அவசியம் என.

Thursday 20 August 2015

மாயை என்றால் என்ன?

படித்ததில் பிடித்தது...

கேள்வி கேட்ட நாரதரைப் பார்த்து மகா விஷ்ணு புன்னகை செய்கிறார்.

மகா விஷ்ணுவும் நாரதரும் பூலோகத்தில் காலாற நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக மனித நடமாட்டம் இல்லாத இடம் அது. மகா விஷ்ணு தொடர்ந்து நடக்கிறார். முகத்தில் மாறாத புன்னகை.

“நாராயணா, மாயை என்றால் என்ன?�நாரதர் மீண்டும் கேட்கிறார்.
மகா விஷ்ணுவின் புன்னகை மேலும் விகசிக்கிறது.

“தாகமாக இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் ஊருக்குப் போய் தண்னீர் கொண்டு வாயேன்” என்கிறார்.
பரந்தாமனின் கோரிக்கையை நிறைவேற்ற நாரதர் புறப்படுகிறார்.


சிறிது நேரம் நடந்த பிறகு வயல் வெளியும் மரங்களும் சில வீடுகளும் நாரதரின் கண்ணில் படுகின்றன. ஒரு அரச மரத்துக்குப் பக்கத்தில் இருக்கும் குடிசைக்குச் சென்று கதவைத் தட்டுகிறார்.
காத்திருக்கும் நேரத்தில் நாரதர் சுற்று முற்றும் பார்க்கிறார். பசுமையான மரங்கள், பல வித வண்ணம் கொண்ட மலர்கள், இனிய சங்கீதம் எழுப்பும் பறவைகள், சிறிது தொலைவில் ஒரு குளம், அதில் சில கொக்குகள். நாரதரின் உள்ளம் அந்த சூழலின் அழகில் மூழ்கித் தளும்புகிறது.
கதவு திறந்த ஓசை கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார். பார்த்ததும் அப்படியே உறைந்து நிற்கிறார். தேவலோகத்தில்கூட அவர் இப்படி ஒரு அழகைக் கண்டதில்லை.

முற்றும் துறந்த தேவரிஷியான நாரதரையே சலனம் கொள்ளச் செய்யும் பேரழகு கொண்ட அந்தப் பெண் புன்னகை புரிகிறாள். பணிந்து வணங்குகிறாள். கையில் இருந்த குவளையை மிகுந்த மரியாதையுடன் அவரிடம் தருகிறாள். அதில் இளநீர் இருக்கிறது. தேவாம்ருதத்தைவிடவும் அவருக்கு அது சுவையானதாகத் தோன்றுகிறது.

“உள்ளே வாருங்கள். தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அந்தப் பெண் கை கூப்பியவண்ணம் கேட்கிறாள்.

நாரதர் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட சிறுவன்போல அவளைப் பின்தொடர்கிறார்.
“தங்களுக்கு என்ன வேண்டும்? உணவு கொண்டுவரட்டுமா?”
நாரதர் தலையசைக்கிறார்.

வசிய வலைக்குள் சிக்கியவர் பேசாமல் சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடிந்ததும் தாம்பூலம் தருகிறாள் அந்தப் பெண். நாரதரால் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“பெண்ணே, நீ யார் என்று எனக்குத் தெரியாது. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்கிறார்.

அந்தப் பேரழகி தலை கவிழ்கிறாள். “தாங்கள் என் தந்தையிடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்கிறாள்.

அவளது தந்தை வரும்வரை காத்திருக்கும் நாரதர், தந்தையிடம் பேசி அனுமதி வாங்குகிறார். அதே ஊரில் இருவரும் குடித்தனம் நடத்துகிறார்கள். அந்த ஊரின் அழகும் அமைதியும் தன் மனைவியின் பேரழகும் பெரும் குணமும் நாரதரைப் பெரிதும் கவர்ந்துவிட்டன.

சொர்க்கத்தில் இருப்பதைவிட மேலான வாழ்க்கையை வாழ்வதாக அவர் உணர்கிறார்.

பருவங்கள் மாறுகின்றன. புதுப்புதுப் பறவைகள் வருகின்றன. சிறிது காலம் அங்கே இருந்துவிட்டுச் செல்கின்றன. மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன. மீண்டும் துளிர்க்கின்றன. மொட்டு பூவாகிக் காயாகிப் பழமாகிக் கனிந்து விழுகிறது. மீண்டும் இலைகள் உதிர்கின்றன.

நாரதருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இப்போது நான்கு குழந்தைகள். குழந்தைகள் வெளியில் விளையாடிக்கொண்டிருக்க, நாரதர் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுகிறார்.

அப்போது மலையடிவாரத்திலிருந்து பெரும் ஓசை எழுகிறது. இடியைத் தொடர்ந்து திரண்டு வரும் மேகங்கள் மலையை மூடுகின்றன. பெரும் காற்று வீசத் தொடங்குகிறது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சிப்பதற்குள் மழை பெரும் வீச்சுடன் மண்ணில் இறங்குகிறது. சில நொடிகளில் மழை வெளியெங்கும் பரவுகிறது. வானுக்கும் பூமிக்கும் இடையில் விழுந்த திரைபோல் நிற்கிறது. மனைவியின் கூக்குரலைக் கேட்டுப் பரிதவிக்கிறார் நாரதர். குழந்தைகளின் அலறலும் ஈனஸ்வரத்தில் கேட்க நாரதரின் தவிப்பு அதிகரிக்கிறது. எழுந்து அவர்களை நோக்கி ஓடுகிறார். யாரையும் நெருங்க முடியவில்லை. அலறிக்கொண்டே மழைத் திரையைக் கிழித்தபடி இங்கும் அங்கும் ஓடுகிறார். தன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்த நாரதர் வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறார்.

நாரதர் சமாளித்து நீந்தத் தொடங்குகிறார். வீடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு செல்வதைப் பார்க்கிறார். குழந்தைகளின் பிணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்க்கிறார்.
பேரழகு கொண்ட மனைவி வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிப்பதைப் பார்க்கிறார். இதயம் பல துண்டுகளாகச் சிதறுவதுபோல் இருக்கிறது. பெருகும் கண்ணீருடன் தன் காதல் மனைவியை நெருங்குகிறார்.

வெள்ளம் அவருக்குக் கருணை காட்டவில்லை. அவரால் தன் மனைவியின் உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிகிறது. மழை குறைகிறது. வெள்ளம் வடிகிறது. காலம் கடந்து செல்வது குறித்த உணர்வு இன்றி நாரதர் அழுது கொண்டிருக்கிறார். உடல் களைப்பு அவரை மயக்கமடையச் செய்கிறது. மண்ணில் வீழ்கிறார்.

எழுந்து பார்க்கும்போது மரங்கள் இல்லை, வண்ணமயமான பூக்கள் இல்லை. குளம் இல்லை. குடிசை இல்லை. மனைவி, மக்கள் யாரும் இல்லை. சுற்றிலும் வெட்ட வெளி. நாரதர் ஒன்றும் புரியாமல் விழிக்கிறார். மனதில் வெறுமை சூழ்கிறது.

தொலைவில் ஒரு சலனம். யாரோ இருப்பது தெரிகிறது. நாரதர் எழுந்து நடக்கிறார். அந்த உருவத்தை நெருங்குகிறார். அவருக்கு மிகவும் பரிச்சயமான முகம்.

அவர் உதடுகள் தம்மையறியாமல் பிரிகின்றன. நாக்கு அசைகிறது.
“நாராயணா...”

பரந்தாமன் நாரதரைப் பார்க்கிறார். முகத்தில் அதே புன்னகை.
“குடிக்கத் தண்ணீர் கேட்டேனே, எங்கே?”

மாயை என்றால் என்னவென்று, தான் கேட்ட கேள்வி நாரதருக்கு நினைவுக்கு வருகிறது.
- தி இந்து Published: November 21, 2013

மலேசிய ரயில் சேவை...


திருமணத்திற்கு முன் சுங்கை பட்டாணிக்கு  ஒருமுறை இதில் பயணம் செய்த அனுபவம் உண்டு.  திருமணமான பிறகு ஈப்போவிற்கு அடிக்கடி இதில் பயணிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன, மனைவி அங்குள்ளவர் என்பதனால். நாட்கள் ஆக ஆக பயணச்சீட்டு கிடைப்பதில் சிரமங்கள் தோன்றத்தோடங்கி விட்டன.....அனைவரும் ரயிலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடமாட்டோம் என அடம் பிடித்தால் பின் எப்படி நம் இஷ்டத்துக்கு இதில் பயணிப்பது....? அதோடு, பஸ் வசதிகளும் பெருகத்தொடங்கிவிட்டன.... நானும் கார் வாங்கிவிட்டேன்.

அன்று இரயில் பயணிப்பது சுகமான ஒன்றாக இருந்தது. இடையிடையே சின்னச் சின்ன ஊர்களாகவும், ஒவ்வொரு மாநிலங்களை கடக்கும் போது வயல்வெளிகளும், ரப்பர் தோட்டங்களும், செம்பனை மரங்களுமாக, பல விதங்களில் கிராமத்து வீடுகளை பார்த்தபடி செல்வது பிரம்மிப்பான அனுபவமாகும். குழந்தைகள் பட்டமிடுவதும், ஆட்டமும் பாட்டுமுமாக கவலையற்று மகிழ்வதை பார்த்தபடி பயணிப்பது மனதுக்கு இதமானதாய் இருந்தது.

ரயில் பயனங்கள அன்று அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததற்கு இன்றிருக்கும் கைபேசிகளும் ஏனைய நவீன சாதனங்களும் இல்லாததும் ஒரு காரணமென நினைக்கிறேன்.


1960களில் தாய்லாந்துக்கு கோலாலும்பூரில் இருந்து 26 மணி நேரம் பிடிக்குமாம். இப்போது புல்லட் ரயில்கள் வந்துவிட்டன, வெறும் 5 மணி நேரங்களே சென்றடைய என அறிகிறேன்.

இது நெடுந்தூர சேவை என்பதனால், பினாங்குக்கு ( பட்டர்வேர்த்தை ) இணைக்கும் சேவையாக, கோலாலும்பூரில் இருந்து இலேக்ட்றிக் ரயிலும் தற்போது இருக்கிறது.