Monday 20 January 2014

அலட்சியம் வேண்டாம்....

உலகம் பலவிதம்... அந்த உலகத்தில் நாம் ஒருவிதம். எப்படி வாழ்ந்தாலும் இரு பிரிவைனர் உண்டு. நல்லது சொல்லவும் கெட்டது சொல்லவும் நிச்சயம் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் அதனிலும் நான் கற்றுக்கொண்ட பாடமும் முக்கியமான ஒன்றுண்டு...

தெரிந்தோ தெரியாமலோ மற்றவரை அலட்சியப்படுத்துவதையும், உதாசீனப்படுத்துவதையும் நாம் தவிர்க்கவேண்டும் என்பதே அது.

நாம் விரும்பிச் செய்யப்போவதில்லை...அது நம் குணமும் இல்லை. ஆனாலும், நம்மையறியாமலும் கூட இப்படி ஏதும் நடவாமல் பார்த்துக்கொள்வது நமக்கு பின்காலத்தில் ஏற்பட விருக்கின்ற பல இன்னல்களை அகற்றுகின்ற வல்லமை கொண்டதாக அமையும்.

நம் உறவினர்களிலும், நண்பர்களிலும் பலர் எதையும் நேரிடையாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில்லை. தாங்கள் அலட்சியப்படுத்துவது போலவோ, உதாசீனப்படுத்தப்படுவது போலவோ உணர்ந்தால் சுமூகமான வழிகளில் பேசி சமரசம் காண முன்வருவதில்லை. பின்னொரு நாளில் தகுந்த சந்தர்ப்பம் கிட்டும் போது, ஏதாவதொரு சூழ்ச்சியானால் பழிவாங்கிவிடுகின்றனர். இது நடைமுறையில் பல இடங்களிலும் நடக்கின்ற, பார்க்கின்ற பொதுவானதுதான்.

 நமது இன்னல்களுக்குப் பின்னால் இருப்பது யாரென்று அறியும் சந்தர்ப்பம் பொதுவில் நமக்குக் கிட்டுவதில்லை. நேரிடையாக மோதும் திறனற்றோர் ஒளிந்து மறைந்துதான் தங்களின் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அவர்கள் யார் ... ஏன் இப்படிச்செய்கின்றனர்...என அறிந்துகொள்ளும்போது, வியப்படைகிறோம். அற்பமென நாம் நினைத்த ஒன்று இப்படி பூதாகரமாக அவர்கள் மனதில் தோன்றி பழிவாங்கும் நடவடிக்கையில் வந்து முடிந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறோம்.

"அட, இதை அப்போதே பேசி பரஸ்பர உறவை நிலை நிறுத்தி இருக்கலாமே.." என நம் மனதில் தோன்றினாலும், கோழைத்தனமான அவர்களின் செயல்களைப் பார்க்க வெறுப்பே மிஞ்சுகிறது.

ராமாயணத்தில், இராமனின் இளம் பிராயத்தில் இராமனுக்கும், கூனிக்கும் நடந்த நிகழ்வினால், வாலிபப் பருவத்தில் தனது நாட்டை விட்டு வனவாசம் போகவேண்டிய சூழ்நிலை இராமனுக்கு வந்ததை நாம் படித்திருப்போம்.  புராணத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூனியைப்   போன்று பழிவாங்கும் செயல்களில் இறங்குவோர் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

ஆக, விளையாட்டென நாம் செய்யும் ஒன்று பின்பு பெரிய மரமாகி நம்மையே தண்டிக்க முற்படுவதை இப்போதே நாம் நிறுத்திவிடலாம். யாருடன் எப்படி பழகுவது எனவும், உறவினில் எதுவரை நமது எல்லை எனவும்  புரிந்திடும் போது எதிர்கால பிரச்சினைகளினால் நமக்கு தொல்லை இல்லை.

No comments:

Post a Comment