Wednesday 21 August 2013

உலக புகைப்பட நாள்...

அனைத்துலக புகைப்பட நாள் ஆகஸ்ட் மாதம் 19 தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. நம்மில் பலருக்கு அதைப்பற்றி தெரியாதிருக்கலாம். புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளோர் அன்றைய நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படப் போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். தற்போது கைபேசிகளும் தரமான முறையில் படங்களை எடுக்கும் வசதிகளைக் கொண்டிருப்பதால், பலரும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஜனவரி 9, 1839ல் புகைப்படம் எடுக்கும் வசதியினை ஜோசெப் நைஸ்ப்ரோ மற்றும் லூயிஸ் டக்குரே எனும் பிரென்சுக்காரர்கள் கண்டுபிடித்தனர். அந்த கண்டுபிடிப்பினை 19.8.1839 அன்று பிரென்சு அரசாங்கம் "உலகிற்கு ஒரு இனாம்" என அறிமுகப்படுத்தியது. அந்த நாளை நினைவுபடுத்தும் நாளாக ஆகஸ்ட் 19 உலக புகைப்பட நாளாக நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு, புகைப்படங்களின் நினைவுகளில் மகிழ்கிறோம்.

"புகைப்படம் புகைப்படம்னு சொல்றாங்க..ஆனா எந்த படத்திலும் புகையையே காணோம் ", என சிலர் சொல்வது காதில் விழுகின்ற காரணத்தினால் அவர்களை திருப்திப்படுத்த இந்த 'புகை' படத்தை இங்கே தருகிறேன்.

இன்று பலவிதமான நினைவுகளை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். அவர்களோடு நாம் இருந்த நாட்களை நாம் நினைவு படுத்தி மகிழ்கிறோம். அதிகாரபூர்வமற்ற அனைத்து விசயங்களிலும் நாம் மகிழ்ச்சியான சம்பவங்களையும் இனிமையானவர்களையும் மட்டுமே புகைப்படமாக எடுத்து மகிழ்கிறோம். இழப்புக்களையும் மனதுக்கு வருத்தமளிக்கும் வேறு எதையும் பொதுவில் நாம் புகைப்படமாக எடுப்பதில்லை. ஆனால், புகைப்படக்கருவிகள் இல்லாத அந்த நாளும் இருந்திருக்கிறது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அக, முக்கிய நிகழ்வுகளை எப்படி நினைவில் கொள்ள வழி செய்திருப்பார்கள்...? அதை ஆராயும் போது, அன்று திறமையாக படம் வரையக்கூடிய பலர் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. நூறு விழுக்காடு அச்சு அசலாக இல்லாதிருப்பினும், சுமார் நிலையில் ஒரு புகைப்படக் கருவியின் வேலைகளை பலர் செய்து வந்திருக்கின்றனர் என்பதை படிக்கும்போது நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என யூகிக்க முடிகிறது. 

ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள உறவினர்களையும் நண்பர்களையும் நேரிடையாக பார்க்கும், அவர்களோடு உறவாடும் அதி நவீன நிலை வந்து விட்ட இப்போதும், புகைப்படங்கள் எடுத்து நம் இனிமை நினைவுகளை பத்திரப்படுத்தும் செயல்பாடு எல்லளவும் குறைந்ததாகக் காணோம்.

இதுவே புகைப்படக் கலையின் சிறப்பு. ஆல்பமாக கையில் வைத்து பார்க்காவிடினும், கணினியில் பல "ஃபோல்டர்களில்" நாம் அவற்றை சேமித்து வைத்திருக்கிறோம்.  

சில நேரங்களில் சில நபர்களால் சில அத்துமீறல்கள் ஆங்காங்கே நடப்பதைக் கேள்விப்படுகிறோம். ஆனால், எதில் இல்லை இது போன்ற  எதிர்மறை செயல்கள்? 

புகைப்படக்கலைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். அதுபோல், வார்த்தைகள் இன்றி போகும் சூழ் நிலைகளின் போது புகைப்படங்களே அரும் பெரும் இலக்கியங்களாக ஆகியிருக்கின்றன.

1974ம் ஆண்டு ஹெலிஃபெக்ஸ் கேமராவில் புகைப்படங்கள் எடுக்கப் பழகியவன் நான். அதன் விலை அன்று வெறும் 14 ரிங்கிட்தான். அதன்பின் பல கேமராக்களை  வாங்கி உபயோகித்து விட்டேன். திருமணம், பிறந்த நாள், காது குத்து, வெளியூர்ப் பயணங்கள் என பலவற்றையும் படமெடுத்தாகிவிட்டது. இப்போது எனக்குப் பிடித்தது, இரட்டை வேடங்களில் மற்றவர்களை படமெடுப்பதுதான். அதுபோன்று வேறெங்கும் இல்லாததால் அதில் ஒரு மகிழ்ச்சி எனக்கு. கடந்த இரண்டு வருடங்களில், அப்படி இரட்டைப் படமெடுப்பது பற்றி என்னிடம் கற்றுக்கொண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.


No comments:

Post a Comment