Monday 19 August 2013

கோழி கூவுது ...


கோழி வளர்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...?

 நான் ஈமு கோழி எனும் பண்ணைக் கோழிகளைச் சொல்லவில்லை. கம்பத்துக் கோழி என சொல்வோமே அவற்றைச் சொல்கிறேன்.

கோழி வளர்ப்பு என்பது நமது தோட்டபுறங்களில் ஒரு சாதாரண ஒன்றாக இருந்தது. பொதுவில் பலரும் சொந்த உபயோகத்துக்குத்தான் வளர்த்து வந்தோம். அவற்றுக்கு அளித்த உணவுகளில் எவ்வித கலப்படமும் நச்சுத்தன்மையும் இருந்ததில்லை. கோழித்தீனி என உடைபட்ட சோளத்தை அவற்றுக்கு உணவாக இட்டு வளர்த்து வந்தது இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. அதன் முட்டைகளும் நமக்கு இழந்த பலத்தை மீட்டுத் தரும் சத்தானதாக இருந்தது. உடல் நோயுற்ற போது  நமக்கு நல்லதொரு மருந்தாக இருந்தது இந்த கம்பத்துக் கோழிகள் தான். வீட்டில் யாருக்காவது நோய் எனக் கண்டால் உடனே அன்று கோழி சூப் இருக்கும். அதென்னமோ கோழி சூப் உட்கொண்டதும் அந்த நோயில் இருந்து நிவாரணமும் கிடைத்துவிடும். அன்றைய கோழிகள் நமக்கு ஆரோக்கியத்துக்காக வளர்க்கப்பட்டன.

ருசியான சமையலாக கோழி அன்று நமக்குதவியது. அப்படி ஒரு சுவை அதில். கோழிக்கறி என்றால் மற்ற இனத்தவரும் ருசித்துச் சாப்பிடும் உணவாக நமது தாய்க்குல சமையல் இருந்தது.

தலைகீழான நிலை இன்று. கோழியின் ஆயுள் வெறும் 30லிருந்து 45 நாட்களே இப்போது. அதற்குள் கோழியின் எடை 2 முதல் 3 கிலோவிற்கு வந்துவிடும் படி ஊசிகள் மூலம் அதற்கேற்றபடியான மருந்துகள் புகுத்தப்படுகின்றன. 45 நாட்களுக்குப் பின் பண்ணையில் இருக்கும் ஒவ்வொரு கோழியும் நஷ்டத்தை தருவிக்கும் என பண்ணை முதலாளிகள் குறிப்பிடுகின்றனர்.

கம்பத்துக்கோழிகள் மிகவும் குறைந்து விட்ட நிலையில், நம்முடைய அன்றாட தேவைக்கு நாம் இப்போது இந்த பண்ணைக்கோழிகளையே நம்பி இருக்கிறோம். உடல் பருக்கும், எடை கூடும் மருந்து செலுத்தப்பட்ட இவ்வகை கோழிகளே வாராவாரமும் நம் இல்லங்களில் சிறப்புச் சமையலாக அலங்கரிக்கிறது உணவு மேஜைகளில்.

அட இதுகூட பரவாலங்க...தோல் நீக்கிவிட்டு, கோழியின் கழுத்து, கால்கள், இறக்கை என ஒதுக்கிவிட்டு சமைக்கலாம். இந்த 'கே எஃப் சீ', 'மெக்டோனல்ட்', 'ஏபிசி ஃப்ரை' என அதிக கொழுப்புடைய கோழிகளையும் நாம் நமது பிள்ளைகளுக்கு வாங்கித் தருகிறோம் பாருங்க, அதுதான் இப்போ பல நோய்களுக்கும் காரணமாகிறது.

பாதி ருசி +  பாதி எண்ணெய் = மொத்தம் கூட்டினால்..அதிகப்படியானகொழுப்பு.

அப்படி என்னதான் இருக்கிறதோ, இன்றைய இளையோர் அதில் பைத்தியமாகி ஐக்கியமாகிவிடுகிறார்கள். இதுபோன்ற மேற்கத்திய உணவு வகைகளை நிறுத்தினாலே நம்முடைய உடல் ஆரோக்கியம் தானே சிறந்துவிடும்.

மேலே : முகநூலில் இருந்து ஒரு ஃபோட்டோ

No comments:

Post a Comment