Thursday 22 August 2013

சிலர்... பலர்... நாம்...

"எதடா வாழ்க்கை...?
இதுவா வாழ்க்கை....?
என்னடா வாழ்க்கை...?
எல்லாமே செயற்கை!!!"
....என எதிர்மறையாக பேசுவதால் எவ்வித நன்மையும் நமக்கு ஏற்படப் போவதில்லை. உபயோகப் படாத, நமது முன்னேற்றத்துக்கு எந்தவகையிலும் பயனற்ற ஒரு சிந்தனை நமக்குத் தேவையா? ஆனாலும், பலர் நம்மிடையே இப்படி பேசக் கேட்கிறோம்.

"என்ன சார் சொல்றது... நான் ஒண்ணு நினைச்சா, அது ஒண்ணு நடக்குது.  எல்லாம் விதி சார்.."
என்று சிலர் விதியின் மேல் பழியைப் போடுகிறார்கள்.  நினைத்தது நடக்கவில்லையானால் நினைத்ததில் தான் தவறு.  நடக்கவியலாதது எப்படி நடக்க முடியும்...? நடப்பதை அல்லவா நினைத்திருக்க வேண்டும்.  இங்கே நினைப்பதை சரிபடுத்திவிட்டால், நடப்பவை சரியாகி விடும்.

இன்னும் சிலர் கைகளில் கண்ணாடியுடன் அலைவார்கள், கண்களில் அல்ல. யார் எதைச் செய்தாலும் அதில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயிற்சிபெற்றவர்கள் போல் நடந்துகொள்வார்கள் இவர்கள். பொதுவாக மற்றவர் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். உற்று நோக்கினால், நமது உறவினர், நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களை அதிகம் காணலாம். தன் நிலையை உயர்த்திக்கொள்ளாது, பிறரின் வெற்றியில் மனப் புழுக்கம் கொள்ளுவார்கள்.
"அவனுக்கு உதவ ஆள் இருந்தார்கள், முன்னுக்கு வந்தான். எனக்கு யார் இருக்கிறா, உதவி செய்ய?" என தன்னைத் தானே தற்காத்து பேசி தங்களின் மந்தமான சிந்தனைகளை வெளிப்படுத்துவார்கள். நிஜத்தில் எவ்வளவு உதவி பெற்றாலும், அத்தனை உதவிகளும் கடலில் பெய்த மழைபோல பலனற்று போகுமே தவிர, இவர்கள் எந்த வகையிலும் மேல் எழுந்திருக்க மாட்டார்கள். ஆனால், 'இது தவறு...அது தவறு' என வாய்ச்சொல்லில் வீரர்களாக வலம் வருவார்கள்.

சிலரின் பேச்சில் ஏளனம் கலந்திருக்கும். கூர்மையான கத்தியை விட, இவர்கள் வார்த்தைகள் இன்னும் பயங்கர விபரீதத்தை உண்டுபண்ணும். எப்படியும்  வாழலாம் என நினைப்பவர்கள் இவர்கள். இவர்கள் சொல்கேட்டு இணைந்திருப்பதைத் தவிர வேறு எந்த எதிர் கருத்தும் இவர்களிடம் செல்லாது. 'எப்படியும் பேசலாம்' என்பதே இவர்களின் பண்பு. 'இப்படித்தான் பேசவேண்டும்' என நாம் உணர்த்தமுனையும் போது ஒரு பிரளயமே ஏற்பட்டுவிடும். அன்பான எண்ணமும், பண்பான வார்த்தைகளுமே நமது அடையாளம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிடுமூஞ்சி குணத்தினர் பலரை நாம் பார்த்திருப்போம். புன்னகை என்பது மருந்துக்கும் இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது.  ஒரு சில நேரங்களில், " அவனிடம் பார்த்து பேசுங்கள். அவன் சரியான சிடுமூஞ்சி" என பாதிக்கப்பட்ட சிலர் நம்மை எச்சரிப்பதும் உண்டு. அவ்வளவு புகழ் பெற்றுவிட்டார் அவர் என இதற்குப் பொருள். சில நாட்கள் மட்டுமில்லாமல், வாழ் நாள் முழுவதுமாக இந்தக் குணமுடனே சிலர் இருப்பது சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. பாவம் அவர்தம் குடும்பத்தினர். எப்படித்தான் தினமும் அவரோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்களோ என அவர்கள் மேல் நமக்கு பரிதாபமும் எழும். அருகில் சென்று அதுபற்றி கேட்டால், " அது பழகிப் போச்சுங்க...." என்பார்கள்.

எனக்குத் தெரிந்த சுவாமிஜி ஒருவர், இது அவர்களின் ஜாதக அமைப்பு என்றார். 'சிடுசிடு கடுகடு' என இருப்பது அவர்களின் பிறந்த நேர பலன்கள் என்றார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது இப்படி சிடுமூஞ்சி மனிதர்கள் செயலை ஜாதகத்துடன் சம்பந்தப்படுத்துவது. இதில் எவ்வளவு உண்மை மறைந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், எல்லோர் குணங்களையும் இப்படி ஜாதக, கிரக நிலைகளுடன் தொடர்பு படுத்திவிடலாமே....

நாம் கடந்து வந்த பாதையில் இன்னொரு வகையினரையும் பார்த்திருப்போம். எதைச் செய்தாலும், அதில் 'ஒரு பங்கு' மூளையைக்கூட உபயோகிக்காமல் செய்வார்கள். 'ஏதோ செய்தோம் நம் பங்குக்கு ...' என வாழ்ந்து கொண்டிருப்போர் அவர்கள். யோசித்து செய்யும் குணம் இவர்களிடம் இருக்காது. ஒரு சில செயல்களில் செய்தபின் வருந்தும் நிலையும் தோன்றும்.  ஆனால், அது தற்காலிகமே. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பழையபடி தங்களின் வழக்கமான வாழ்க்கையை தொடர்வார்கள். இப்படி நான் கண்டவர்களில் பலர் அதுபற்றிய எவ்வித வருத்தமும்  இன்றி மகிழ்வுடனே வாழ்கிறார்கள்.

மனிதர்கள் அனைவரும் சமமல்ல. இது நமக்குத் தெரியும்.   நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ஒருவர் இல்லாததை நாம் உணர்ந்து கொண்டால், அவர்பால் தோன்றும் பல எதிர்மறை எண்ணங்களை  துவக்கத்திலேயே தடுத்துவிடலாம். சிலருக்கு இயற்கையிலேயே எல்லாத் திறமைகளும் வந்துவிடுகிறது. சிலருக்கு வாழ்வின் அனுபவங்கள் அத்திறமைகளை அளிக்கின்றன. வேறு சிலர் வெறுமனே வாழ்ந்து மறைகிறார்கள். இதில் குறை சொல்ல ஒன்றுமில்லை. இந்தக் கலவைதான் உலகம் .

பெற்றெடுத்த சில மணி நேரத்தில் குழந்தையை வீதியில் வீசிச் செல்லும் பெற்றோர்களும் உண்டு. தங்கள் உயிருக்கும் மேலாய் பாதுகாத்து எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் பெற்றோரும் உண்டு. அதேபோல, காலமெல்லாம் கனிவுடன் பெற்றோரை போற்றிப் புகழும் பிள்ளைகளும் உண்டு,  அடித்தாலும் உதைத்தாலும், பெற்றபிள்ளையே கதியென காலத்தைக் கழிக்கும் பெற்றொரும் உண்டு.

இதில் சாந்தமிகு கருத்தொன்றும் உண்டு, எதிர்மறை குணமுடையோர்  எண்ணிக்கையில் குறைவு. ஆக, இன்னும் இவ்வுலகில் தெய்வத்தன்மை நின்று நிலை நாட்டுகிறது என துணிந்து கூறலாம்.




No comments:

Post a Comment