Sunday 30 December 2012

தமிழில் பேச முயற்சிக்கும் குழந்தைகள். . .

“உனக்கு தமிழில் பேச வரவில்லை. எனவே உனக்குத் தெரியாத தமிழில் நீ பேச முயல வேண்டாம். ஆங்கிலத்திலேயே பேசு..” என சிலர் குழந்தைகளிடம் சொல்கின்றனர்.

 இது தவறென்று எனக்குப் படுகிறது.

சரிவர பேசத்தெரியாவிட்டாலும், பேச முயற்சிக்கும் குழந்தைகளை இப்படிச் சொல்லி, அவர்களின் ஆர்வத்தை முலையிலேயே கிள்ளி விடுவது எந்த விதத்தில் சரி?

இப்படிச் சொல்பவர்கள் மூலமா தமிழ் வளரப் போகிறது? என்னவோ இவர்களால்தான் தமிழ் வாழ்வது போல அல்லவா அலட்டிக்கொள்கிறார்கள்.

தமிழில் பேச முயற்சிக்கும் அனைவரையும் வரவேற்று, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிது படுத்தாது அவர்களின் தமிழார்வத்தை ஊக்குவிப்பதே சிறந்தது. இப்படித்தானே நாமும் ஆங்கிலம் கற்றுக்கொண்டோம். 

"அன்பில் விளைந்த ஆரமுதே
ஆழியில் கண்டெடுத்த நல் முத்தே"
என  பெரியோர்கள்  கவிதைகள்  புனைவதில் பயனில்லை.

காலத்தாலும் அழிக்க முடியா தமிழ்க் கல்வி எனும் அருஞ்செல்வத்தை பிள்ளைகள் பெறச்செய்வதே ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரின் இலக்காக இருக்கவேண்டும். 

ஒரு காலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமாக தமிழ்ப் பள்ளிகள்  இருந்ததாக கேள்விப் படுகிறேன்.  ஆனால், தற்சமயம்  சுமார் 523 பள்ளிகள் மட்டுமே மலேசியாவில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.  இந்தச் சரிவு தொடர்ந்தால், சில வருடங்களில் இன்னும் பல பள்ளிகள் காணாமல் போகும் என யூகிப்பதில் தவறொன்றும் இருக்கமுடியாது. அதுவும் ஆரம்ப பள்ளி எண்ணிக்கை அவை. 

இடை நிலைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி கற்பிக்கும் வகுப்புக்கு போதிய தமிழ் மாணவர்கள் வருவதில்லை என்றொரு தகவலும் வெளிப்படையாக தெரிய வருகிறது.  

 நம் நாட்டில் இப்படி கவலைக்கிடமான ஒரு சூழ்நிலையில் தமிழ் மொழி இருந்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment