Monday 31 December 2012

புத்தாண்டு பிறக்கிறது. . .

ஒவ்வொரு ஆண்டினையும்  போல இவ்வருடமும் நடக்கவிருக்கும் அனைத்தும் நன்மையாகவே இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.

முடிகின்ற ஆண்டின் தொடக்கம் சற்று மந்தமாகவே இருந்தது. இரண்டாவது மாதத்தில் எனது இனிய நண்பரின் மரணம் பெரிய சோகத்தைத் தந்தாலும், தொடர்ந்து வந்த மாதங்களில் நிலைமை சீர் படத் தொடங்கிவிட்டது. ஆனாலும், நோயின் அறிகுறிகள் ஏதுமின்றி அவர் திடீரென மறைந்தது நம் வாழ்வு நிலையற்ற ஒன்று என மீண்டும் நிரூபித்திருக்கிறது.

புது வருடம் நம் எல்லோரையும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவுகலத்தின் பயணத்தை தொடர்வோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் இங்கு விஜயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இது ஜாலியாக பொழுது போக்கும் இடம். பிரசினைகளில் இருந்து விடுபடும் இடம். அப்படித்தான் நான் இதை துவங்கினேன்.

ஸ்ட்ரெஸ், டென்ஷன்  என்பதில் இருந்து விடுபட  பதிவுகள் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களுக்காக அல்ல, எனக்கு நானே எழுதிக்கொண்டவை.  எடுக்கும் புகைப்படங்களை பத்திரப்படுத்தும் ஒரு ஆல்பமாக இது முன்பு இருந்தது.

வந்து சேர்ந்த நண்பர்கள் விரும்பிக் கேட்டதினால் என் மனதில் தோன்றியதையும் அவ்வப்போது பதிவில் சேர்த்துக்கொண்டேன். குறையும் நிறையும் நண்பர்களிடம் இருந்து வர வர மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது ஏதொ ஒரு வழியாக சில பாராட்டுக்களும் வரத் தொடங்கி இருக்கின்றன. ஆயினும் ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். இது அறிவுரை களம் அல்ல. என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன், அவ்வளவுதான்.

இரட்டை வேட படங்கள் எடுப்பது எப்படியென மின்னஞ்சல் வழி கற்றுக் கொண்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், புதுப் புது கோணங்கள் தெரிய வரும். நீங்கள் முப்பது நிமிடங்களில் கற்றுக்கொள்ளும் இது, முப்பது வருடங்களாக நான் மெள்ள மெள்ள   செய்து பழகியதாகும். "அப்பியாச வித்தைக்கு அழிவில்லை" என்பார்கள். எனவே, தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருப்பது நல்லது.

புளொக்ஸ்பொட் பதிவுகளை தொடங்குவது மிக எளிது. தமிழில் எழுதுவது கூடத்தான். ஆனால், சட்டத்துக்குட்பட்டு இருப்பது நலம். " டோன்ட் கோ டு
  பெட் வித் ப்ரைஸ் ஒன் யுர் ஹெட்" என்று சும்மாவா சொன்னார்கள்...? அறை குறையாக கற்பனை செய்துவிட்டு பதிவுலகில் காலெடுத்து வைத்தால் கல்லடிக்கு பதில் சொல்லடி வந்து விழும் என்பதை நினைவில் கொள்ளவும். 

எனவே சில மணி நேரங்களை செலவிட்டு மற்றவர்களின் பதிவுகளை படியுங்கள். ஒரு அடிப்படை 'கான்செப்ட்' உங்களுக்கு தெரியவரும். உங்கள் பாணியில் பின்பு நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்குங்கள்.
பொதுவாக அமைதியான சூழ் நிலைகளிலேயே நாம் பதிவுகள் எழுதுவதால், மனமும் அதற்கேற்றார்போல் அமைதியாகிவிடும்.  அப்புறம் என்ன.... வெற்றி நிச்சயம் உங்களை ஆதரித்து அணைத்துக் கொள்ளும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment