Friday 14 December 2012

மாயன் கணக்கில் உலகம் அழியுமா...?

பல திசைகளிலும் பரவலாக பேசப்படும் ஒரு தலைப்பு, 21.12.12ல் உலகம் அழியுமா? என்பதே...

மாயன் என்றொரு இனம் 3500 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அது கடந்த 15ம் நூற்றாண்டோடு அழிந்துவிட்டதெனவும், அவர்களின் காலண்டர் படி உலகம் இன்னும் சில தினங்களில் அழியப்போகிறதெனவும் பலதரப்பட்ட செய்திகள்.


வானொலியில், தொலைகாட்சியில், இன்டெர்நெட்டில் என அனைத்து ஊடங்களிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படும் ஒன்றாகி இருக்கிறது இந்தச் செய்தி.

உண்மையில் நாம் அந்த அழிவை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா...? என்னால் நம்ப முடியவில்லை.  காரணம், என் நினவுக்குத்தெரிந்து உலகம் அழியப்போகிறதென்று நான் கேள்விப்படும் 'பத்தோடு பதினொன்றாவது' தகவல் இது.

1974ம் ஆண்டு நான் பள்ளியில் படிக்கும்போது 1980ல் உலகம் அழியப் போகிறது எனும் செய்தியை முதன் முதலில் கேள்விப்பட்டேன். அடுத்து 1999ல். அதன் பின்னும் கூட இந்த சந்தேகத்தை பலரும் பேசியவண்ணமே இருந்தனர். அத்தனையிலும் இருந்து தப்பித்த இந்த உலகம், இப்போது இன்னொமொரு பெரும் சர்ச்சையில்  மாட்டிக்கொண்டிருக்கிறது.

எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி, " உண்மையில் இது நடக்கத்தான் போகிறதா...?". "புலி வருது, புலி வருது.." என இருமுறை ஏமாற்றப்பட்டவுடன், நிஜப்புலியையே நாம் நம்பாமல் பலியாகப்போகிறோமா...? உலகம் உண்மையில் அழியத்தான் போகிறதா...?

வலைத்தளத்தின் தேடுதலில் அறிவுக்கு உகந்ததாக ஏதும் உள்ளதா என பார்க்க ஆர்வம் கொண்டேன். விஞ்ஞானிகளை விட புத்திசாலிகளாக, கட்டிடக்கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், கணித சூத்திரம் போன்ற எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக மாயன் இனத்தவர் இருந்ததற்கான சரித்திர சான்றுகள் பற்றி ஏற்றுக்கொள்கின்றனர் இன்றைய அறிஞர் சமுதாயம்.

நடைமுறையில் இருக்கும் நம்முடைய காலண்டர் போலவே அவர்களுக்கும் இருந்ததென்றும், அது 21.12.2012ல் சரியாக 11.11.11மணியளவில் முடிவடைகிறதென்றும், இதுவே உலகம் அழியப்போவதற்கான பிரம்மாண்டமான அறிகுறி எனவும் படித்தோர் முதற்கொண்டு பலரும் கருதுகின்றனர். ஒருவேளை, அப்படி இல்லாவிட்டாலும் மாபெரும் பேரிடர் அதனைத் தொடர்ந்து எண்ணிலடங்கா உயிர் பலி் இந்த உலகத்தை திக்கு முக்காடச் செய்யும் என சொல்கின்றனர். இதுவே பலரின் கலக்கத்துக்கான எல்லாம்.

இந்தத் தகவல்களின் அடிப்படையிலா இவ்வளவு பதற்றம்...?

தொலைத் தொடர்பு சாதனங்களின் நவீன முன்னேற்றத்தில் இருக்கும் சில "வீக்னஸ்களில்" இது போன்ற மிக விரைவாக பரவுகிற தகவல்களும் ஒன்று.

என்னைக் கேட்டால், 1999ன் இறுதியில் கம்ப்யூட்டர் சமூகத்தினருக்கு நேர்ந்த அதே போன்றுதான் இந்த நேரத்திலும் நடக்கப் போகிறதென்பேன். டிஜிட்டல் துறையில் கணினி 1999தோடு முடிவடைந்துவிட்டது. பின்னர் 2000ம் என்னும் நான்கு இலக்கத்துக்கு நகர்ந்த போது தோன்றிய அதே மாறுதல்கள் தான் இதிலும் நடக்கவிருக்கிறது.

ஒரு காலண்டர் முடிவடையும் அதே நேரம் மற்றொன்று "பூஜியம் ஒன்று" என தொடங்கும். அவ்வளவே...

No comments:

Post a Comment