Wednesday 12 December 2012

பெருந்தலைவர் காமராஜ் நினைவு இல்லம். . .

கடந்த ஆண்டு தமிழ் நாட்டுப் பயணத்தின் போது பெருந்தலைவர் காமராஜ் நினைவு இல்லத்திற்கும் சென்று வந்தேன். திரு ரவி மற்றும் அண்ணன் சந்திரசேகரன் ஆகிய இருவரும் நினைவு இல்லத்தில் காலடி எடுத்து வைத்தது முதல் சுற்றிப்பார்த்து வெளியே வரும் வரை நல்லதொரு தரமான நேரடி வர்ணனை மூலம் என்னை அசர வைத்தனர். முழு ஈடுபாட்டோடு அவர்கள் விளக்கிய பல விசயங்கள் ஐயா காமராஜ் மேல் இருந்த மரியாதையை பல மடங்கு கூட்டிவிட்டது.

'கிங் மேக்கர் ' ஆக ஒரு காலத்தில் இந்திய தேசிய அரசியலை அலங்கரித்தவர் காமராஜ் அவர்கள். வீட்டினுள் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பலவும் இருக்கக் கண்டேன். ஒவ்வொரு படத்தின் அடியிலும் அந்தந்த நிகழ்ச்சிகளின் விளக்கமும் புதிதாக அவரைப்பற்றி தெரிந்து கொள்வோருக்கு உதவியாய் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவர் வசித்த அந்த இல்லத்தில் ஒரு அறை மட்டும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தனது கடைசி காலத்தில், அவர் உயிர் நீத்த அந்த கடைசி தருணத்தில் அவர் படுத்திருந்த படுக்கையும் பொருட்களும் அப்படியே பாதுகாக்கப்பட்டு அங்கு செல்வோருக்கு அவரின் எளிமையான வாழ்க்கையையும் மக்களுக்காகவே அவர் வாழ்ந்த அந்த உன்னத நிலையையும்  விளக்க வைக்கப்பட்டிருந்தது.

பல நாடுகளின் தலைவர்களும் அவரோடு நெருக்கமாக இருந்திருக்கின்ற அத்தாட்சிகள் நிறைய அங்கிருந்தன. புகைப்படங்களைத் தவிர்த்து, உலகத் தலவர்களுடனான இவருடைய கடிதப் போக்கு வரத்து, இவர் திறந்து வைத்த பல நிகழ்வுகளின் போது இவர் பயன் படுத்திய கத்தரிக் கோல்கள், இவர் உபயோகித்த ஆடைகள் முதற்கொண்டு பொருட்கள் பலவும் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீண்ட கதையுடன் அங்கிருப்பதை என்னால் உணர முடிந்தது.

பணியில் அன்று அங்கிருந்த பொறுப்பாளர்கள் என்னை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. இது ஒருவகையில் எனக்கு பெருத்த ஏமாற்றமே...   பொதுவாக பயனுள்ள ரசிக்கும்படியான புகைப்படங்களை மற்ற அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நான், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரின் இல்லத்தில் இருந்த அருமை பெருமைகளை புகைப்படங்களாக என்னோடு எடுத்து வர இயலாமல் போயிற்று. நிச்சயம் ஒரு நியாயமான காரணம் இருக்கும், அதனாலேயே புகைப்படம் எடுப்பதைத் தடுக்கிறார்கள் என்று என்னை நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.








No comments:

Post a Comment