Showing posts with label special photos by rajpow. Show all posts
Showing posts with label special photos by rajpow. Show all posts

Monday, 31 December 2012

2012ல் மறக்க முடியாதவை. . .

அருமை நண்பரின் இழப்பு.. . .


 1978ல் இருந்து எங்களின் நட்பு தொடர்ந்து வந்ததென்றாலும், கடந்த பத்தாண்டுகளாக தினமும் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இருவரும் எதையாவது கலந்து பேசிக்கொண்டிருப்போம்.  கம்ப்யூட்டர் சம்பந்தமான விசயங்களைத் தெரிந்து கொள்வதில் ரொம்பவும் ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வமிகுதியால் தனியே வலைப்பூ ஒன்றும் தொடங்கி எழுதி வந்தார்.

இலக்கியத்தில் அதுவும் இதிகாசத்தில் அவருக்கு சந்தேகங்கள் அதிகம். ஒவ்வொரு நாளும் எதையாவது கேட்டுக்கொண்டோ அல்லது அவர் காதில் விழுந்தவைகளை விவாதித்துக்கொண்டோ இருப்பார். ராம பிரானும் ராவணனும் அவர்கள் முன் பிறவிப் பயனாகவே ராமாயனத்தில் தோன்றினர் என்றார் ஒரு நாள். அடுத்தனாள், உறவுகள் பாசத்தால் பிணைக்கப் பட்டிருக்கின்றன. பசம் போயின் இவ்வுலகுக்கு வந்த பலன் கிட்டும் என்று சொல்லி ஆச்சரியப் பட வைத்தார். இதுபோல அவர் சொன்ன இன்னும் எவ்வளவோ நுணுக்கமான விசயங்கள் அவருடன் நெருக்கமாகப் பழகியோருக்குத் தெரியும்.


 பல இடங்களுக்கும் ஒன்றாகவே சென்று வந்தோம். பசியைத் தாங்கமாட்டார். எல்லா வகை உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவார். உணவுகளில் பிடிக்காதது குறைவு. உணவைப்போலவே, அவருக்கு நண்பர்கள் ஏராளம். முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமும் கலகலப்பாக பேசி அவர்களின் நட்பை சம்பாதிக்கும் குணம் இவரிடம் இருந்தது. முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு.

"அதெப்படி செல்வம்? எப்படி உங்களால என்ன நடந்தாலும் இப்படி முகத்தை வச்சிக்க முடியுது? " என ஒரு நாள் வினவினேன்.

 " அட, எல்லாம் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் ..." எனச் சொல்லி சிரித்தார்.



ஓய்வு நேரங்களில் சினிமாவிற்கு செல்வதை வழக்கத்தில் கொண்டிருந்தோம். பொதுவாக ஆங்கில படங்களுக்கு புதன் கிழமைகளில் செல்வோம். அவரிடமிருந்த பிளாஸ்டிக் அட்டைக்கு  ஒரு விலையில் இரு டிக்கட்டுகள் கிடைக்கும். அப்படி பல படங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு நாள், வேறு யாரும் இல்லாததனால், எங்கள் இருவருக்காகவே ஒரு ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது. அந்த நாளை நினைவில் நிறுத்த நான் அவரையும், அவர் என்னையும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலிருப்பது அதில் ஒன்று.



ஆபத்து அவசரங்களின் போது ஓடோடி வந்து உதவுவதில் அவருக்கு நிகர் அவரேதான். அப்படி அவருடைய உதவிகளைப் பெற்றோர் ஆயிரத்துக்கும் அதிகமானோர். சில நேரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும், " நீ ரெடியா இரு. நாம ஒரு இடத்துக்கு போறோம்... ". இதன் பொருள், யாருக்கோ உதவி தேவைப் படுகிறது, போகும் போது என்னையும் அழைத்துப் போகிறார் என்பதே.


மின்சாரம், இலெக்ட்ரோனிக், தண்ணீர் பம்புகள், வாகன பழுதுகள் இன்னும் இது போன்ற பலவற்றிலும் இவர் சிறந்தவராக மின்னினார். மற்ற சமூக பிரசினைகளுக்கு என்னிடம் கலந்து கொள்வார். உண்மையில் இவர் பல திறமைகளை தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு
தமிழ்  'மெகாய்வர்' என்பது போலத்தான் இருந்தார். " ஒன்று முடியாவிட்டால் இன்னொன்றை செய்துபார். அதுவும் முடியவில்லை என்றால் அடுத்ததுக்குப் போ..." என்பது அவருடைய கொள்கை. 


இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் அவர் அரசியல் கட்சியொன்றில் சேர எண்ணம் கொண்டிருந்தார். எவ்வளவு தடுத்தும் அவர் அதை மற்றவர்களுக்கு செய்யும் சேவை என திடமாக கூறி ஒரு கிளைத்தலைவராகவும் ஆனார். சேவைகள் தொடங்கின. பல வேலைகள் அவரைத் தேடிவந்தன. பலரும் அவரை எதிர்பார்த்திருந்தனர். புகழ் அவரை அனுகத்தொடங்கியது. அரசியலிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ந்து பணியாற்ற காலம் இடந்தரவில்லை. 56வது வயதில் காலமானார். 34 வருடங்கள் தினமும் நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பில் இருந்த ஒருவர் திடீரென மறைந்து விட்டது ஒரு பேரிழப்பு எனக்கு. 

 ( Selvam @ Kumar @ Salivakumar... 22 days before his death... )


உலகில் எதுவும் நிலையல்ல, 
யாரும் நிலைப்பதில்லை
தெரிந்ததுதான்....
என்றாலும், 
மனம் ஏற்றுக்கொள்ள 
சிரமப்படுகிறது
 சில நேரங்களில்....

Saturday, 10 November 2012

சொந்த பந்தங்களைச் சந்திப்போம்...

விஞ்ஞானம் வளர வளர நம் வாழ்வில் நடக்கும் பலவும் அதற்கேற்றாற்போல் மாறி வருகின்றன. சிறு பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரை ஏதாவதொரு மின்னியல் பொருளைக் கட்டிக்கொண்டு நேரத்தை வீணாக்கி வருகிறோம். கைப்பேசி, கணினி மற்றும் மின்னியல் விளையாட்டுகள் என நேரிடையான சமூகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு வீண் பொழுது போக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எதிர்வரும் தீபத் திருநாளிலாவது, அதுபோன்ற அடிமைச் செயல்களுக்கு ஓய்வு கொடுத்து நம் உற்றார் உறவினர்களை சென்று சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொள்வதுடன் நமது பாரம்பரிய கலாச்சார நடப்புகளுக்கு ஆதரவு நல்குவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்...


மேலே படத்தில் : டாக்டர் அருள் துரைராஜா


Friday, 9 November 2012

அங்கும் மழை, இங்கும் மழை. . .

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக வட கிழக்கு பருவ மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களைத் துண்புறுத்தி வருகிறது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நான் தமிழகத்தின் சென்னையில் பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது. ஆனால் அன்று, அதிக உஷ்ணத்தினாலும் தூசியினாலும் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போது நிலைமை வேறு.

பல இடங்களில் கன மழை காரணமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதுடன் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும் இயங்கவிடாமல் செய்துவிட்டது. இறந்தோர் எண்ணிக்கை ஐம்பதை தொடுகின்றது. நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது மனதுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் சிறப்பாக வளர்ந்தாலும் நம் பூர்வீகம் அங்குதானே... அதனால் ஏற்படும் மனச்சலனமோ ..? பெரியோர் பலரும் தமிழ் நாட்டு நிலை குறித்து கவலைப் படுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தானே புயலால் வீடு இழந்து தவிப்போர் எண்ணிக்கையும் அதிகம். இயற்கைச் சீற்றங்ளால் மக்கள் பாதிக்கப் படும் நேரம் அரசாங்க நிவாரணப் பணிகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்து தமிழக அரசு எடுத்திருக்கும் துயர் துடைப்பு சேவையை பாராட்டத்தான் வேண்டும்.

தண்ணீர்  தண்ணீர் என மற்ற மாநிலத்தவரை எதிர்பார்க்கும் நேரம், இப்படி தேவைக்கும் அதிகமாக வெள்ளப் பெருக்கில் மக்கள் அவதிக்குள்ளாவது சரி வர விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று.

இம்முறை மலேசியாவிலும் பல இடங்களில் இது போன்ற சேதங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். கால்வாய்களில் மழை நீர் நிரம்பி காய்கறி தோட்டங்களில் புகுந்து பல லட்சம் வெள்ளி இழப்புக்களை ஏற்படுத்தியவாறு உள்ளது.


நான் வசிக்கும் பகுதியான இங்கேயும் கடந்த மூன்று வாரங்களாக தினந்தோறும் மழை. அதுவும் அந்தி மழை. அந்தி மழை அழுதாலும் விடாது என்பார்கள். அது மிகச் சரி. மாலையில் செய்யும் எல்லா காரியங்களும் தடைபடுகின்றன.


வடிகால் பாசனத்துறை நம் நாட்டில் அவ்வளவு மோசமாக இல்லாதிருப்பதால் ஆங்காங்கே மட்டுமே வெள்ளத்தினாலான பாதிப்புக்களைப் பார்க்கிறோம். மற்றபடி,  நாற்பது  வருடத்திற்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை.

அந்தக்  காலத்தில்,  நம் சமூகத்தினர் பலரும் பால் மரம் வெட்டும் தொழிலாளிகளாக இருந்தோம். மழை பெய்தால் வேலை இல்லை எனும் நிலையால், வருமாணம் பாதிக்கும். அதனால் மழை என்றாலே அப்படி ஒரு பயம் பலருக்கும்.


கொஞ்சமோ அதிகமோ...  மழை, செடி கொடி மரங்களின் பசுமையை வளர்க்கிறது. வற்றி வரும் ஆறு, குளம், கால்வாய், நதி என நீர் வளங்களை நிறையச் செய்து நமது எதிர் காலத் தேவையை பூர்த்தி செய்கிறது. 

Thursday, 21 June 2012

அவசர உலகில் பெண்கள்...

இன்றைய அவசர சூழ் நிலையில் நம் சமூகப் பெண்மணிகள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன.

பிரச்சினைகளுக்கு சரியான தீர்வெடுக்கும் திறன் உள்ளதா என்பது பெரிய கேள்வியாக பலருக்கும் படுகின்ற அதே நேரத்தில், தகுந்த முடிவெடுக்க முடியாமல் திணறுவோர் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

அவசரத்தில் முடிவெடுத்து கணவனை பிரியும் இளம் மனைவிகள் பின்பு தங்களின் குழந்தைகளோடு மனம் வெந்து வாழ்க்கையில் கஷ்டப் கிறார்கள். பாதிப்புகள் பல வர நாமே காரணமாகிவிடக்கூடாது.

ஆச்சரியம் மேலிடும் உண்மை எது தெரியுமா?

பார்க்கும் பத்து இளம் மனைவிகளுள் இருவர் சாதாரணப் பிரச்சினைகளினால் கணவனைப் பிரிந்து பிள்ளைகளோடு சிறமப் படுபவர்களே.

பெண்கள் பேசவேண்டிய நேரத்தில் பேசுவதும் பேசத் தேவையில்லா நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதுமே அவர்கள் வாழ்வினை உயர்த்தும். உணர்ச்சிவயப்பட்டு கொட்டித் தீர்த்திடும் வார்த்தைகள் அவர்களுக்கே பல பாதிப்புகளைக் கொண்டுவந்திடும் என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் ஒருவித அசாத்திய துணிச்சலில் எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்பு அல்லல் படுகிறார்கள்.

அன்மையில் நடந்த ஒரு ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவை:-
இப்படி தனித்து விடப்படும் பலர் சில காலம் தங்களின் தனிமையை ரசிக்கிறார்கள்.
புதிய ஆண் துணைகளுடன் கைபேசியில் காலத்தை செலவிடுகிறார்கள். அனேகமாக எல்லா பெண்களுக்கும் வேலையில் இருப்பதால், பொருளாதார சிக்கல் அவர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
ஆயினும், தங்களுக்கு வயதாகும் நிலையை உணரும்போது, தங்களுக்கு கைபேசி, சாட், டெலிபோன் நண்பர்கள் உற்றவர்களாகவும், உறவினர்களாகவும் ஆகிட முடியாதென படும் போது, தங்களின் கணவனுடனான பிரச்சினையை வெறு விதமாக கையாண்டிருக்கலாமோ என எண்ணுகிறார்கள்.

அதனால்தான் சொல்கிறோம், ஆத்திரத்தில் முடிவெடுத்து அமைதியாக வருத்தப் படுவது பெண்களுக்கு இழுக்கு என. இதை பெண்கள் உணரும் காலம் என்றோ...?