Wednesday 30 May 2012

ஃபேஸ் புக் என்னும் முகநூல் . . .

இன்றைய நவீன காலத்தில் பல பெற்றோர்களுக்கு கம்ப்யூட்டரின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.

வசதி இருந்தால்தான் கம்ப்யூட்டர் வாங்க முடியும் என்கின்ற காலம் போய்விட்ட பின்பு கூட பலர் தங்கள் வீடுகளில் கம்ப்யூட்டரினை அறிமுகப்படுத்த தயாராக இல்லை. 

தப்பான, தவறான பல அதில் இருப்பதால் பிள்ளைகள் கெட்டுவிடுவர் என்கின்றனர். இது ஒருவகையில் உண்மையே...

அதிலும் ஃபேஸ்புக் என்னும் முகநூல் மேல் மோகம் வந்த பின் பிள்ளைகள் கெட்டுத்தான் போகிறார்கள். பாடங்களில் இருக்கும் கவனம் சிதறுண்டு போவது வெளிப்படையாக தெரிகிற ஒன்றுதான். பள்ளி மாணவர்களுக்கு முகநூல் எவ்விதத்திலும் உபயோகம் இல்லை.

பதினெட்டு வயதுக்கு மேல் என குறிப்பிட்டிருந்தும் ஏனோ இளம் வயதுக் குழந்தைகளும் பொய்யான பிறந்த தேதியிட்டு அங்கு சென்று ஆட்டம் போடுவது சாதரணமாக நடந்து கொண்டிருக்கிறது இப்போது. எண்ணிலடங்கா ஒன்லைன் விளையாட்டுக்கள் அங்கிருப்பதால், அதிக நேரத்தை அங்கே செலவிடுகிறார்கள். இது பின்பு ஒருவித வெறியாகிறது.  இவர்களை மேற்பார்வையிட வீட்டில் சரியான ஆள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

 ஏன் 21வது வயதில் சாவியினை பரிசாக கொடுக்கிறோம்? காரணம் அன்றுதான் இளைஞர்கள் முறையாக  சிந்திக்கத் தொடங்குகிறார்கள் என்னும் கருத்தினை எல்லோரும் ஏற்றுக் கொள்வதனால்தான்.

ஆயினும் முகநூலின் வயதுக் கட்டுப்பாட்டை குழந்தைகள் மீற பெரியவர்களே சில சமயங்களில் அனுமதிக்கிறோம். அப்புறம் எப்படி பிள்ளைகளை குறை சொல்ல முடியும்,  சரிவர கல்வியில் அவர்களுக்கு  நாட்டம் இல்லாத போது??

முன் பின் அறிமுகமில்லாதவர்களோடு பழக்கம், அதனால் ஏற்படும் அனாவசிய பிரச்சினைகள், வயதுக்குமீறிய எண்ணங்கள், வரம்பு மீறும் வார்த்தைகள், ஆபாசப் படங்கள், பேங்க் சேமிப்பின் எண்கள், வீட்டு முகவரி போன்ற அபாயகரமான தகவல் பரிமாற்றம்... இப்படி எதுவுமே சரியில்லை.

பெற்றோர்களின் ஞாயமான கவலைகள் இவை. கட்டிக்காக்கும் குடும்ப கௌரவம் என்னவாகும் என்று பெற்றோர் கேட்பது விளங்குகிறது.

இதற்கு ஒரே தீர்வு, பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் முகநூலில் இருந்து தவிர்க்கப்படவேண்டும். பக்குவமில்லா அவர்களின் கம்ப்யூட்டர் நேரத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் முக நூலில் உலா வருவதை ஆதரிக்கின்றனர். இது சரியல்ல. 21 வயதுக்குப் பின் அவர்களுக்கு நிறைய நேரமுண்டு இது போன்ற வற்றை எண்ணிப்பார்க்க.

எஸ்பிஎம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே இவர்களின் கவனத்தில் இருக்கவேண்டுமே அன்றி, வேறு எதுவும் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லாது  எனபதனை அவர்கள் உணரச்செய்யவேண்டும்.

No comments:

Post a Comment