Monday 21 May 2012

பேயும் நாயும். . .

நாயின் கண்களுக்கு பேய் தெரியுமாம். அதிலும் கருப்பு நாய் என்றால் தெளிவாகத் தெரியுமாம், சொல்கிறார்கள்.
 
முதலில் பேய் உண்மையா இல்லையா என்றே தெரியாது.  இதில் நாயின் கண்களுக்கு பேய் தெரியும் என்றால் எப்படி நம்புவது?

நாயே வந்து சொன்னால் தான் உண்டு.

தற்சமையம் கார்டூன் நாய்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. நிஜ நாய்கள் எப்போது பேசத் தொடங்குகின்றனவோ அப்போது தெரியும் உண்மை.

அது சரி, "நாய் கண்களுக்கு பேய் தெரியும் போது, பேய்க்கு நாய் இருப்பது தெரியாதா?" என கேட்கிறார் என் நண்பர்.

ஊளை இடும் நாய்கள் பயத்தை தோற்றுவிப்பவை. அகால நேரங்களில் நாய்களின் ஓலம் கேட்க அச்சம் கொள்ளச்செய்யும் ஒன்றாக இருந்தது முன்பு. அதற்கு ஒரு காரணம் இருந்தது. 

 நான் தங்கி இருந்த பகுதியில் நாய் ஊளை இடும் போதெல்லாம் அடுத்த நாட்களில் ஏதாவது இறப்புச் செய்தி வரும். அருகாமையில் யாராவது இறந்திருப்பர். அது போன்ற நாட்களில் அக்கம் பக்கத்துக்காரர்கள் " நான் அப்போவே நினைச்சேன்... நாய் ஊளை இட்டுச்சே ராத்திரி...." என பேசிக்கொள்வார்கள். அந்தச் சிறு வயதில் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

எந்த நாய், எங்கே  ஊளை இட்டாலும் பேய் வருகிறது, எமன் வருகிறான் என்பது போன்ற கற்பனைகளே மனதை பயம் கொள்ளச் செய்யும்.

ஆனால், சில வருடங்களிலேயே இதைப்பற்றிய தெளிவு பிறந்துவிட்டது.
 நமக்கிருப்பதுபோல் அவற்றுக்கு கைபேசியோ, வேறு எந்த தொலைத் தொடர்பு சாதனங்களும் இல்லாதிருக்கும்போது, காவல் பணியில் இருக்கும் அவை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள இப்படி ஒலி எழுப்பும் என்பது தெரிந்து விட்டது.

பேய் இருக்கிறதா இல்லையா என்பது எப்போதுமே ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும், இலக்கியத்திலும் பிணந்தின்னும் பேய் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

"கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட"

பொருள் :
"பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி,  குற்றமற்றவளே,  செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார்,  இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி,  கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்தில்,  செறிந்த இருளிற் போய்,  அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும்,  இடாகினிப் பேயானவள்,  அக் குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள் "

 - - நான்மணிக்கடிகையில் வரும் பாட்டிது.

No comments:

Post a Comment