Wednesday 30 May 2012

சொல்லத் தெரிய வேண்டுமே. . .

அனைத்துலக பள்ளியில் ஒரு அதிகாரியாக பணியாற்றிய போது ஒரு நாள்,மாணவன் ஒருவனோடு அவனின் பெற்றோர் எங்கள் பள்ளியின் 'கவுன்சலிங்' ஆசிரியரை சந்திக்க வந்திருந்தனர்.


பிரச்சினையான மாணவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழி திருத்துவது இந்த கவுன்சலிங் ஆசிரியர்களின் கடமையாகும். எல்லோரும் திருந்தி விடுவார்கள் என சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ ஒன்றிரண்டு பேர் சில முன்னேற்றகரமான மாறுதல்களை காட்டினால் போதும் என்னும் நிலை அப்போது. 


"இவன் படிப்பை பாதியிலேயே விடப் போகிறானாம், அடம் பிடிக்கிறான். உங்கள் உதவி நாடி வந்திருக்கிறோம்" என்றார் மாணவனின் தந்தை.

பொறுப்பாசிரியர் பையனைப்பார்த்தார்.

பக்கத்திலிருந்த ஒரு பிரத்தியேகமான அறைக்கு அவர்களை அழத்துச்சென்றார். அங்குதான் வீடியோ கருவியும் பள்ளிப்பிள்ளைகளுக்கான போட்டி விளையாட்டு டேப்புகளும் இருக்கும். அவர்களுக்கு தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிக்காக அவற்றை ஆசிரியர்கள் பயண்படுத்துவர்.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கேசட் ஒன்றை எடுத்தார் ஆசிரியர். அதை வீடியோவில் உள்தள்ளியவாறு,

"தம்பி, இந்த பந்தயத்தைப் பார்" என்றார் அம்மாணவனைப் பார்த்து.

 நெடுந்தூர ஓட்டப் பந்தயம் அது.

"தம்பி, இந்தப் போட்டியில் எத்தனைப்பேர் கலந்து கொள்கிறார்கள்?"

"15 பேர்"

'எத்தனைப்பேருக்கு பரிசு கிடைக்கும்?"

'ஒருவருக்கு மட்டுமே."

 நால்வரும் அந்தப் பந்தயத்தைப் பார்த்தார்கள். மாணவன் சொன்னதுபோல ஒருவர் மட்டுமே போட்டியை வென்றார்.

"தம்பி, ஒன்றைக் கவனித்தாயா? வெற்றிபெற மாட்டோம் எனத் தெரிந்திருந்தாலும் மற்றவர்கள் ஓடுவதை நிறுத்தவில்லை, கடைசிக் கோடுவரை வந்திருக்கிறார்கள் பார்...."

மாணவன் சற்று நேரம் அதை பார்த்தவாறு நின்றான். பின்பு தனது பெற்றோரிடம் ஏதோ சைகை காட்ட, அவர்களும் ஆசிரியரின் கைகளை குலுக்கிவிட்டு விடைபெற்றனர்.

ஒருவருடம் சென்றபின் தற்செயலாக அவனைப் பார்த்துவிட, அவனுடைய தற்போதைய மதிப்பெண்களைப் பார்க்க அவனுடைய வகுப்பின் பதிவினைத் தேடினேன்.

முதல் நிலைக்கு வராவிட்டாலும் முன்பை விட இப்போது முன்னேற்றம் தெரிந்தது.

மாணவர்கள் கேட்கும்விதம் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள்தான்.

அவன் மட்டும் அன்று அடம் பிடித்து "இனி மாட்டேன் " என பள்ளியிலிருந்து விலகி இருந்தால் இன் நேரம் அவன் நிலை???

எண்ணிப்பார்க்க ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

No comments:

Post a Comment