Friday 18 May 2012

வாஸ்து சாஸ்திரம் . . .

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் எனது கருத்தினைக் கேட்டார்.

"  வாசப்படிய மாத்தி இந்தப்பக்கம் வைக்கணுமாம், ஐயா  சொல்றார்... பின் பக்கம் கதவு வேண்டாம், வேணும்னா பெரிய ஜன்னலா வச்சிக்குங்கன்னு சொல்றார். நீங்க கொஞ்சம் வந்து அவருகூட பேசினா எங்களுக்கு நல்லா இருக்கும்..."

'ஐயா' என அவர் குறிப்பிட்டது ஒரு வாஸ்து சாஸ்திர நிபுனரை.

"வேண்டா, நான் வரல. நான் வந்து பேசினா அப்புறம் அவருக்கும் எனக்கும் சண்டைதான் வரும். பலபேரை நான் பார்த்துட்டேன், நான் கேக்கிற ஒரு கேள்விக்கு பத்து பதில்கள தயாரா வச்சிருக்காங்க. நீங்களே பேசி முடிச்சுக்குங்க.." என ஒரேயடியாக சொல்லிவிட்டேன்.

அந்தக் காலத்தில் சூரிய வெளிச்சத்தையும் நல்ல காற்றையும் வீட்டின் உள்ளே கொண்டுவர தங்கள் வசதிக்கேற்ப ஜன்னல்கலையும் வாசல்களையும் மாற்றி வைத்துக் கொண்டனர் அன்றைய மக்கள்.

இப்போது மின் பயன்பாடு சர்வ சாதாரனமாகிவிட்ட பின்னும் இந்த வாஸ்துவின் 'காலம்கடந்த' குறிப்புகளை நாம் இன்னும் பற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.


பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையத் துடிக்கும் பலரும்  இதன் மூலமாக  தங்களுக்கு ஏதும் நல்ல காலம் வராதா என தப்பாக நினைத்துக்கொண்டு 'முயன்றுதான் பார்ப்போமே' என்கின்றனர்.

பொருள் ஈட்டுவதற்கு நல்ல கல்வித்தகுதியும், கடின உழைப்பும், தகுந்த நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சாதகமாக மாற்றிக்கொள்ளும் திரனும் தேவையே அன்றி, வேறு  எவ்வித சம்பந்தமும்  இந்த வாஸ்து சாஸ்திரத்தில்  இருப்பதாக தெரியவில்லை.

வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உங்களை வந்தடைய இறைவனை வேண்டுங்கள். அவன்பால் நம்பிக்கை வைத்து கல்வி, உழைப்பு, மகிழ்ச்சி எனும் வெற்றிப்படிகளில் ஏறுங்கள். முன்னேற துடிக்கும் இளையோருக்கு முற்போக்கு சிந்தனைகளே கைகொடுக்கும்.


அன்றைய  மக்கள் வீட்டை கட்டுவதற்கு வீட்டின் தலைவரைக் கொண்டே, அவரின் காலடியினை அளந்து, அதை 'மோல்ட்' எடுத்து, வீட்டின் ஜன்னல்களோ, சமையல் குளியல் அறைகளோ எங்கெங்கே இருக்கவேண்டும் என முடிவு செய்தனர்.  இது என்றோ கைவிடப்பட்ட ஒன்று. யாரும் இப்போது இப்படி அளப்பதில்லை. அளவெடுக்கும் 'டேப்' பயன்பாட்டுக்கு வந்துவிட்ட பின் இந்த பழங்கால யுக்தி மறைந்து விட்டது.


சமையல் பகுதியை சரியான இடத்தில் அமைக்கவேண்டும் இல்லையேல் அன்னம் தட்டுப்பாடாகிவிடும் என பயமுறுத்துகின்றனர்.


அன்றிருந்தோர் மரக்கட்டைகளை கொண்டு சமையல் செய்தனர்.  சமையல் பாதிக்கா வண்ணம் காற்றுவரும் திசை அறிந்து அடுப்பை வைத்தனர். இன்றோ, எல்லோர் விட்டிலும் "கேஸ்" அடுப்பு உள்ளது. அதிக வெப்பத்தால் நம் உணவு சேதமடைவதுமில்லை, காற்றில்லையே என பூ பூ என ஊதிக்கொண்டிருப்பதுமில்லை. இன்னும் திசை மாற்றம் தேவையா???

அறிவியலுக்கு உடன்படாத, அறிவுக்கும் நடைமுறைக்கும் சாத்தியப் படாத இன்னும்   பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கலந்திருப்பதால் அதை நான் நம்புவதில்லை.

நாம் வசிக்கும் வீடுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தை கொண்டு வந்தால், பின்பு 'தாமான்'களில் இருக்கும் வீடுகள் அனைத்தும் ஒரு கட்டுக்கோப்பின்றி கோணல்களாக மாறிவிடும்.

அதுமட்டுமல்ல, விகிதாச்சாரப்படி இந்த வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி வீடுகளை மாற்றியமைத்தோரில், வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே எனக்குப் படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் என் பக்கத்து வீட்டார் இப்படித்தான் பார்த்து பார்த்து வீட்டின் ஒவ்வொன்றையும் மாற்றியமைத்தனர். ஆனால் அடுத்த வருடமே வேலை மாற்றலாகி வீட்டை காலி செய்து வேறிடத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.

"தப்புத்தண்டா ஏதும் நடந்திடுச்சா, சாமி???"
என சாமி பார்த்தாலும் கூட உண்மை நிலவரம் என்னவென்று இனி கனிக்கமுடியா சூழ் நிலைகள் தோன்றிவிட்ட பின், எங்களூரில் அதில் பலருக்கும் நம்பிக்கை போய் விட்டது.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

No comments:

Post a Comment