Thursday 17 May 2012

மகிழ்ச்சியாக வாழ 3

எண்ணங்களை எளிமையாக்கி, மனதையும் அறிவையும் ஒரே அலை வரிசையில் செயல்பட வைப்பதன் அவசியத்தை நாம் முன்பு பார்த்தோம்.

மகிழ்ச்சியாக வாழ அடுத்து முக்கியமான ஒன்றாகப் படுவது, பணம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என பெரியோர் சொல்லியதாலேயே இதன் மகத்துவம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் இந்நேரம்.

பணம் மிக மிக அவசியம் இவ்வுலகில். உண்மையில் இதுதான் மிக அவசிமானதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அனுபவங்களைக் கருத்தில் கொண்டு பொருள் ஈட்டுவதன் முக்கியத்தன்மையை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

பணம் இல்லையேல் எதுவும் இல்லைதான்... ஆனால், பணமே எல்லாமும் இல்லை.

இப்படி முன்னுக்குப் பின் முரண் போல் படுவதை இன்னும் சற்று அலசி ஆராய்ந்து அதன் தத்துவத்தை நாம் உணரவேண்டும்.

நேர்மையாக பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உண்டு.

வெட்கமும் கூச்சமும் படாதோர் பணமீட்டுவது பற்றி கவலைப்படுவதில்லை. எத்தொழிலானாலும் அதில் நேர்மையோடு நாம் இறங்கும் போது தோல்வி என்பது நிச்சயம் வராது.

 எண்ணித்துணிக கர்மம், துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு என்பதுபோல்,கவனமான திட்டமிடல் தேவை.


இங்கே, "பகல் வெல்லும் கூகையை காக்கை, இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது" என்னும் குறளை நாம் நினைவு கொள்ளுதல் நன்மை பயக்கும்.

பொருத்தமான நேரம், , சரியான அனுகுமுறை இவைகளினால் தொழில் எதுவானாலும் அவற்றில் வெற்றிபெற நமக்கு வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

அகல கால்வைக்காமல் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்ச்சியும் நன்மைகளையே ஈட்டுத்தரும்.

பொருள் சம்பாதிக்க நாம் எடுத்துக்கொள்ளும் இவை ஒருபுறம் இருக்க, கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்களும் பல இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குடும்ப மேம்பாடு எப்போதும் நம் கவனத்தில் இருக்க வேண்டும்.  இதற்கு பணம் மட்டும் போதுமானதல்ல, நமது சேவையும் குடும்பத்திற்கு தேவை.

சிலர், வேலை வேலை என வருடம் முழுவதும் வேலையிலேயே ஆயுட்காலத்தை முடித்து விடுகிறார்கள். வாழ்க்கையின் முக்கால் வாசி நேரம் பணம் தேடுவதிலேயே கழித்து விடுகிறார்கள்.

எதில் எப்படி முக்கியத்துவம் கொடுப்பது என்று உணராதவர்கள் இவர்கள்.

வெளியூர்களில் வேலை பார்ப்போர், பணம் அனுப்பிவைத்துவிட்டால் போதும், குடும்பம் தானாக செழித்தோங்க ஆரம்பித்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். அப்படியல்ல, நீங்கள் உடன் இருந்து உங்கள் குடும்பதினரோடு பாசத்தோடும் பரிவோடும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது போல் நீங்கள் எட்டி நின்று, குடும்பத்தினருக்கு இடும் உத்தரவுகள் உங்கள் குடும்பத்திற்கு போதாது.

தற்காலிக முயற்ச்சியாக இது இருக்கலாம்.  நிரந்தர தீர்வு, நீங்கள் இருக்கும் இடம் உங்கள் குடும்பத்தினரும், உங்கள் குடும்பத்தினர் இருக்கும் இடம் நீங்களும் இருப்பதுதான்.


மற்ற எதிலும் இல்லாவிட்டாலும், பனம் சம்பாதிப்பதில் மட்டும் எல்லோருக்கும் ஒருவித தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.


பொருளீட்டும் பணி முக்கியமான ஒன்று தான். அதிலும், உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி பலரும் உங்கள் குடும்பத்தில் இருந்தால் இந்த தடுமாற்றம் ஞாயமானதாகவே படும். அயராது உழைக்கும் குணமுடையோர் பெருமைப்பட வேண்டியோரே. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


ஆனால், வாழவேண்டிய வாழ்வினை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அதன் சாதக பாதக பலன் களை கவனிக்கும் போது பணம் சம்பாதிப்பதென்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகத்தான் படுகிறதே தவிர, பணமே எல்லாமும் இல்லை. 


மகிழ்ச்சியான வாழ்விற்கு பணமும் தேவை....பணம் மட்டுமல்ல.

No comments:

Post a Comment