Wednesday 20 June 2012

மகிழ்ச்சியாக வாழ. . .

 நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் நாம் அன்போடும் வாஞ்சையோடும் பழகுவது நமது மனதின் பக்குவப்பட்ட நிலையையே காட்டும். இது பாரட்டப்படவேண்டிய ஒன்று.

ஒரு கையை பின்புறம் மறைத்து, மற்றதை முன் நீட்டி உதட்டளவு புன்னகையில் உறவாடுவது துரோகம். பின்பொருநாள்  இதை நினைத்து மனச்சங்கடத்தில் நெளிய வேண்டிவரும்.

இரத்த பாசத்தினால் மட்டுமே பாசம் வளரும் என்பதும் தவறான எண்ணமாகும்.  இப்படி நினைப்போர் எதிலும் குறைகளையே தேடிக்கொண்டிருப்பர். வானமே வலைந்து கொடுத்து வந்தாலும் அதிலும் தூசு தட்டி மாசு காண்பார்கள். என்னவோ பலரின் இயல்பான குணமாக இது இருக்கிறது.'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பதை இவர்கள் உணர்ந்ததில்லையோ...?

வலுவற்ற காரணங்களைக் காட்டி நமது நண்பர்களையும் சுற்றத்தினரையும் உதாசீனப் படுத்திவிடக்கூடாது. கடைசிவரை நம்மோடு நல்லது கெட்டதுகளில் இவர்களே கலந்துகொள்ள வருபவர்கள். 

உறவில் நாம் எடுக்கும் தப்பான முடிவுகள் நம்மை மட்டுமல்லாமல் நம் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும்.
 இங்கு ராமாயண சூழலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்கன் இவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள். ஆனால், குகன், விபீடணன், ஆஞ்ச நேயர் வேறு தாய் மக்கள்.  ஆஞ்ச நேயர் வானரப் படைத்தலைவர். விபீடணன் அரக்கர் குலம். குகன் மீனவன். ஆனால் இவர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகள் போல் பழகி நட்புக்கும் உறவுக்கும் பெருமை சேர்த்தனர்.

பரந்த மனப்பான்மையோடு பழகுபவர்கள் வாழ்வில் வெற்றி அடைகிறார்கள், புகழப்படுகிறார்கள். இவர்கள் காட்டும் உறவின் நேர்மையை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வதால் இவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.

  மகிழ்ச்சியாக வாழ நல்ல நண்பர்களும் உறவினர்களும் அவசியம் தேவை.

No comments:

Post a Comment