Friday 8 June 2012

இலக்கியம் ...

நாம் எங்கே எந்த சூழ் நிலைக்கு மாறினாலும் நம்மோடு உடன் வருவது நமது கலை, கலாச்சாரம், சடங்கு மற்றும் பண்பாடு போன்ற பூர்வீக குணங்களே.

வாழ்வியலின் பலவற்றுக்கு புதுபுது பரிமாணங்களைக் காணும் நாம் தமிழ் இலக்கியத்தில் மட்டும் இன்னும் சற்று பிந்தங்கியே இருக்கிறோம்.

திருக்குறளைச் சொல்லி விளக்குவதற்கு சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னால் இருக்கும் இதிகாசங்களையும், இலக்கிய பொக்கிஷங்களையும் வெளிக்கொணற விழைவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது.

புதுப்பாடல்களா பழைய பாடல்களா, மாமியாரா மருமகளா, கூட்டுக்குடும்பமா தனிக்குடித்தனமா என ஆங்காங்கே நடக்கும் பட்டி மன்றங்களும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐயா சாலமன் பாப்பையா, லியோனி போன்றோரின் பட்டிமன்ற பேச்சாளர்கள் மிகவும் திறமைசாலிகள், நன்கு கற்றவர்கள். கொடுக்கப்படும் நேரம் கருதி குறைத்துப் பேசுகிறார்கள். அவர்களுக்கு சற்று அழுத்தமான தலைப்புகளில் இலக்கிய ரசம் சொட்ட பேச வாய்ப்பளித்தால் அவர்களின் பேச்சுத்திறமையும் மிளிரும் புதைந்து கிடக்கும் நம் இலக்கியச் செல்வங்களும் வெளிப்படும்.

"நாலாயிர திவ்ய பிரபந்தம், நாலடியார், நளவெண்பா, நான்மணிக்கடிகை,  ஐம்பெரும் காப்பியங்கள்" போன்ற தமிழின் உச்சத்தினைத் தொட்ட எழுத்தோவியங்களை பொதுமக்களுக்கு விளக்குவது நமது சமூகத்தின் அறிவுக்கண்களை திறக்க ஒரு வாய்ப்பாகும்.


வேதத்தில் வருகின்ற தர்ம விதிகளைப் புரிந்து கொள்வதற்கும் பின் பற்றுவதற்கும் சிரத்தை எடுத்து சிறு சிறு கதைகளாக, நீண்ட நெடுங்காவியங்களைப் படைத்தனர் நமது முன்னோர்.  சாதாரண மனிதர்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்லப்பட்ட அவைகளே புராணங்கள் எனப்படுகின்றன.


இவற்றை கசடற விளக்குவோர் பட்டியல்தான் தற்போது சுருங்கி வருகிறது.

இணையத்தில் இது போன்றவை இருந்தாலும் கற்றோர் நேரடியாக மக்களைச் சந்தித்து இந்த சேவையைச் அவர்களுக்கு செய்வது தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர்கள் செய்யும் மாபெரும் திருப்பணியாகும்.

1969ல் பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் நான் பயின்ற காலத்தில், திரு சோமசுந்தரம், திரு மணியம், திரு கந்தசாமி போன்றோர் பாடங்களுக்கிடையேயும் பாடங்களுக்குப் பின்னரும் இலக்கியத்தின் சுவையான பகுதிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தது என் நினைவுக்கு வருகிறது இப்போது.

தலைமை ஆசிரியராக திரு விஜயரங்கம் பதவியேற்றிருந்த  அப்போது பள்ளியில் தமிழ்க் கல்வியின் தரம் உயர்ந்திருந்தது.

இன்றும் சில தலைமை ஆசிரியர்களோடு பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கிறது. ஆனால் இப்போது நான் தெரிந்து கொள்வது யாதெனில், பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் படித்துக் கொடுக்கவேண்டிய 'சிலபஸ்' பற்றியே முழு மூச்சாக எண்ணுகிறார்களே தவிர, இலக்கன இலக்கிய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பொது வாழ்விற்கு உபயோகமானவற்றை கற்பதிலும் கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏன், பலர் தினமும் நாளிதழ்கூட வாங்குவதில்லை. இப்படி இருக்க இவர்கள் மூலம் கலை இலக்கிய சமுதாய சேவையினை எப்படி எதிர்பார்க்க முடியும்.

பாடத்தேர்வில் பிள்ளைகளை வெற்றிபெறச்செய்வதே எங்கள் இலக்கு என்கிறார்கள். அவர்கள் பேசும்போது அதிலும் ஒரு ஞாயம் இருப்பது போலவே  படுகிறது.

வாய்ப்புள்ளோரும், வசதி படைத்தோரும் நடிகர் பட்டாளத்தை இங்கே வரவழைக்கும் அதே நேரம், பண்டித பெருமக்களையும் வரவழைத்து அதற்கான செலவுகளை ஏற்று புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.  தமிழும் தமிழ்ச்சமூகமும்  வளர வசதியுள்ளவர்களால் நிச்சயம் முடியும்.

இதனால் மூட நம்பிக்கைகள் குறையும் சந்தர்ப்பமும் உண்டு, நமது அக்கால மூதாதையர்  உலகத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததின் அத்தாட்சிகளையும் தெறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment