Wednesday 6 June 2012

அந்தக் காலத்தில் கம்பியூட்டர் மேஜிக் கிடையாது...



இப்போது யார் வேண்டுமானாலும் அழகிய படங்களாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துவிட முடியும். அறிவியல் அந்த ஆற்றலை நமக்குத் தந்திருக்கிறது.
புதிய வரவுகளான விவேக கைபேசிகள் புகைப்படக் கருவிக்கு நிகராக அருமையான, அபாரமான நுணுக்கங்களுடன் புகைப்படங்களை எடுத்துத் தர ஏதுவாக உள்ளன.
ஆனால், எழுபதுகளிலும், எண்பதுகளிலும், புகைப்படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. செலவுகள் அதிகம். கேமெரா வைத்திருப்பவர் மேல் தனி ஒரு பாசம் வந்துவிடும். அந்த மதிப்பும் மரியாதையும் எங்கோ போய்விட்டது இப்போது. படமெடுப்பது அவ்வளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டதே காரணம்.
1978 ல் பொழுது போக்காக நான் 'இரட்டை வேட' படங்களை எடுக்கத் தொடங்கி, எண்பதுகளின் மத்தியில் பிரத்தியேக படங்களாக பலருக்கும் எடுத்துத் தர ஆரம்பித்து விட்டேன்.
அப்போது கணினி கிடையாது. கம்பியூட்டர் மேஜிக் கிடையாது....எனவே எடிட்டிங் வேலைகளை கேமெராவிலேயே செய்திட வேண்டும். இரண்டாக எடுத்த படங்களை பிரிண்ட் போட்டு, வெட்டி, ஒட்டி மீண்டும் படமெடுத்து, தவறுகள் தெரியாவண்ணம் தயாரித்தளிக்க வேண்டும்.
இங்கே பதிவிட்டிருப்பது அப்படி 1984 ல் ( என நினைக்கிறேன் ) எடுத்த படம். சிலாங்கூர் டிரெட்ஜிங் எனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த போது, என்னுடன் இருந்த மலாய் நண்பருக்கு எடுத்துத் தந்த படம் இது.
அன்றைய நண்பர்கள் பலரும் இது போன்ற தங்களின் படங்களை பத்திர படுத்தி வைத்திருக்கின்றனர். சினிமாவில் வருவது போல தங்களின் 'டபுள்ஸ்'களை போட்டோக்களில் பார்த்து வியக்காதவர் இல்லை.
1990 களில் வந்த கணினி, எனது வேலையை எவ்வளவோ குறைத்து விட்டது. இப்போது இப்படி ஒரு டபுள்ஸ் உருவாக்க வெறும் இரண்டு நிமிடங்கள் போதும். (அன்று இதற்காக நான் எடுத்துக் கொண்டது, சுமார் மூன்றிலிருந்து 4 மணி நேரங்கள்.)

No comments:

Post a Comment