Thursday 14 June 2012

பழங்கள். . .

பார்க்குமிடமெல்லாம் பழ மரங்களாக இருந்த இனிய காலம் ஒன்றிருந்தது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர்.

டொக்கு, மங்கிஸ், டுரியான், ரம்புத்தான், மா, கொய்யா, ஜம்பு, வாழை, புளிச்சக்காய் போன்ற மரங்களுக்கிடையே புளிய மரங்களும் நிறையவே இருந்தன.



வசிப்போர் வீட்டுக்கருகில் மட்டுமன்றி, சற்று தொலைவில் இருந்த காடுகளில் கூட நல்ல நல்ல பழ மரங்கள் இருந்தன.

ஆற்றோரங்களில் இருந்த அத்தாப் காய்கள் இளநீர் போன்ற சுவையை தரும் தன்மையைக் கொண்டவை.  காக்காய்ச் செடி, மொசுக்கிட்டான் செடி போன்றவைகளும் ருசியான காய்களைக் கொண்டவையே. இவைமட்டுமன்றி கொத்து கொத்தாக பூக்கும் பூக்களை அப்படியே கொத்தாக பறித்து உறிஞ்சும் போது அதன் சுவையே தனிதான்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றிய பயம் இன்றி பழங்களையும் காய்களையும் அப்படியே பறித்து உண்ட காலம் அது.

 இதுபோன்ற இழந்து விட்ட அந்த இனியவைகளை எண்ணிப்பார்க்கையில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு அருமையான நிகழ்வுகளை இழந்துவிட்டனர் என மனதில் என்னமோ ஒரு சின்ன உறுத்தல்.

நாங்கள் முன்பிருந்த சிலாங்கூர் டிரெட்ஜிங் என்னும் இடத்தில் நாவல் மரம் ஒன்றை வைத்திருந்தோம். மிக அழகிய கறும் நிறத்தில் நாவல் பழங்கள் இருக்கும். பல மருத்துவ குணமுள்ளது இந்த நாவல் பழம். ருசியாக இருக்கும் இப்பழங்களைப்பற்றி மக்களுக்கு ஏனோ அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. போவோர் வருவோருக்கெல்லாம் பழத்தினைப்பறித்து சாப்பிடக் கொடுப்போம்.

இது இப்படி இருக்க, முறையாக பழங்கள் உண்ணுவது பற்றி சில தகவல்கள் இங்கே:

காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படும்.

பொதுவாக உணவருந்திய பின் பழங்களை உண்பது நல்லதல்ல என்கிறார்கள். காரணம் முன்பு உண்ட உணவு ஜீரணிக்கும் முன் பழங்களை சாப்பிடுவதால் உணவின் ஜீரணம் பாதிக்கப் படுகிறதாம். பழங்களின் ஜீரணத்திற்கு அப்புறமே உணவின் ஜீரணம் தொடர்வதால் மந்தமான நிலை ஏற்படும் என்கிறார்கள்.

பழங்களை மிக்ஸியில் அரைத்துச் சாப்பிடுவதும் தவறு. பழச்சாற்றில் வெறும் இனிப்பை மட்டும் ருசிப்பது சரியல்ல... அதன் நார்ச்சத்தும் உடல் ஜீரணத்திற்கு தேவை. எனவே பழங்களை அப்படியே முழுமையாக சாப்பிட வேண்டும், ஜூஸ் ஆக மட்டுமல்ல.

 நமது உணவுக்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்னரோ பழம் சாப்பிடக்கூடிய சரியான நேரம் என உணவைப்பற்றி கற்றறிந்தோர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment