Tuesday 22 October 2013

செஸ் சாம்பியன்கள் - 1

உலக அரங்கில் செஸ் எனும் சதுரங்கத்திற்கு பெரிய அளவிலான மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுக்களைப்போல இல்லாமல், மூளையும் மூளையும் மோதிக்கொள்வதால் இதற்கான வரவேற்பு பெருமளவு உலக நாடுகளிடயே நிலவுகிறது. இது யாரும்  மறுக்க முடியாத உண்மை. உடலை வறுத்தி போட்டியிடுவோரிடம் இருந்து விலகி, புத்திக்கூர்மையினை பரிசோதித்துக்கொள்ளும்  தனி நபர்களின் விளையாட்டு  செஸ்.    கல்வியா, செல்வமா, வீரமா எனும் கேள்வியில் கல்வி எனும் பிரிவில் அறிவும் அறிவும் மோதிக்கொள்ளும்  நிகழ்வே இந்த சதுரங்கப் போட்டிகளாகும்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று தேனீர் தருவதைப் போல ரஷ்ய நாட்டில் இவ்விளையாட்டு ஒரு சம்பிரதாய நிகழ்வாக கருதப்படுகின்றது. இல்லங்களில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் அதிகமாக பலரும்  விளையாடுகின்றனர்.


இன்னும் பல நாடுகளில் இதனை சாதுரியத்தையும், தந்திரங்களையும் இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் ஒரு செயல் திட்டமாக பயன் படுத்துகின்றனர்.

இதற்கிடையே, இவ்வாண்டின் அனைத்துலக செஸ் ஆட்டங்கள் தமிழ் நாட்டில் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற விருக்கின்றது. அடுத்த இரு வாரங்களும் உலகம் சென்னையை நோக்கி தன் கவனத்தை செலுத்தவிருக்கிறது. பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் அதி வேகமாக தீவிரமடைந்த வண்ணம் இருக்கின்றன. அனைத்துலக போட்டியினை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது..

அதனை நினைவில் கொண்டு, 1987ம் ஆண்டு சிலாங்கூர் டிரெட்ஜிங் செஸ் போட்டிகளின் போது நான் சமர்ப்பித்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தினை இங்கே பதிவிட விரும்புகிறேன்.


தற்போதைய  அனைத்துலக  செஸ் சாம்பியன் -  ஆனந்த்

முந்தைய சாம்பியன்கள்...

உலக செஸ் போட்டிகள் முதன் முதலில் 1886ல் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் நடைபெற்றது.  கடந்த 1986ம் ஆண்டோடு நூறாண்டுகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து கோலாகலமான நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

மே 12 முதல் 18 வரை அனைத்துலக செஸ் சாம்பியன்ஷிப் சென்டினியல் எனும் மையக் கருப்பொருளுடன் பல இடங்களிலும் செஸ் விளையாட்டுக்கள் திருவிழாக் கோலம் போல நடைபெற்று முடிந்தன. ஏற்பாட்டாளர்கள் அதிக பொருட்செலவில் இவ்விளையாட்டுக்கு தனியொரு அங்கீகாரத்தினை வழங்கி கௌரவமான ஓர் உயர்ந்த இடத்திற்கு சதுரங்கத்தினை கொண்டுசென்றுவிட்டனர் எனலாம்.

அமெரிக்காவின் ஆடம்பரச் செயல்களினால் செஸ் விளையாடுவோர் எண்ணிக்கை மேலும் ஐம்பது விழுக்காடு அதிகமாகிவிட்டதென பல பத்திரிக்கைகளும் புகழ்ந்தன. இதன் விளம்பரங்களினால் பலரும் இவ்விளையாட்டினை தேர்ந்தெடுத்து ஆடத்தொடங்குவர் எனவும் ஆரூடங்கள் சொல்லப்பட்டது. 

இங்கே நமது சிலாங்கூர் டிரெட்ஜிங்கில் இவ்விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியதும் இந்த செஸ் திருவிழாவினை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளில் படித்ததினாலும் தான். அதன் ஆர்வமே  இங்கிருக்கும் பல விளையாட்டாளர்களின் வருகைக்கும் காரணம். லீக் முறையில் ஒரு மாத காலம் விளையாடி முடிக்கவிருக்கும் நமது செஸ் போட்டிகளுக்கு முன்னால் செஸ் விளையாட்டின் கடந்த நூறாண்டுகளாக இருந்த சாம்பியன்கள் பற்றியும் ஓரிரு வரிகள் தெரிந்துகொள்வோம்.


வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் 

இதுவரையில் மொத்தம் 13 பேர் உலகச் சாம்பியன்களாக இருந்திருக்கின்றனர்.  1886 முதல் 1894 வரை வில்ஹம் ஸ்டெய்னிட்ஸ் அதிகாரபூர்வ செஸ் அமைப்பின் முதல் சாம்பியனானார். இவருடைய பிடிவாத குணத்தினால் இவர் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட சாம்பியனாக தமது ஐம்பத்தெட்டாவது வயதுவரை இருந்தார். மிக வயதான உலகச் சாம்பியன் இவர்தான்.

இவரைத்தோற்கடித்ததின் வழி இமானுவேல் லாஸ்கர் இரண்டாவது சாம்பியானாக 1894 முதல் 1921 வரை புகழ் பெற்றார். ஜெயிக்க முடியாத இறுக்கமான நிலைகளில் இருந்தும் போட்டிகளை வெல்வது இவரின் தனித்திறமையாக இருந்தது.


இமானுவேல் லாஸ்கர்

இமானுவேல் லாஸ்கரின் பல வெற்றிகளுக்கு அவர் கையாண்ட மனோத்தத்துவமும் ஒரு காரணமென கருதப்பட்டது அன்று. எதிர்பார்க்க முடியாத நிலைகளில் ஆடி, வென்று 25 ஆண்டுகள் சாம்பியனாக வீர நடை போட்டவரி இவர்.  வேறொருவரால் இவரின் நீண்ட கால சாதனையினை முறியடிக்க முடியுமா என்பது இப்போது ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

ஜோசே ராவுல் கெப்பபிளான்கா என்பவர் 1921ம் ஆண்டு தனது அபாரத்திறமையினால் பலரையும் கவர்ந்த விளையாட்டாளர்.  அந்த  ஆண்டு இமானுவேல் லாஸ்கரை வீழ்த்தியதன் வழி உலக சாம்பியன் பட்டத்துடன் வலம் வந்தார். ஆயினும் இந்த இருவருடனான போட்டிகளில் ஒரு சில வித்தியாசங்கள் இருந்தன.


ஜோசே ராவுல் கெப்பபிளான்கா 

30 ஆட்டங்கள் ஆடியிருக்க வேண்டிய போட்டி, 14 ஆட்டங்களோடு முடிவடைந்தது. 4 ஆட்டங்களில் வென்று, 10 ஆட்டங்களில் சம நிலை காணும் போது இமானுவேல் நோய்வாய்ப்படவே அடுத்த சாம்பியனாக ஜோசே ராவுல் கெப்பபிளான்கா அறிவிக்கப்பட்டார்.

இந்த வகையில் இவர் சாம்பியானானதில் சிலர் சந்தேகப்பட்டாலும், கூடிய விரைவிலேயே இவர் மாபெரும் திறமைசாலி என உலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பல செஸ் விளையட்டுப் போட்டிகளில் எவ்விதச் சிரமுமின்றி  மிகச் சாதாரணமாக எதிர் ஆட்டக்காரர்களை வெற்றி கொண்டதனால், " செஸ் விளையாடுவது மிக எளிதான ஒன்றோ?" எனும் எண்ணத்தை  பார்ப்போர் மனதில் தோற்றுவித்தவர் இந்த ஜோசே ராவுல் கெப்பபிளான்கா ஆவார்.

ஒரு செஸ் விளையாட்டளருக்கான எல்லாத் திறமைகளும், தகுதிகளும்  இவரிடம் இருந்தது.  அதன் காரணமாக, ஏனைய விளையாட்டாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக பல வருடங்கள் இருந்தவர் இவராகும்.

இருப்பினும் தனது ஆட்டத்தினை காலத்திற்கேற்ற மாறுதல்களின்றி தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்ததால், அதிக காலம் இவரால் சாம்பியனாக உலா வர முடியாமல் போயிற்று.


அடுத்த பதிவில் தொடர்கிறது...

No comments:

Post a Comment