Saturday 12 October 2013

சில செய்திகளும் சில உண்மைகளும்..

ஊடகங்களில் பலவற்றை பார்க்கிறோம், படிக்கிறோம். படைப்பவரின் பார்வையிலே நம்மைக் கொண்டுசெல்வதால் பொதுவில் அதுவே உண்மையென நம்பி விடுகிறோம். அதிலிருந்து விலகி ஊடுருவிப் பார்க்கும் தன்மை அடிபட்டுப்போகின்றது.

நிஜக்கதைகளில் இருந்து உண்மைக்கதையை தெரிந்துகொள்வது சிலருக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

நிஜமென நடந்தது ஒருபுறம் இருக்க அதிலிருக்கும் மையக் கருத்தை கவனித்தால் அது வேறு ஒரு திருப்பத்தைத் தருவது போல இருக்கும்.

மனிதர்களின் தவறுகள் கண்டிக்கப்படுவதை விடுத்து கொலையெனும் மரணத்தை தண்டனையாக கொடுப்பது இவ்வகையைச் சேர்ந்ததே.

ஆசிரியர் கண்டிக்கிறார் என அவரைக் கொலை செய்வது, கணவன் கொடுமைப் படுத்துகிறார் என அவரின் தலையை துண்டிப்பது, நிற்காமல் அழும் குழந்தையை சுவற்றில் அடித்து உயிர் போகச் செய்வது, தன் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி மரணமுறச்செய்வது இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

நேரடி பாதிப்பில் நிகழ்ந்தவை போலப் பட்டாலும், இச்சம்பவங்களை உற்று நோக்கினால், இவற்றின் அடிப்படை சிறு வயதுமுதல் வளரும், வளர்க்கப்படும் பழக்க வழக்கங்களைக் கொண்டே அமைகின்றது என்பது தெரிய வரும்.

மழலைகள், குழந்தைகள், சிறுவர்கள் என அலட்சியம் காட்டுவோர் சிந்திக்க வேண்டிய செய்தி  இது. குழந்தைகள் தானே என இருக்காமல் ஓரளவுக்கு கண்டிப்பையும் அவர்கள் வளரும் போது நாம் கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியம். அதுதான் அவர்கள் மேஜர் ஆகும் வரை சரியான நெறிகளில் கல்வியின் பக்கம் கவனத்தை செலவிடத் தூண்டுகிறது.

இந்தச் சிறுவயது பழக்கவழக்கங்கள் அவர்களை நல்லவர்களாக, நல்ல குணங்களோடு வளரச் செய்யுமேயன்றி  தீய வழிகளுக்கு இட்டுச் செல்லாது.

அவர்களின் சிந்திக்கும் தன்மை சீர்படும்போது எல்லா சூழ் நிலைகளிலும் நடு நிலைப்போக்கையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். கடுமையான, கொடுமையான கோப தாபங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும்.

No comments:

Post a Comment