Sunday 27 October 2013

செஸ் சாம்பியன்கள் - 3

1995ம் ஆண்டு அன்றைய சாம்பியனான காஸ்பராவின் பட்டம் பறிக்கப்பட்டது.  அனைத்துலக செஸ் சம்மேளனத்திற்கு எதிராக ஷாட் எனும் விளையாட்டாளருடன் அங்கீகரிக்கப் படாத விளையாட்டொன்றில் கஸ்பராவ்  கலந்து கொண்டதால் அவர் தண்டிக்கப்பட்டார்.

ஆயினும் 'த புரோஃfபெஷனல் செஸ் அஸ்சோசியேஷன்' எனும் காஸ்பராவின் தலைமையிலான அமைப்பு, அவரை எதிர்த்து விளையாடக்கூடிய தகுதி வாய்ந்த போட்டியாளர்களை அடையாளம் காணும் பணியில் தமிழ் நாட்டு விளையாட்டளரான ஆனந்து விஸ்வநாதனே காஸ்பராவை எதிர்கொள்ளும் தகுதியானவர் என அறிவித்தது. ஆனந்தின் அதிசயக்கத்தக்க வளர்ச்சியை உலகம் கவனித்து வந்ததும் இதற்கொரு காரணம்.

உலக வாணிப மையத்தின் 107வது மாடியில் இவர்களுக்கிடையேயான ஆட்டங்கள் நடைபெற்றன.  வழக்கமான 24 ஆட்டங்களாக இல்லாமல், 20 ஆட்டங்கள் மட்டுமே போதுமானதாக முடிவு செய்யப்பட்டது. முதல் 2 மணிகளில் 40 நகர்த்துதல்கள், அடுத்த ஒரு மணி நேரத்தில் 20 நகர்த்துதல்கள் மற்றும் தொடரும் 30 நிமிடங்களில் போட்டியினை முடித்திடும் சட்ட திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டன.

18 ஆட்டங்களுக்குப்பின் கஸ்பராவ் வெற்றிபெற்றார்.


இலியம்ஷீனொவ் தலைமைத்துவத்தின் கீழ், 1997ம் ஆண்டு, ஃபைட் வழக்கமான அனைத்துலக தேர்வுப் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும் புதுமையான தேர்வாட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.

100 விளையாட்டாளர்களைக் கொண்ட நொக் அவுட் முறையிலான போட்டியின் வழி, சமநிலையின் போது பிலிட்ஸ் எனும் விறு விறு ஆட்ட வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையில் தேர்வுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் வெற்றி பெறுபவர், மூன்று நாள் ஓய்வுக்குப்பின், ஃபைட் சாம்பியனான அனட்டொலி கர்பாவை எதிர்த்து ஆட முடிவு செய்யப்பட்டது.

1995ம் ஆண்டு பி.சி.எ அமைப்பின் கஸ்பராவை சந்தித்து தோல்விகண்ட ஆனந்த், நிக்கோலிக், கலிஃமன்,அல்மாசி, ஷிரோவ், கெல்பன் மற்றும் அடாம் ஆகியோரை தோற்கடித்து அனட்டொலி கர்பாவ்வை சந்தித்து ஃபைட் உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  தகுதி பெற்றார்.

ஆனந்து விஸ்வநாதன் எனும் பெயர் உலகெங்கும் மேலும் வேகமாக பரவத்தொடங்கியது.

2770 புள்ளிகளில் சாம்பியன் கர்பாவ்வை விட 35 புள்ளிகள் அதிகம் பெற்று விறு விறு செஸ் உலகின் அசைக்க முடியாத விளையாட்டாளராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

உலக சாம்பியன் பட்டதுக்கு வேண்டிய அனைத்து தகுதிகளையும் கொண்டவர் இவர் என பல இடங்களிலிருந்தும் புகழ் மாலைகள் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும், பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது.

எந்தவித ஆட்டக்களைப்புமின்றி, ஃபிரெஷாக  ஆனந்தை எதிர் பார்த்திருக்கும் கர்பாவ் ஒரு புறமும், பல கடுமையான ஆட்டங்களையும், திறமையானவர்களையும் போட்டியிட்டு வெறும் மூன்று நாட்கள் இடைவெளியில்  உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும்  ஆனந்த் மறுபுறமும் இருக்க, இறுதி ஆட்டங்களின் நிலை எப்படி இருக்குமோ என யூகிக்க சிரமம் ஏற்பட்டது. 1998ம் ஆண்டில், அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி மியூசியம் அரங்கில் ரஷியாவின் அனட்டொலி கர்பாவ்வை எதிர்த்து இந்தியாவின் ஆனந்த் களம் இறங்கினார்.

போட்டி  கடுமையாக இருந்தது. முதல் மூன்று ஆட்டங்களில் 3-3 என இருவரும் சம் நிலையில் இருக்க தொடர்ந்து இரண்டு விறு விறு ஆட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கர்பாவ் இரண்டிலும் வென்று ஃபைட் சம்மேளனத்தின் சாம்பியனானார்.

கஸ்பராவ், கர்பாவ் ஆகிய இருவருடனான போட்டிகளில் தோல்வி கண்டாலும் ஆனந்த் உலகச் சாம்பியனாகும்  காலமும் பின்பு வந்தது.


அனட்டொலி கர்பாவ் மற்றும் கஸ்பராவ்வுடன் சுசன் பொல்கார்...

2000ம் ஆண்டில், ஃபைட் சம்மேளனம் 1997ம் ஆண்டு போலவே அனைத்துலக சாம்பியன் போட்டிகளில் மீண்டும் ஒரு மாற்றத்தை புகுத்தியது.

அதில் வழக்கமான முறையில் தேர்வு பெற்று வருவோரை சந்திக்காமல், நடப்புச் சாம்பியனும் நொக் அவுட் முறையிலான  பூர்வாங்கப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த புது மாற்றம்.

ஆனந்தை வீழ்த்தியதின் வழி சாம்பியனான அனட்டொலி கர்பாவ் இந்த புது விதிமுறையினை எதிர்த்து கோர்ட்டுக்குச் சென்றார்.

2000ம் ஆண்டுக்கான உலகச் சாம்பியனாக  தேர்ந்தெடுக்கும் போட்டிகள், நவம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை  இந்தியாவிலும், இறுதி ஆட்டம் ஈரானிலும் நடைபெற்றது.

ஏற்கனவே போலோகன், லிப்பிடியன், மாசியா, சாலிஃப்மன், ஆடம்ஸ் போன்றோரை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்திற்கு இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் தகுதி பெற்றிருந்தார்.

அவரைப்போன்றே, அலெக்ஸி ஷிரோவ் தகுதி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.



இறுதிச் சுற்று டெஹ்ரான் நகரில் 2000ம் ஆண்டு நடைபெற்றது.  நான்கே ஆட்டங்களில், அசைக்க முடியா பெரும்பான்மையில் ஆனந்த் வெற்றியாளரானார்.

உலக விளையட்டரங்கில் இந்தியாவையும், தமிழ் நாட்டையும்...ஏன், நம் தமிழ்ச் சமூகத்தையும் பரவச் செய்ததில் ஆனந்துக்கு பெரும் பங்குண்டு.

1987ல் அனைத்துலக நிலையில் கால் பதித்து நடக்கத்தொடங்கிய ஆனந்த், 13 வருடங்களிலேயே உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். கர்பாவ், கஸ்பராவ் போலவே தனது தனித்துவமான வேகமிகு ஆட்டத்தில் உலகையே ஆச்சரியப் பட வைத்தார்.

வழக்கமான பாணியிலிருந்து புதுமைகளைப்புகுத்திய கஸ்பராவ் போலவே இவரும் வித்தியாசமான பாணியில் மற்றவர்களைவிட சற்று விறுவிறுவென வேகமாக ஆடும் கலையை வளர்த்துக்கொண்டார். எதிரிகளை அதிகம் தடுமாறச்செய்தது இவரின் பல ஆட்ட நகர்த்துதல்கள்.

செஸ் உலகின் மன்னனாக ஆனந்த் உலா வரத்தொடங்கினார்.


No comments:

Post a Comment