Friday 20 September 2013

கதை கதையாம் காரணமாம்..

மனிதர்கள் பொதுவாக கதைகளும் காரணங்களும் சொல்வதில் வல்லவர்கள். சுற்றி வலைத்து ஒரு விசயத்தை சொல்வதற்கு   பல வழிமுறைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

"சுருங்கச் சொனால் சுவாரஸ்யம் இல்லை சார். சுற்றி வலைத்துச் சொன்னால் தான் கேட்பவரும் ஆனந்தப் படுவார், சொல்பவருக்கும் மகிழ்ச்சி ..." என என்னிடம் சொன்னவர்களும் உண்டு. சின்ன ஒரு விசயம் நீளும் போது, அதற்கு கை காலோடு இறகும் முலைக்கிறது. தேவையற்ற பொய்கள் சேருகின்றன.

சரியெனும்போது தங்களை முன்னிறுத்துவதும், மற்ற நேரங்களில், குறைகளை பிறர் மேல் தினிப்பதும் சர்வ சாதரணமாக   நடப்பதுதான்.

சிலர் சொல்லும்போது கதைக்குள் கதையும், அதற்குள் வேறொரு கதையும் என தொடர்கதைகளாக வரும். இது அவர்களின் கற்பனையின் அபார வளர்ச்சியாகும். மூளை வளர்ச்சிக்கு கதை சொல்வது நல்ல பயிற்சி என சிறு வயதில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது கதை சொல்வதில்தான் என ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், 'கதை விடுவது' எவ்விதத்திலும் மூளைக்கு நல்ல பயிற்சியாக  இருக்காது என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பல நேரங்களில் பலரிடம் நாம் கதை சொல்கிறோம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரிடம் உண்மைக்கதை சொல்கிறோம்.  நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நாம் நன்றாக 'கதைக்கிறோம்'. வேண்டாதவர்களிடம் 'கதைவிடுகிறோம்'. இப்படியாக நமது கதைகள் இன்னும் பல ரூபங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உள்ளதை உள்ளது போல் சொல்லத்தான் நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டோம். நாம் பெற்ற கல்வியும், கடவுள் பக்தியும் நடந்ததை நடந்தவிதமாக பேசத்தான் நமக்கு வழங்கப்பட்டன. ஆனல் இன்று நடப்பது என்ன?

கவிஞர்கள் காணாதவற்றையும் கண்டதுபோல் கவிதைகளில் படைக்கிறர்கள், இது இலக்கியமாகிறது.
அரசியல் வாதிகள் செய்யாத சாதனைகளயும் தங்களுடையதெனப் பட்டியலிடுக்றர்கள், அவர்களுக்கு சாதனைத் தலைவர்கள் எனும் பட்டம் கிடைக்கிறது.
மருத்துவர்களோ நமக்கு வந்துள்ள நோயினை ஐம்பது மடங்காக்கி சிகிச்சையை இப்போதே செய்தால்தான் உண்டு என பணம் பிடுங்குகிறார்கள்..உயிர் காத்த கடவுளாக சித்தரிக்கப் படுகிறார்கள்.

இப்படியாக ஒருவர் மற்றவரிடம் கதை சொல்வதும் கதை விடுவதும் என சுய நலத்தை இலக்காகக் கொண்டே பலவும் நடந்து கொண்டிருக்கிறது.
 

No comments:

Post a Comment