Saturday 7 September 2013

எதில் இல்லை ஆபத்து...?

வலைபோட்டு மூன் பிடிக்கும் மீனவர்களில் சிலர், தங்களின் சொந்த வலையிலேயே சிக்கிக் கொண்டு உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. கடந்த வாரம்கூட இப்படியொரு பத்திரிக்கைச் செய்தியை நம் நாட்டு நாளிதழ்களில் படித்திருப்போம். மீன்பிடிப் படகில் கடலினுள் சென்று தவறுதலாக கடலில் விழுந்து மரணிப்பதை ஏற்றுக்கொள்ளும் நாம், கரையோரத்தில் நடக்கும் இவ்வகை மரணங்களை கண்டும் கேட்டும் அதிர்ந்து போகிறோம்.

நன்கு யோசித்தால், நாம் செய்யும் அனைத்திலும் ஒருவித ஆபத்து இணைந்திருப்பதை உணரமுடிகிறது. எதில் இல்லை ஆபத்து?

தரையில் போகும் வாகனங்களால் ஆபத்து நிறைய இருக்கலாம். அதற்காக வானத்தில் பறக்கும் விமானியின் உயிருக்கொ, அதில் பிரயானம் செய்யும் பயணிகளின் உயிருக்கோ உத்திரவாதம் தரமுடியுமா?

அதிக கவனம் செலுத்தி தயாரிக்கப் படும் மழலைகளின் பால் மாவில்கூட அதன் தரம் குறையும் போது ஆபத்து உண்டு.

விஷப்பாம்புகளுடன் குடியிருப்போர் எத்தனை முறை அந்தப் பாம்புகளினால் தீண்டப்பட்டாலும் மரணம் அவர்களை சம்பவிப்பதில்லை. ஆனால், "ஐயோ பாம்பு " என அதனைப் பார்த்தமாத்திரத்தில் அதிர்ச்சியில் உயிரிழந்தோரும் உண்டு.

அளவில் அதிகமாகும்  குடி நீரும் நஜ்சாகிறது. மருத்துவ உலகில் இது சர்வ சாதாரணம். ஆனால், குடி குடி என இருபத்து நான்கு மணி நேரமும் "தண்ணியில்" மிதப்போர் பல காலம் உயிருடன்தான் இருக்கிறார்கள்.

நிம்மதியான உறக்கம் என எண்ணுவோர்  மறு நாள் காலையில் எழுந்திருப்பதில்லை. கடுமையான நோயில் வீழ்ந்தோர் நம் காண் முன்னே திடகாத்திரமாகத்தான் உலா வருகிறார்கள்.

மலை உயரத்தில்தான் ஆபத்தென்பதில்லை.  கால் இடறி  கீழே விழுவோர் சில நேரங்களில் மீண்டும் எழுவதில்லை.

ஆக எங்கும் எதிலும் ஆபத்தென்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதே நேரம், எல்லாவித ஆபத்தான சூழ் நிலைகளும் நமக்கு பாதகத்தை ஏற்படுத்துவதில்லை என்பதும் பல உதாரணங்கள் மூலம் தெரிகிறது.

சிலர் இதற்கு விதி என் கின்றனர். மற்றவர் இதற்கு கவனக்குறைவு, அலட்சியம் என் கின்றனர்.

என்னமோ ஏதோ, நாம்  வாழ்ந்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறோம்.  மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்துவிட்டு முன்னேற்றை நாடி போவதைத் தவிர வேறு எந்த "ஆப்ஷனும் " இல்லை. அது விதியாக இருந்தாலும் சரி, மதியாக இருந்தாலும் சரி.

No comments:

Post a Comment