Friday 20 September 2013

தமிழில் பெயர் பஞ்சமா...?

தமிழர்களாகிய நமக்கு தமிழ்மொழி பற்றி அதிகம் சொல்லித் தர தேவையில்லை.  தமிழ்தான் நமது மூச்சு, பேச்சு எல்லாம். இருந்தும் சில காலமாக தங்கள் குழந்தைகளுக்கு  தமிழில் பெயர் சூட்ட பலரும் தயங்குவது நாம் கண்டு ஆச்சரியப் படும் ஒன்றாக மாறிவிட்டது.

தமிழ்ப் பெயர்கள் மிகவும் பழையனவாகத் தோன்றுவதால் தாங்கள் நவீன பெயர்களை தேர்வு செய்ததாக சில நாகரிகப் பெற்றோர் கூறுகின்றனர்.

தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததெனும் போது பெருமைப் படும் நாம், அந்தப் பெருமையின் பலனாக பழைய ஆனால் அர்த்தமுள்ள இனிமையான தமிழ்ப்பெயர்களை வைக்க நாணுகிறோம்.

ஆய்வொன்றில் கலந்துகொண்டோர் பல காரணங்களை இதற்காக சொல்லியிருந்தனர்..
    - தமிழை வெறும் மொழியென மட்டுமே சிலர் காணுகிறாகள். அதன் சிறப்புக்கள் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

   - நவனாகரிகத் தமிழர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைப்பதால் சில பெயர்களை மற்ற மொழிகளிலிருந்து கலவாடுகிறார்கள்.

   - சமயத்தில் ஒரு பிரிவினர் சமஸ்கிருதப் பெயரால் சமயத்தை வளர்ப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

   - புரியாதப் பெயரை உச்சரிக்கக் கஷ்டமான பெயர் என்கிறார்கள் சிலர்.

   - பலருக்கு தமிழ்ப் பற்று என்பது கொஞ்சமும் இல்லை. ஆக தமிழில் பெயர் வைக்க மட்டும் எங்கிருந்து வரும் அக்கறை....

   - தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் எனும் தாக்கத்தின் காரணமாக வேற்று மொழிப்பெயராயினும் அதையே பிள்ளைகளுக்குச் சூட்டி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்கின்றனர்.

   - எண் ஜோசியம், எழுத்துக்களில் மாற்றம் என தேவையற்ற நம்பிக்கையினால் தம்ழ்ப் பெயர்களின் எழுத்துக்களை மாற்றி வேறு மதத்தின் பெயர்களைப் போல குழப்புகின்றனர்.

   - ஜோதிடர்களும், எண் கணித நிபுணர்களும், வஸ்து சாஸ்திரக் கலைஞர்க்ளும் தங்களின் பிழைப்பிற்காக தவறான வழி காட்டுதலால் மக்களை ஏமாற்றுகின்றனர்.

   - தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு மற்றவர் தரும் ஆலோசனைகள் இப்படி தமிழில்லா பெயர்களாக அமைந்துவிடுகின்றன..

   - சிலர் தமிழில் முன்னேற்றம் இல்லை, எதிர்காலம் இல்லை என நினைக்கிறார்கள்.

   - பலருக்கு நமது முன்னோர்கள், தமிழ்ப் பெரியோர்கள் பற்றி தெரிந்திராததால் அவர்களின் பெயர்களை வைப்பதில்லை.

   - "அட வெறும் பெயர்தானே, எதுவாயிருந்தால் என்ன...?" எனும் பெற்றோரின் அலட்சியம்.

   - பெரியோர் பெயரிட்டு வந்த வழக்கம் மாறி, இப்போது பெற்றோரும் பெற்றொரின் நண்பர்களும் பெயரிடும் காலமாகிவிட்டது.

   - உலகமயமாக்கப்பட்டு விட்டதன் தற்கால சூழ்நிலையும் ஒரு காரணம்.

இப்படி இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும், இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்ப் பற்றில்லாத பெற்றோரே முழு முதற்காரணமாக நாம் எண்ணத்தோன்றுகிறது.

 

No comments:

Post a Comment