Saturday 21 September 2013

படித்ததில் பிடித்தது....புரட்டாசி முதல்வார மகத்துவம் என்ன?

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர்.

இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர்.இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் அக்-4) மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம்.

முடியாதவர் ஒரு நாள் மஹாலயம் செய்து மற்ற நாள்களில் தர்ப்பணம் (எள்ளுத் தண்ணீர் விடுதல்) செய்யலாம். ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டாசியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனைத் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மாதமாக இருக்கிறது.தென்மேற்கு திசையை, "கன்னி மூலை' என்பர். இதனால் தான், கோவில்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். ஏதாவது வேண்டுதல் வைத்து, இந்த புரட்டாசி மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும்.

அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள். (இவ்வாண்டில் அக்-3). அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் (செப்.21, 28, அக்.6, 13) பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக் டோபர் முதல்வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ்வாண்டு அக்.5, 13) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

 நன்றி : தீபம் தொலைக்காட்சி

 

No comments:

Post a Comment