Monday 15 April 2013

பி.பி.சீனிவாஸ் மறைந்தார்...

 நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.சீனிவாஸ் நேற்று சென்னையில் மாரடைப்பினால் காலமானார்.  இவர்  தமிழ்த் திரை உலகின் புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடி நம்மை உள்ளம் குளிரச் செய்தவர்.

அவரின் மானுடப் பயணம் நேற்றுடன் முடிவுற்றது. காலமெனும் பெருவெள்ளத்தில் அவர் கலந்து விட்டார்.


தனது இருபதாவது வயதில் ஜாதகம் என்ற திரைப்படத்தில்  முதன் முதலில்  பாடினார். தொடர்ந்த பல வருடங்களில் தன்னுடைய இனிமையான குரலினால் தனது ரசிகர்களை மகிழ்சியடையச் செய்தார்.

இவரின் குரலில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் டப் டென் வரிசையில் பலரின் விருப்பப் பாடல்களாக  நீங்கா புகழ் பெற்று ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

மயக்கமா கலக்கமா என நம்மை தட்டிக்கொடுத்தவர்....
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என நம்மை உணரவைத்தவர்...
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா என நம்மை சிந்திக்க வைத்தவர்....

அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் உலகிற்கே இவரது இழப்பு பெரும் சோகத்தை தந்து விட்டது இன்று. "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" என்ற பாடலை நினைக்காதவர் இல்லை எனும் அளவு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக அது விளங்குகிறது.
20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள இவர்  பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பால முரளி கிருஷ்ணா போன்ற பாடகர்களின் வரிசையில் ஒருவராக பல வருட காலம் புகழின் உச்சியில் இருந்தவர்.

கடந்த சில வருடங்கள் வரை இவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்ததை தொலைகாட்சியில் பார்த்து வந்திருக்கிறோம். 83 வயதில் நம்மை விட்டுச் சென்ற இவரின் பாடல்கள் என்றென்றும் நம்முடைய நினைவில் நிலைத்திருக்கும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

பி.பி.சிரினிவாஸ் உடலுக்கு எஸ்.ஜானகி அம்மா மலர் மாலை சாற்றி மரியாதை செய்த போது....

No comments:

Post a Comment