Wednesday 24 April 2013

வாழ்க்கை ஒரு போர்முலா1 பந்தயம் போன்றது...

ஓரிரு தினங்களுக்கு முன் எனது பதிவில் நான் என்ன சொல்ல வருகிறேன் என 'சிம்பள் தமிழில்' விளக்கும் படி ஒரு நண்பர் ஈமெயில் அனுப்பி இருந்தார்.  மின்னஞ்சலில் அவருக்கு பதில் சொல்லிவிட்டாலும், அதையும் இங்கே மற்றவர்களும் தெரிந்து கொள்ள இன்றைய வலைப்பதிவாக தருகிறேன்.

இது எனது சொந்த கருத்தே என  இங்கு தெளிவு படுத்திக்கொள்கிறேன். குற்றம் இருப்பின் சுட்டிக்காட்டவும். தண்டனையாக கண்டனக் கணைகள் வேண்டாம்.

என்னைப் பொருத்தமட்டில், வாழ்க்கை என்பது ஒரு 'போர்முலா 1 ' கார் பந்தயம் போன்றது. ( இப்படிச் சொன்னால் தான் இளயோர் பலருக்கு விளங்குகின்றது)

'போர்முலா 1'  உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்று நடத்தப்படும் முதல் தர கார் பந்தயமாகும்.

இந்த பந்தயத்தின் போது கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு வரிசைகளில் அவற்றுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் அடையாள கோட்டில் வந்து நிற்கும்.

பள்ளிப்பருவத்தில் திடலில் நேர் கோட்டில் நின்று ஓடியது போலன்று இது. போட்டியின் போது தங்களுக்கான துவங்கும் நிலைகளை, முதல் நாளே வேறொரு தேர்வுச் சுற்றின் போது பங்கு கொள்ளும் ஒவ்வொரு காரையும் ஓட விட்டு வேகமாக வரும் கார்களை ஒன்றன் பின் ஒன்றாக அவர்களின் நேரத்தினை கணக்கிட்டு, நிஜப் போட்டியின் போது "கிரிட் லைன்" எனப்படுகின்ற போட்டியின் ஆரம்ப நிலை எல்லைக்குள், தேர்வின் போது அதி விரைவாக வந்தவர் முதலிலும் மற்றவர் அடுத்தடுத்தும் நிறுத்தப் படுகின்றனர்.

இதுவே 'போர்முலா 1'  துவங்கும் நிலை. எல்லாக் கார்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதில்லை. தங்களின் தேர்வு நேர அடிப்படையில் அவர்களுக்கான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு போட்டியை துவங்குகின்றனர்.

இதையே முன்னர் நான் எழுதிய போது, முற்பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளின் படியே நாம் இப்பிறவியில்  பிறக்கிறோம், பந்தயக்காரினைப் போல வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தேன்.

மனிதர்கள் அனைவரும் ஒரே நிலையில் பிறப்பெடுப்பதில்லை என்பதே நமது முன்னோர் சிந்தித்துக் கண்டறிந்த சித்தாந்தமாகும்.

No comments:

Post a Comment