Thursday 21 February 2013

அன்பினால் அன்பினை...

முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் , வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என பள்ளிப்பாடத்தின் போது படித்திருப்போம்.  இவை முள்ளுக்கும், வைரத்துக்கும் சொல்லப்பட்டவையே. மனிதர்களுக்கு அல்ல என நாம் நினைக்கும் நேரத்தில் உணவுப் பிரியர்களுக்காக சொல்லப்பட்டதோ என அருகில் இருக்கும் நண்பர் சந்தேகத்தைக் கிளப்புகிறார். நன்றாக சாப்பிட்டு உடல் பருத்து பெரிய வயிற்றோடு உலாவரும் ஆண்களும் பெண்களும் மீண்டும் உணவுக் கட்டுப்பாட்டினாலேயே  கொழுப்பு கரைந்து  உடல் இளைப்பதற்காக உவமையான சொற்றொடர்தான் இது என அவர் கருதுகிறார். 

கண்ணில் பட்ட மற்ற நண்பர்களிடம் வினவினேன். நயவஞ்சக நண்பர்களை அவர்களைப்போலவே நாடகமாடி கெடுப்பது என்றார் ஒருவர். அடேயப்பா... பெரிய வில்லங்கமான ஆளாய் இருப்பார் போலிருக்கிறதே என மனதிலே தோன்றியது.

இருக்கும் நண்பர்கள் பட்டியலில் இருந்து அதுபோன்றவர்களை களைவதை விடுத்து, அவர்களைப்போலவே நாமும் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும். அதுமட்டுமல்ல, அப்படி செய்வது கொசுவை அடிக்க பீரங்கி கொண்டு வருவது போல அல்லவா ஆகும். தீயவர்கள் அவர்கள் துறையில் பட்டம் வாங்கியது போல நடந்து கொள்ளும் போது அவர்களிடம் சாதாரண நாம் மோதுவது சரியாகுமா...?
அதே போல, அன்பை அன்பால் வெல்லலாம். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது.  பகைமையும் அப்படித்தான். பகைமை காட்டும் பலர் பாசத்திற்கு கட்டுப்படுகின்றனர். 

குறிப்பிடும் அளவுக்கு ஒரு சிலரே பகைமையை தங்களின் மரணப் படுக்கை வரை கொண்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் கடந்து வந்த அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். பொதுவாக நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களே பலரால் இறுதிவரை ஒதுக்கப்பட்டு, சபிக்கப்படுகின்றனர்.

ஆனால்,  நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? முடியாது என நாம் சொன்னாலும், 'அது இடத்தைப் பொருத்தது' என்கின்றனர் தீயணைப்புப் படையில் வேலை செய்வோர். 

காடுகளில் அதிக வெப்பம் தாளாது  சூரிய கதிர்கள் பட்டு தானே பிடித்தெரியும் நெருப்பை அணைக்க அப்படி எரியும் இடத்தினைச் சுற்றி வளையம் போன்று நெருப்பிடுகின்றனர். பாய்ந்து வரும் நெருப்பு பொதுவாக அந்த வளையத்துடன் நின்றுவிடுகிறது, தொடர்ந்து எரிவதற்கு ஒன்றுமில்லாததனால். 

No comments:

Post a Comment