Monday 4 February 2013

வாலிபம் வயோதிகத்தின் முன்னோடி...

(  இன்றைய இளம் தம்பதிகள் அழகாக தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், அனர்த்தமாக பாதியிலேயே முடித்துக் கொள்கிறார்கள்... )

வாழவேண்டிய இளம் வயதில் வாழ்க்கையை தொலைத்து விட்டு வயதான பின்னர் அதை தேடுவதென்பது காலம் கடந்த பின் நமக்கு வரும் ஞானோதயம் ஆகும். உண்மையில் அதனால் மனச் சோர்வே அதிகரிக்கும்.

முதுமைக்குத் தேவையானவற்றை இளமையிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கணவன் மனைவிக்கிடையே தோன்றும் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் அடங்கும். வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர். அதை விளங்கிக் கொள்வது இருவரின் பொறுப்பு. இருவரின் குற்றம் குறைகளும், பாசம் பரிவுகளும் அந்தரங்கமாக அலசப்பட்டு ஆழமான, ஆத்மார்த்தமான உறவினால் பிணைக்கப் பட வேண்டும். பெரியோர் சொல்லும் பொன்னான வார்த்தைகள் இவை. இதில் இருக்கும் உண்மையினை உணர்ந்து செயல் படுதல் குடும்பம் செழித்தோங்க நாம் எடுக்கும் முன்னேற்றகரமான வழியாகும்.

சில இளம் தம்பதிகள் எப்போதும் சண்டையிட்டு மனக்கஷ்டத்திலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதபோது வாழ்க்கை எப்படி இனிக்கும்.

ஏட்டிக்குப் போட்டி என வாழ்க்கையை வாழத் தொடங்கினால், மிஞ்சுவது என்னவென்பதை அவர்கள் எண்ணத் தொடங்கவேண்டும். காரணம் இப்போது வெறுப்பாக தோன்றும் வாழ்க்கை வயதான பின்னர் வேதனையாகிவிடும்.

பல புதுத் தம்பதிகளும் இவ்விதமே பட்டும் படாமலும் தங்களின் இனிய வாழ்க்கையை அலட்சியமாக வாழ்கின்றனர். எதிர்கால வாழ்க்கைக்கு முதலீடு செய்ய வாலிபமே ஏற்ற பருவம்.

" இப்போது அடித்துக் கொள்வோம், பின்னர் சேர்ந்துக் கொள்வோம்" என்பது அளவோடு இருந்தால் சரிதான். இல்லையேல், அந்திம காலத்தில் வாழ ஆசை வந்தாலும் வயோதிகம் வழி வகுக்காமல் போய்விடும் ..



1 comment: