Friday 22 February 2013

தியானப் பயிற்சிகள். . .

மனதை ஒரு நிலைப்படுத்துவதே தியானம் என்கிறார்கள்.  தெளிவான சிந்தனைகளை பெறுவதற்கு தியானம் ஒரு தெய்வீக கலையாக போற்றப்படுகிறது. 

எண்ணங்களை ஒரு முகப் படுத்த முடியாதோருக்கு உதவியாக தியானப் பயிற்சி வகுப்புக்களும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. ஆயினும், இலவசமாக நடைபெறும் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள நம் நாட்டில் குறிப்பிட்ட சிலரே ஆர்வம் காட்டுகின்றனர்.

( யோகா கற்றுக்கொள்ள புகழ்பெற்ற பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் வெளி நாடுகளில். இந்தியா தவிர்த்து பல மேலை நாடுகளில் இக்கலையினை சொல்லித்தரும் திறமையான குருக்களின் பற்றாக்குறை இருந்து வருகிறது. )

ராஜ யோகா, சகஜ யோகா என சில பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பலருக்கும் தெரியும் யோகா, பிராண சக்தியை மையமாகக் கொண்டு ஆசனங்கள் செய்யப் பழக்கும் யோகா மட்டுமே.       உடலுக்கும் உள்ளத்துக்கும் மறுமலர்ச்சி தேவை என நினைப்போர் உடற்பயிற்சிக்கென நடத்தப் படும் இது போன்ற யோகா வகுப்புக்களில் கலந்து கொள்கின்றனர். உடல் நலமானால் உள்ளம் நற்சிந்தனைகளைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.

சமயச் சார்புடைய மையங்களில் " உன் உடலை நேசி, இந்த உடலில் தான் ஆன்மா வசிக்கிறது" என ஆன்மீகமும் மெல்ல அறிமுகப்படுத்தப் படுகின்றது.  உண்மையில் உடல், மனம், அறிவு, ஆன்மா எனும் இந்த நான்கையும் ஒருங்கிணைக்கும்   ஒன்றே யோகா எனும் சொல்லின் அடக்கமாக இருக்கிறது.

அனைத்துலக நிலையில் இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட யோகாவில் திளைக்கும் பலரும் அதன் சக்தியையும் அதனால் அடையும் மாற்றங்களையும் நன்கு அறிவார்கள். தமிழர்கள் மட்டுமன்றி பல மொழி பேசுவோரும், பல நாட்டினரும் இக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகா கற்றுக்கொள்பவர்கள் யோகிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். உண்மையில் யோகி என்பது சிவனை குறிக்கும் ஒரு சொல்லாக இலக்கியங்களில் படித்திருப்போம்.  மகேந்திர மலையில் சிவபெருமான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார் என தேவாரத்திலும் திருவாசகத்திலும் குறிப்பு இருக்கின்றது.

சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் யோகாசனங்களைப் பற்றிய மேன்மையினை நிறையவே சொல்லியிருக்கின்றனர்.

முதன் முதலில் யோகக் கலையை தொகுத்து வழங்கிய பதஞ்சலி முனிவரின் பெயரால் இன்று உலகெங்கிலும் பதஞ்சலி யோக ஆரய்ச்சி மையங்கள் என பல இருக்கின்றன. இங்கே பக்தி யோகம், ஞான யோகம், கிருத யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் என 108 பிரிவுகளாக  விளக்கமாக பயிற்றுவிக்கப் படுகிறது.

தியானத்தினால் உடலின் பல வகை உபாதைகள் தீர்கின்றன அல்லது குறைகின்றன. மன அழுத்தம், நிம்மதியற்ற நிலை, விரக்தி என சஞ்சலப்படுவோருக்கு அவற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்வை சீராக வைத்துக்கொள்ள தியானம்  சிறந்த ஒரு மாற்று வழியாக செயல் படுகிறது.

நம் நாட்டில், மெய்ஞானம் வளர்க்கும் நோக்கத்தில் பல குருமார்களும், சமய ஒருங்கிணைப்பு ஆர்வளர்களும் இச்சேவையை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர். இருப்பினும், பலருக்கும் நன்கு அறிமுகமான தியான மையங்களும் ஒன்றிரண்டு  இங்கு  இருக்கவே செய்கின்றன.

அவற்றுள், ஜோகூர் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு தியானப் பயிற்சி தரும் ஆர். பி. டி. மையமும் ஒன்று.  பங்குகொள்ளும் தலா ஒருவருக்கு எழுநூற்று முப்பது ரிங்கிட் அடிப்படை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

இதன் தலைமை போதகர் டத்தோ டாக்டர். பாலகிருஷ்ணன் அவர்கள், மூன்று கட்டங்களாக கடை நிலை, இடை நிலை மற்றும் உயர் நிலை என பயிற்சிகளின் தரம் பிரித்து பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

'எஸ்ட்ரோவில்' ஞாயிற்றுக்கிழமைகளில் இவர் வழங்கும் தொலைகாட்சி தொடரில், தியான நிலைகளில் தேர்வோர் அடையும் சித்திகளைப் பற்றியும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் தற்போது.  சித்தி என்பது ஒரு வகை ஞானம். ஒருவரைப் பார்த்ததும் அவரின் முன், இப்போதைய, எதிர்கால நிலைகளை தெளிவாக இந்த சித்தியினை அடையும் ஒருவர் சொல்லிவிட முடியும் என்கிறார்.

மற்றொரு தியான நிலைகளை விவரிக்கும் மையம், பல கிளைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள கோலாலம்பூர் பங்சாரில் அமைந்திருக்கும் ராஜயோக பிரம்ம குமாரிகளின் தியான மையம்.

மேல் சொல்லப்பட்ட ராஜ யோக சித்தர் குருஜியின் அமைப்புக்கும் இதற்கும் வேறுபாடு மலையளவு எனலாம். ஆர்பிடி மையம் பிரமாண்டத்தின் பிம்பம் என்றால், பிரம்மகுமாரிகள் ராஜ யோக அமைப்பு நேர் எதிரான எளிமையை மையப்படுத்துகிறது. ஆன்மீகத்துக்கு ஆடம்பரம் தேவை இல்லை என்பது இவர்களின் வாதம்.  

நல்லொழுக்கத்துடன் வாழும் வழிகள் சொல்லித் தரப்படுகின்றன இங்கு.  ஆன்மா நேரிடையாக கடவுளுடன் தொடர்பு கொள்கின்றது என்கின்றனர். ஐம்புலன்களையும் அடக்கி, விகாரங்கள் அற்ற வாழ்வே அதற்கு துணைபுரியும் என்கின்றனர். ஆக, விகாரங்களை அகற்றி விசாலமான வாழ்வினை அமைத்துக் கொள்ளும் வழிமுறைகள் இங்கு கற்றுத் தரப்படுகின்றன.

ஏழு நாள் பயிற்சி என பிரம்ம குமாரிகள் மையம் தரும் அறிமுக பயிற்சிகளில் கலந்து கொள்வோருக்கு அவர்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் ஏனைய விசயங்கள்  முன்னோட்டமாக சொல்லித் தரப்படுகின்றன. இவர்களின் "பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகம்"  சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒன்றாக கருதப்படுகின்றது.

எது எப்படியோ, உளவியல் ரீதியிலோ, சமயச் சார்பிலோ தியானத்தை கற்றுத் தேர்வோர் பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்களா?  பயிற்சிகளை பல வருட காலம் மேற்கொண்டும் அதே மேம்பாடடையா பழைய நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களா?
என்பது போன்ற பல விசயங்களை புதிய அங்கத்தினராக சேர ஆர்வம் கொண்டிருக்கும் பலர் கேட்கின்றனர்.

தியானத்தில் ஆரம்பித்து யோகப் பயிற்சியில் முடிந்தாலும், யோகப் பயிற்சியில் தொடங்கி தியான முறைகளை கற்றுத் தந்தாலும், முக்கிய அம்சமாக நாம் கவனிக்க வேண்டியது ஒழுக்கமான மனக் கட்டுப்பாடுகளையும், மனதை ஒருமுகப் படுத்தும் யுக்திகளையும் மட்டுமே.  மனதளவிலும், உடலளவிலும் நாம் கற்றுக் கொள்ளும்  ஒழுக்கங்கள் நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்திற்கும், சமுதாயத்துக்கும் நிச்சயம் பெரிய பயனைத் தரும்.


1 comment:

  1. நகார சுவதிச்டான பிரம்ம தியான யந்திரம்

    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_1124.html
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete