Wednesday 27 February 2013

நம் வீட்டு தேவதை...

பொதுவாக நாம் விஞ்ஞானத்தின் சாயல் உள்ளவற்றை மட்டுமே நம்புகிறோம். உறுதியாக சொல்ல முடியாத, புரியாதவற்றை சிலரின் தனிப்பட்ட நம்பிக்கை என முத்திரை குத்திவிடுகிறோம்.  புராணத்தில் இருக்கும் குறிப்புகளையும், சான்றுகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள உண்மை நிலைதனை நிரூபிக்கவோ, மறுக்கவோ முனைவதில்லை. அது நமது வேலை இல்லை. வேறொரு குறிப்பிட்ட சிலரின் வேலை என நாம் ஒதுங்கிக் கொள்ள முடிவெடுக்கிறோம். முழு நம்பிக்கை வைத்து செயல் படும் ஒன்றில் தான் பூரணத்துவம் இருக்கின்றது என்பார் சான்றோர். அப்படி ஒன்றை இங்கே பார்ப்போம்.

நாம் குடியிருக்கும் வீட்டை கழுவி துடைத்தெடுத்து சுத்தமாக வைத்துக்கொள்வோம். நமது பெண்மணிகள் கடமை தவறாது இதை பின்பற்றி வருகிறார்கள்.  இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். ஒன்று நமக்கெல்லாம் தெரிந்ததுதான். சுத்தம் சுகம் தரும் என்பது.

ஆனால் பலருக்கும் தெரியாத இன்னொரு காரணமும் உண்டு. 
எங்கள் ஊர் குருக்கள் சொல்லியே எனக்கும் இது தெரிய வந்தது. ஒவ்வொரு வீட்டிலும் 'கிரஹ தேவதை' அந்தந்த வீட்டின் நலன் காக்க இருக்குமாம். அதுக்கு தெரிந்த ஒரே ஒரு வாக்கியம் "அப்படியே ஆகட்டும்...."

அதனால், வீட்டில் எல்லாமும் சுத்தமாகவும், பேசுகின்ற வார்த்தைகள் நல்லதாகவும் இருக்க வேண்டுமாம்.  மங்கலகரமான வார்த்தைகளை நாம் பேசும் போது அந்த தேவதை " அப்படியே ஆகட்டும் " எனுமாம்.  ஆனால், தப்பான வார்த்தைகளை..உதாரணத்திற்கு "இல்லை, முடியாது, மாட்டேன்" எனும் அபசகுன வார்த்தைகளை வீட்டில் யாராவது சொல்லினால் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" எனுமாம்.

அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதற்கேற்றாற்போல் நல்லவற்றை மட்டுமே பேசப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் வசிக்கும் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" என சொல்லி ஆசிர்வதிக்கும் என்கிறார்கள்.

அப்படியானால் "இல்லை, முடிந்துவிட்டது " என்பது போன்ற உண்மைகளை சொல்லக்கூடாதா எனக் கேட்கலாம்.  "நிறைய இருந்தது, மீண்டும் வாங்கி வர வேண்டும்"  என்பதே சரியான பதிலாம். அப்போதுதான் தேவதையும் " அப்படியே ஆகட்டும் " என சொல்லுமாம்.

 நமது பூஜை அறையில் காலையிலும் மாலையிலும் உடலை சுத்தம் செய்து குளித்த பின் தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.   தீபத்தை ஏற்ற ஆறு மணி என்பது காலையிலும் மாலையிலும் சரியான நேரமாகும்.

ஞாயமான  நமது குறைகளை இறைவனிடம் சொல்லலாம்.  தப்பில்லை. இந்த குறைகளை நம் வீட்டில் வசிக்கும் தேவதை வீதியில் ஊர்வலம் வரும் அம்மனிடம் தெரிவித்து அந்த குறைகள் நிவர்த்திக்கப்பட ஆவன செய்யுமாம்.

அதே நேரம், வீட்டிலிருந்து வெளியே எங்காவது போவதற்கு முன்னர் பிராதான வாசலைப் பார்த்து  வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். அப்போதுதான் 'வீடும் நாம் திரும்பி வரும் வரை பத்திரமாக இருக்கும், நாமும் பத்திரமாக திரும்பி வருவோம்' என சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment