Friday 15 February 2013

மனம். . .

நம் ஐம்புலன்கள் பெரும் உணர்வுகளை மூளை சிந்தனையாக மாற்றுகின்றது.  இதையே நாம் 'மனம்' என்கிறோம்.  நல்ல மனம் என பொதுவில் சொல்ல நாம் கேள்விப்படுவது நல்லெண்ணங்களின் உதயத்தையே. இதுவே நம் வாழ்வின் முக்கிய அம்சமும் கூட.  நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் அதுதான் காரணம்.

அறிவினைத் தந்து ஒருவனை ஆக்குவதும் அதுவே,
அறிவிஅனையகற்றி அவனை வீழ்த்துவதும் அதுவே.

துணிச்சலோடு நாம் வலம் வரவும்,
கோழையாய்  ஓடி ஒளிவதற்கும் மனமே காரணமாகின்றது.

 நல்லேண்ணங்களை விதைக்கும் அதுவே மற்றவரை அழிக்கும் தீய சக்தியாகவும் நம்முள் இருந்து நம்மை மாற்றுகின்றது.

சிந்தனையும், உணர்வும் சேர்ந்து அறிவினை படைத்து அதனுடன் நம் உடலையும் உள்ளத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது.

உள்ளத்தில் ஏற்படும் உள்ளச்சிதைவே நமக்கு தோன்றும் பலவித நோய்களுக்கும் காரணமாகின்றது. ஆத்திரம் ஆவேசம் என ஒரு நிமிடமும், அன்பு, அமைதி என மறு நிமிடமும் மனிதன் மாறக்காரணம் மனம் அவனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததே. அதற்கு நல்ல பயிற்சிகள் அவசியம். 

மனம் என்பதை நமது இல்லமாக கருதினால், அதில் எழும் எண்ணங்கள் நம் வீட்டுக்கு வரும் அழையாத விருந்தாளிகள் போலவாகும். வீட்டின் உரிமையாளரகிய  நாம் வந்திருப்போரை உபசரித்து அனுப்பி வைக்கவேண்டுமே தவிர, அவர்கள் தரும் உத்தரவுகளை நாம் கேட்டு அதன்படி நடக்க முடியுமா....? ஆளுக்கொரு உத்தரவு பிரப்பிக்கும்போது அவற்றை நாம் நடைமுறைக்கு ஒப்பானதாக ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா?

மனத்தில் எழும் தீய எண்ணங்களும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போன்றவையே. ஏற்று நடக்க இயலாத அவற்றை நாம் உடனுக்குடன் அப்புறப் படுத்திவிட வேண்டும். அப்போதுதான் அங்கே நல்லவர்கள் வர விரும்புவர். நல்லெண்ணங்கள் உதயமாகி நம் மனம் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்லும்.

மனம் இட்டபடி சென்றேன், மாட்டிக்கொண்டேன் எனச் சிலர் சொல்வார்கள். இதுவும் உண்மையே. உறுதியில்லா மனதில் அப்படி மாறுபட்ட எண்ணங்களே தோன்றும்.

என்னதான் தூய்மை, எளிமை, நேர்மை போன்ற நற்குணங்களைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும்,  தரையில் படுப்பதைவிட மெத்தையில் படுப்பதையே மனம் விரும்புகிறது. சைவ உணவு வகைகளை விடுத்து, கொன்று சமைக்கப்படும் மிருக உணவையே மனம் ஆசைப்படுகிறது. நேர் பாதையில் சென்றால் தோல்வி நிச்சயம் என குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்கிறது மனது. ஆக, மனதை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மிக மிகக் கஷ்டம்.

ஆனால், உயர் நிலை வாழ்வை தேர்ந்தெடுப்போர், இது போன்ற கஷ்டங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. தியானம் மூலமும் முறையான உடற்பயிற்சி, உள்ளப் பயிற்சியின் மூலமாகவும் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகின்றனர். கண்ணியமான சிந்தனைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

இந்த நவீன உலகில் ஒவ்வொரு நாளும் இப்படி நேர்மையாக, மனதினை தங்கள் வசப்படுத்தி வாழ்வோர் எண்ணிக்கை பன்மடங்காகிறது என்பதை பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஆச்சரியம் எழுகிறது.

நல்ல சிந்தனைகள் மேலெழும்போது, சாந்தம் நம்மைத் தேடி வருகிறது, மனது மகிழ்ச்சியடைகிறது. 

மனது மகிழும் போது  நமது  மூளையில் 'என்டார்வின்', 'மெலட்டோனின்', 'செரட்டோனின்' போன்ற என்ஸைம்களின் சுரக்கும் அளவு கூடுகின்றது.  இதனால், நம் இரத்தம் சீரடைகிறது... நோய்கள் எட்டிப்போகின்றன.

No comments:

Post a Comment