Tuesday 26 February 2013

நமக்கு வழங்கப் படுபவைகளை அலட்சியப் படுத்தலாகாது...

ஒருவர் நமக்கு ஆசையோடு விரும்பி வழங்கும் பரிசுகளையோ வாழ்த்துக்களையோ ஒரு காலமும் உதாசீனப் படுத்தக்கூடாது.  அப்படி செய்தால் கொடுத்தவர் வருத்தமடைவார். நம்மேல்  அக்கறையுடனும், நல்ல அபிப்பிராயத்துடனும் இருக்கும் அவர்கள் மனம் வருந்தினால் அது நமக்கு நல்லதல்ல. இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.

திருமகளை வணங்கி அவர் அணிந்திருந்த மலர்  மாலையை
   பெற்ற,  மூவுலகுக்கும் சென்று இசைபாடும் கன்னி ஒருத்தி அதை துருவாச முனிவரிடம் கொடுத்தாள்.    அதன் மகிமையை நன்கு அறிந்திருந்த துருவாச முனிவர் மனமகிழ்ச்சியில் அதை தன் கழுத்தில் அணிந்துகொண்டு தேவலோகம் வந்தார்.

தேவலோகம் ஒளிக்கதிர்கள் வீச, பிரமாண்ட அழகுடன் காட்சியளித்தது.  பெருஞ்சிறப்போடு பரவசமாக யானை மேல் ஊர்வலமாக வரும் இந்திரனைக் கண்ட துருவாச முனிவர் தான் அணிந்திருந்த,  திருமகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அந்த மலர் மாலையை இந்திரன் மேல் பற்று கொண்டு அவனுக்கு கொடுக்க எடுத்து நீட்டினார்.

அதை பணிவன்புடன் வாங்கிக் கொள்ளாமல், தான் அமர்ந்து வரும் யானையின் அங்குசத்தால் வாங்கி யானை மேல் வைக்க, அது கீழே விழுந்து யானையின் கால்களில் மிதிபட்டது.துருவாச முனிவருக்கு இதைக் கண்டதும் பயங்கரக் கோபம்.  இந்திரன் தன்னை அவமதித்து விட்டான் என அவர் மனம்  வெம்பியது. 

இந்திரனை நோக்கி,
" திமிர் பிடித்தவனே, இந்த மலர் மாலை திருமாலின் மார்பில் குடியிருக்கும் திருமகளினுடையது.  இதை உனக்குக் கொடுக்க எண்ணினேன். உன் செருக்கால், அந்த பாக்கியத்தை நீ இழந்துவிட்டாய்.  ஆகையால் உனது அனைத்து செல்வங்களும், வளங்களும் உன்னை விட்டு கடலில் போய் சேரட்டும்.."
எனச் சாபமிட்டார்.

அத்தருணமே,  தேவ மங்கையர், கற்பக மரம், காமதேனு மற்றும் இந்திரனின் அனைத்துச் செல்வங்களும் அவனை விட்டு மறைந்து போயின.

"சாப மிட்டதும் சங்கமும் பதுமமும் பரியும்
சோப மிக்கவ ரம்பையர் சுரதரு களிரும்
மாப யன் தரு மற்றுள பொருள்களும் வளமும்
கோப மோடலை கடலிடைப் புக்கொழித் தனவே..."


அன்பும், ஆசியும் மற்றும் நமக்கு மன மகிழ்வோடு வழங்கப்படும் எதுவும் முக்கியமானதாக கருதி போற்றப்படவேண்டும்.



No comments:

Post a Comment