Thursday 22 November 2012

வாசிக்கும் பழக்கம்...

வாசித்தல், எழுதுதல், கண்டறிதல், பார்த்தல், கிரஹித்தல், செவிமெடுத்தல் என்பது போன்றவை கல்வியில் சிறந்து விளங்க வரையறுக்கப்பட்ட விதிமுறைகளாகும்.

பல்லின மக்கள் வாழுகின்ற நம் நாட்டில் பல கோணங்களில் இருந்தும் போட்டிகள் நம்மை எதிர்த்து வரக்கூடும். அவற்றை சமாளிக்க நமக்குத் தேவைப்படும் ஆயுதம், "கல்வி" ஒன்றே.

கல்வியில் சிறந்து விளங்குவோருக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்கள்  வந்தமையும். பொருளாதார ரீதியில் பலம் பெரும் நாம், இதனால் பிரகாசமான எதிர்காலத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களும் அதிகம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக வருவது 'வாசிக்கும்' பழக்கம்.

புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்ற இதர விசயங்களில் சிறந்து விளங்குகிறார்கள்  என்பதை பல ஆய்வுகளின் மூலம் தெரிந்து கொள்கிறோம். வாசிக்கும் பழக்கத்தினை மையமாகக் கொண்டே மற்ற பள்ளிப்பாடங்களும் இருக்கின்றன. பூகோளம், சரித்திரம், அறிவியல், தமிழ், ஆங்கிலம், மலாய் என இருக்கும் பாடங்கள்,வழக்கமாக  புத்தகம் வாசிப்போருக்கு பெரிய பிரசினையாக இருக்காது.

மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் வாசிக்கும் திறனை கண்காணிப்பது  அவசியம். பொறுப்புள்ள ஆசிரியர்கள் இப்படி தனிக் கவனம் செலுத்தி தங்கள் வகுப்பு மாணவர்களை மேல் நிலைக்கு கொண்டு வருவதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வாசிப்பில் சற்று மந்தமான மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதம் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களைக் கொடுக்கலாம். பிள்ளைகள் தாங்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி பேசும்போது அதைப் பாரட்டுவதும், மேலும் சில நல்ல புத்தகங்களை அவர்களுக்கு முன்மொழிவதும் நல்ல விசயங்கள் ஆகும்.

வாசிப்பது ஆர்வத்தை அதிகரிக்கும் ஒரு செயல். மூளையின் 'செல்' வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது். வாசிக்க வாசிக்க மூளையின் செல்களோடு அறிவும் வளர்கிறது.

ஆனால், எந்த நேரத்திலும் புத்தகங்களை படிக்கச் சொல்லி பலவந்தமாக பிள்ளைகளை பெற்றோர்கள் ஈடுபடுத்தக்கூடாது.  இது அவர்களுக்கு புத்தகங்களின் மேல் மட்டும் அல்ல, பள்ளிப்படிப்பிலும் வெறுப்பு ஏற்பட காரணமாகிவிடும்.

புத்தகம் வாசிப்பதை விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பலன்கள் பல.  எப்போதும் சுவைபட ரசித்து படிப்பதையே பிள்ளைகள் விரும்புவார்கள். அதுவே நல்லதும் கூட. இந்த இனிமையான சூழ்நிலைக்கு பிள்ளைகளை உட்படுத்தும் யுக்திகளை கண்டறிவதே பெற்றோரின் கடமை.

ஆசிரியர்கள் ஒரு சில நேரங்களில் கண்டிப்போடு நடந்து கொண்டாலும், மற்ற நேரங்களில் அன்பாக, அனுசரணையாக வாசிப்புக்கென ஒரு பாடத்தை ஒதுக்கி பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். பள்ளி நூலகத்தில்  இருக்கும்  சிறந்த புத்தகங்களை மாணவர்களின் தரத்துக்கேற்ப சுவாரஸ்யமாக விமர்சிக்கலாம். இதனால் மாணவர்கள்  அது போன்ற புத்தகங்களை தேடிப் படிப்பதில் ஆர்வம் கொள்வர். அவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி சக மாணவர்களோடு கலந்து பேச வாய்ப்பு தருவது மற்ற மாணவர்களையும் இந்த நல்ல பயனுள்ள பழக்கத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் .. .

No comments:

Post a Comment