Monday 26 November 2012

பதிவுலகில் ஆசிரியர்கள். . .

சோசியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக கருத்துப் பரிமாற்ற ஊடகங்களில்
ஒன்றாகவே  'புளொக்ஸ்பொட்'  எனும் பதிவுலகமும் இருக்கிறது.

உலகில் பலரும் இதில்  பங்கெடுத்துப் பதிவிடுகிறார்கள். ஆயினும் நமது மலேசிய ஆசிரியப்பெருமக்கள் இன்னும் இது போன்ற வலைத்தளங்களில்  குறிப்பிடும் அளவு கலந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

பலரும் வலைத்தளத்திற்கு வராமல் போவதற்கு தமிழ் இலக்கணத்தில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களே காரணம். எல்லோரும் தமிழ் மொழியைப் பேசுகிறோம். ஆனால் எழுத்துலகம் என வரும் போது இலக்கணப் பிழையின்றி எழுதுவோரே நம்பிக்கையுடன் துணிந்து எழுத வருகிறார்கள். தமிழ் நாட்டில் அனேகமாக எல்லோரும் தமிழ் கற்றிருப்பதால் பலர் பதிவுலகில் தங்கள் பங்களிப்பைத் தருகிறார்கள் ஆனால், மலேசிய நாட்டில் நிலைமை வேறு. பிழையின்றி எழுதுவோரில் அனேகர் ஆசிரியத் தொழிலே செய்வதால், அவர்கள் சேவையை அதிகம் எதிர்பார்க்கிறோம்.

மற்ற மாநிலங்களுக்கு நான் பயணம் செல்லும் போது சந்திக்கும் ஆசிரியர்களிடம் இதைப் பற்றி வினவினால், எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஒரே பதிலையே சொல்கிறார்கள்....  "நேரமில்லை.." என்பதே அது.  நேரம் என்பதை நாம் தானே ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.  அவர்களின் இதயபூர்வமான பங்களிப்பினால் தமிழும் வளர்கிறது, மற்றவர்களும் பயனடைகிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.  அதை அவர்கள் உணர்ந்துவிட்டால், நேரம் என்பது அவர்களிடம் நிறையவே இருக்கும், தமிழுக்கு சேவை செய்ய....

சில ஆசிரியர்கள் மிகப் பிரமாதமாக தங்களது வலைத்தளங்களை நடத்திவருகின்றனர். தாங்கள் கற்றுத்தரும் பள்ளிப்பாடங்களும் கூட அவர்களின் 'புளொக்ஸ்பொட்டில்' இடம்பெற்றிருக்கின்றன. வீட்டுப் பாடங்களும் அப்படியே. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே அந்தப் பாடங்களை செய்து பள்ளிக்கு மறுநாள் கொண்டுவரலாம்.

விடுமுறைக்கு வெளியே போகும் ஆசிரியர்கள் தாங்கள் கண்டவற்றை கட்டுரை வடிவில் பதிவிடும் போது மாணவர்கள் அவற்றை கிரஹித்துக் கொண்டு சந்தர்ப்பம் கிட்டும் போது அதை மாதிரியாக வைத்து பரீட்சைக்கும் எழுத உதவியாக இருக்கிறது.

ஆசிரியர்கள் தங்களின் அனுபவங்களையும், ஆய்வுகளையும், விமர்சனங்களையும் பதிவுலகில் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. ஏனோ  இன்னும் ஆசிரியர்கள் பலர் இது போன்ற ஆரோக்கியமான பதிவுலக பகிர்தலில் தங்களை உட்படுத்துவதில்லை.

பள்ளிப்பிள்ளைகளின்  முன்னேற்றத்திற்கும், சமூக குறை நிறைகளுக்கும் அவர்களின் சேவை தேவைப்படுகிறது. கண்ணில் படும் குறைபாடுகளை அன்போடு அழகாக சுட்டிக்காட்டலாம். சரியான முறையான வெற்றியடையும் பாதை எதுவென தங்களின் ஆசிரிய அறிவூட்டலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இதனால் பன்மடங்கு பெருகும்.

இதைவிடுத்து, தனிப்பெரும் சிறப்புடன் செயல் படும் ஆசிரியர்கள் தனித்து, ஒதுங்கி நிற்பது நன்றாகுமா...?

No comments:

Post a Comment