Friday 2 November 2012

மலரும் நினைவுகள்...


"படைத்தானே படைத்தானே,
மனிதனை ஆண்டவன் படைத்தானே...."

என சௌந்திரராஜன் உறவுகளின் சேர்க்கையில் உள்ள கரடு முறடுகளை ஓலமிட்டுக்கொண்டிருந்த காலம் நினைவுக்கு வருகிறது. மனிதன் தனியே விடப்பட்டிருந்தால் எந்தப் பிரசினைகளும் இல்லை என்றார் அப்பாடலில்.
அதைக்கேட்டு அதன் தத்துவங்களின் உண்மைகளை அலசிக்கொண்டிருக்கும் அதே நேரம், சீனிவாஸ் வந்தார் ஒரு பாடலுடன்...

"மயக்கமா கலக்கமா,
மனதிலே குழப்பமா,
வாழ்க்கையில் நடுக்கமா...?"


எதிர்கொள்ளவேண்டியதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றுக்கும் ஆகாது என்றதுடன் '  நீ உன் கவலைகளை கூறுகிறாய், உனக்கும் கீழே எத்தனையோ பேர் தங்கள் கவலைகளை யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்  ...அது தெரியுமா உனக்கு? " என புள்ளி விவரங்களைத் தந்தார்.

என்னென்னவோ நினைத்து காரியத்தில் இறங்குகிறோம். பின்னர் வம்பில் மாட்டிக்கொண்டது தெரிய வரும்போது அதிலிருந்து தப்பிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், அகங்காரத்துக்கு அடிமையாகும் நாம், சில நேரங்களில் சட்டத்துக்கு புறம்பானதைக் கூட எவ்வித பயமும்மில்லாமல் செய்துவிடுகிறோம். எதிர்மறை பலனை அனுபவிக்க நேரும்போது நொந்து போகிறோம். சௌந்திரராஜன் அன்று பாடினார் இப்படி..
" சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா...
சட்டி சுட்டதடா கை விட்டதடா"


'' என்னப்பா நீ....? சொன்னா கேட்க மாட்டுறியே... நீ எதிர்பார்க்கிறது மாதிரியே எல்லா சூழ் நிலைகளும் எல்லா விசயங்களும் உனக்கு சாதகமாக இருந்திடுமா....? சில சமயங்களில் இதையும் நீ அனுபவப் படத்தான் வேணும்....இதுதானே வாழ்க்கை...
அழகிய குரலில் அமுதமாக வந்தது இப்படியான பதில்...
" நிலைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை...."

சௌந்திரராஜன் விடுவதாய் இல்லை.
" நடந்து வந்த பாதையிலே
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவர் எல்லாம் வாழ்வதில்லை '"
என அடம் பிடித்தார்.

அடுத்து சீனிவாஸ் என்ன சொல்லப் போகிறார்?
முன்னதைப் போல நல்லதொரு பதில் அவரிடம் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அவரோ இம்முறை சௌந்திரரஜன்னுடன் கைகோர்த்துவிட்டார்.
'ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்....."

( இணையத்தள வானொலிகள் இப்படி 24 மணி நேரமும் நல்ல நல்ல பாடல்களாக ஒன்றன் பின் ஒன்றாக ஒலியேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 'மின்னல் எஃம் பண்பலை' மற்றும் 'டி எச் ஆர் ராகா' ஒலிபரப்பும் பாடல்களை விட இவை எவ்வளவோ மேல். இவர்களின் "கதையளப்பை" விட அவர்களின் 'கதைப்பு' நன்றாகவே உள்ளது. பழம் பாடல்களுக்கு அதற்குரிய ஞாயமான இடத்தை எப்போதுதான் இவர்கள் தரப் போகிறார்களோ....? )

No comments:

Post a Comment