Wednesday 25 July 2012

மறைந்து வரும் நற்பண்புகள். . .

காலங்காலமாக உலகே வியக்கும் வண்ணம் நாம் போற்றி பாதுகாத்து வரும் நற்பண்புகளுக்கு இப்போது சோதனை ஏற்பட்டிருப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம்.

தமிழர்களுக்கே உடைய நல்லவை பல இப்போது மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டன.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் 'குளோபலைசேஷன்' எனும் உலகளாவியப் பார்வை பற்றி சொல்லியிருக்கின்றனர்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது அக்காலத்துக்கு மட்டுமல்ல இக்காலத்துக்கும் பொருந்துகின்ற ஒன்றுதான். இவர் பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைவரும் நமக்கு சகோதர்களே என முக்காலத்தையும் கணித்துக் கூறியவர் ஆவார்.

விருந்தோம்பலில் நம்மை முந்திச்செல்ல வேறு யாரும் இலர். வீட்டுக்கு வந்தோரை, அவர்கள் நமக்கு பிடிக்காதவராய் இருந்தாலும் "வாங்க... வாங்க... " என வாய் நிறைய அழைக்கும் பண்பு நம்முடைய சிறப்பு.

வந்திருப்போருக்கு உணவிட்டு, இன்முகத்தோடு பணிவிடை செய்தனுப்புவது வேறு எங்கும் காணாத ஒன்று.

ஏழை எளியோருக்கு தொண்டு செய்யும் குணம், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் இரக்கம் காட்டுதல் போன்ற பல நற்பண்புகளை நாம் கடைபிடிக்கிறோம்.

இதுமட்டுமல்ல, தாய் தந்தையிடம் பாசமும், குருவிடம் மதிப்பும், இறவனிடம் பக்தியும் கொண்டு நன்னெறியில் குடும்பத்தை அனைத்துச்செல்லும் நல்ல கலாச்சாரத்தின் பிறப்பிடம் என நம் சமூகத்தை மேலை நாட்டோர் சொல்வார்கள்.

பெரியோர் வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லி அவர்கள் அமர இடம் கொடுப்பது, அவர்கள் மனது நோகாமல் தேவைப்படும் உதவிகளைச் செய்து கொடுப்பது, 'அங்கிள், ஆண்ட்டி' என பொத்தாம் பொதுவாக அழைக்காமல், சித்தப்பா, சின்னம்மா, மாமா, அத்தை என்பது போன்ற  உறவு முறைகளில் அழைத்து அவர்களின் அன்புக்கு பாத்திரமாவது என நாம் பொதுவாக செய்து வரும் சிறப்பு அம்சங்கள் பல.

இவற்றுக்கும் மேலாக, கணிவாக பேசி நயமாக காரியங்கள் செய்யும் சாதுர்யம் நமக்கு வழி வழியாய் வரும் ஒன்று.

"இனிய உளவாக இன்னாது கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று"
என்பதற்கொப்ப, நல்லதையே பேசி வருகிறோம்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மற்றும் விசேஷ தினங்களில் விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று இறைவனை கும்பிடுவது, பூமியை தாயாக நினைத்து இயற்கை நமக்களித்ததை நன்றியுணர்வோடு இறைவனுக்கு சமர்பிப்பது போன்ற பெருமை மிக்க செயல்கள் நம்முடைய நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியிலும் இன்னும் நாம் நிலை நிறுத்துகின்ற ஒப்பற்றச் செயல்களாகும்.

தமிழர்களான நாம் நம் மொழியைப் போற்றிப் புகழ்வதும், பாதுகாத்து பத்திரப்படுத்துவதும், இயல் இசை நாடகம் என சிறப்புச் சேர்த்து மகிழ்வதும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இங்கே மலேசிய நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆயினும் மனதில் ஒரு நெருடல்...
சின்னதாக, ஓர் இனம் புறியாத கலக்கம்...
ஏன்...எதனால்....?

நமது பங்களிப்பு இதில் எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு நேர்மாறான, எதிர்மறைச் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்மொழியில் ஆர்வமின்மை, பெரியோரை அலட்சியப்படுத்தி எடுத்தெறிந்து பேசுதல்,  கையில் பொருள் இருந்தும் ஏழைகளுக்கும் எதிர்பார்ப்போருக்கும் உதவ முன் வராமல் இருப்பது,  குடும்ப கௌரவதுக்கு மாசு பட நடப்பது, குடியும் கூத்துமாக தகாத உறவுகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் எதிரான செயல்களில் இறங்குவது என இன்றைய சமுதாயத்தில் சிலர் செய்யத் தொடங்கியிருப்பதை எண்ணுகையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.

இவை மட்டுமா, நாளிதழ்களில் தினந்தோறும் 'வெட்டுக் குத்து' கலாச்சார செய்திகள் பெருமளவு இடத்தை பிடித்து வருகின்றன.

'நற்பண்புகளுக்கு முன்னோடியாக வாழ்ந்த நாம், அதை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து விடுவோமோ...' என்னும் பயம் நம்முள் துளிர் விடத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment