Wednesday 18 July 2012

வெற்றிக்குப் பல்லாயிரம் பெற்றோர். . .


வெற்றிக்குப் பல்லாயிரம் பெற்றோர்,
தோல்வியோ என்றும் அனாதை...

இப்படி ஒரு சொற்றொடர் உண்டு.  1970ம் ஆண்டுகளின் மத்தியில் மலேசியா ஏற்று நடத்திய அனைத்துலக ஹாக்கி போட்டியில் தோல்வி கண்ட இந்தியக் குழு தாயகம் திரும்பி விமான நிலையத்தில் இறங்கியபோது அழுகிய தக்காளியும், முட்டையும் அவர்கள் மேல் வீசப்பட்டதாம்.

அடுத்த நாள் தமிழகத்தில் வெளிவந்த தினசரிகளின் தலைப்புச் செய்தி இது.
படித்த ஞாபகம்.

வெற்றியை மட்டுமே கொண்டாடி பழகிப்போன மக்களுக்கு தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி என தெரியாமல் போய்விட்டது. 

இதுதான் மனித மனம். எல்லோரும் ஏதாவதொரு எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் வெற்றி பெற்றுவிட்டால் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி.

விளையாட்டில் மட்டுமல்ல, தொழில், நண்பர்கள், உறவினர்கள் இப்படி எல்லா வட்டத்திலும் வெற்றியாளர்களே போற்றப்படுகிறார்கள். இதிலிருந்து நிச்சயமாக தெரியும் ஒன்று, உலகம் வெற்றியாளர்களையே விரும்புகிறது...

பல சோதனைகளையும் தியாகங்களையும் தாண்டிய பின்பே சாதனைகள் வரும் என்பது பொய்யல்ல. எந்த ஒன்றிலும் நம்முடைய கடப்பாடும், காரியத் திறனும் கூடும்போது வெற்றி நம்மை நெருங்கி வருகிறது.

மருத்துவ காப்புறுதி அட்டையை பற்றி பேச அங்கும் இங்கும் போகும் போது சில சாதனையாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைப்பதுண்டு. அந்நேரங்களில் அவர்களிடம் அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணங்களைப்பற்றி கேட்கும்போது போது தெரிந்து கொண்டவை இவை.

அவற்றில், எல்லோரையும் போல நாமும் இருக்காமல் சற்று மாறுதலாக சிந்தித்து செயல்படவேண்டுமென்பதும், நாம் செய்கின்ற எதுவும் நம்முடைய இலக்கை நோக்கியே இருக்கவேண்டுமென்பதும், சாதனையாளர்களின்  வாழ்க்கை அனுபவங்களை கூர்ந்து நோக்கி அவற்றில் இருந்து தங்களுக்கு பயன் தரும் நற்பண்புகளை கிரகித்துக்கொள்வதும் முக்க்யமானவைகளாகும்.

ஊக்கம் கொடுத்துக் கூட்டிச்செல்வோர் அருகில் இருந்தால் சற்று ஆறுதல் என்பது உண்மைதான். ஆயினும், நாம் அடையப்போகும் இலக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்திலும், முன்னுறிமையிலும்தான் இருக்கிறது.

இதை உணர்ந்துவிட்டால் வெற்றி நம்மோடுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பலரின் தொடர் வெற்றிகளுக்கு அவர்கள் அதன் சூட்சுமத்தை தெரிந்துகொண்டதே காரணம்.


No comments:

Post a Comment