Wednesday 4 July 2012

மற்றவர் பேசுவதையும் கேட்போம். . .

எல்லோருக்கும் எப்போதும் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும்.
 நமக்கு ஆபத்து அவசரத்தின் போது பிரதிபலன் கருதாது உதவிக்கு ஓடிவரும் நண்பர்கள் பட்டியலில் இந்த தேடல் இருக்கும்.

பல நண்பர்கள் நமக்கிருக்கலாம்.  அவர்கள் எல்லோரிடமும் நம்பிக்கை வைத்து நாம் மனம் திறப்பதில்லை. ஒரு சிலர்  அப்படி நெருங்கியவர்களாக அமைந்துவிட்டாலும், நம்முடைய தேடுதல் நிற்பதில்லை.

அன்பும், அறிவும், பண்பும், பரிவும் காட்டுகிற,  நமக்குத் தேவையான ஒருவரை நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். அதிலும் முக்கியமாக நாம் சொல்வதை ஒருவர் கேட்கத் தயாராய் இருந்தால், அவர்பால் பிரியம் அதிகரிக்கிறது.
இதை நான் பல முறை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

 நண்பர்களும் உறவினர்களும் என்னிடம் பேசும்போது, அவர்கள் சொல்வதைக் கேட்கும் போது, அவர்களின் பல பிரச்சினைகள் தீர்வதாக அடுத்த சில தினங்களிலேயே என்னிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள். பிறர் பேசுவதைக் கேட்பதால் அவர்கள் கோபங்கள் குறைகின்றன...ஏதாவதொரு வகையில் தீர்வுகள் பிறக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது 'ஸ்பீக்கர்ஸ் கோர்னர்' என்றொரு இடத்தை என் நண்பர் காண்பித்தார். ஒரு சின்ன திடலின் மூலையில் சில நாற்காலிகள் இருந்தன. அவற்றின் முன், ஒருவர் நின்று பேசுவதற்கான மேஜையும் இருந்தது. விசாரித்ததில், ஆழ்மனதில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் எண்ணக்குமுறல்களையும்  மக்கள் இங்கு வந்து காலி நாற்காலிகளின் முன் பேசும் போது மனம் அமைதி அடைந்து சாந்தமுடன் திரும்பிச்செல்கிறார்கள் என தெரிந்துகொண்டேன்.  ஆக, காலி நாற்காலிகளுக்கே இப்படி ஒரு மகிமை என்றால், நிஜத்தில் நம் நண்பர்களும் உறவினர்களும் பேசுவதை கேட்கும்போது அவர்கள் மனம் எப்படி திருப்தியடையும்?

உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதையும், பெற்றோர் பிள்ளைகள் சொல்வதையும் சற்று நேரமாவது காது கொடுத்து கேட்கவேண்டும். கேட்கும் அதே நேரம், அவர்கள் சொல்வதன் சாராம்சத்தை மனதில் அசைபோட்டு, உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்கவேண்டும்.

கணவன் மனைவிக்குள்ளும், ஏனைய குடும்பத்தினருடனும் இப்படி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கும் பழக்கமிருந்தால் பல பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பே இல்லை. இப்படி அமைதியாய் கேட்பதால் ஒருவர் மேல் மற்றவருக்கு உள்ள மதிப்பும் உயரும், உறவும் வலுப்படும்.

1 comment:

  1. Yes, sir! Neenggal solvathu ummaithaan. Listening makes magic.

    ReplyDelete