Friday 13 July 2012

குறையும் நிறையும். . .

சிலர் சரியாக தங்களுடைய கடமைகளைச் செய்கிறார்களோ இல்லையோ, அடுத்தவர்களின் குறைகளை தினமும்  சுட்டிக்காட்ட தவறுவதில்லை.  நேரடியாக இல்லாவிட்டாலும், மற்றவர்களின் தவறுகளை 'ஸூம்' பண்ணி பெரிது படுத்தி அடுத்தவர்களிடம் தங்களின் கண்டுபிடிப்புகளை சொல்லி யாரையாவது மட்டம் தட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெறுப்பின் அடையாளம் இது.

எப்படி வருகிறது இந்த வெறுப்பு; இதன் முக்கிய காரணங்கள் என்னவென்று பார்த்தோமானால் அவை மிகச் சாதாரணமாகவே படும்.

நம்மால் செய்ய இயலாததை பிறர் செய்யும் போது தோன்றும் ஆதங்கமே இப்படி வெறுப்பாக மாறுவதாக அனுபவப்பட்டோர் கூறுகின்றனர்.

 நிஜத்தில் நாம் இப்படி இல்லை. நம்மைச்சுற்றியுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகள், வலுக்கட்டாயமாக் திணிக்கப்படும் எண்ண அதிர்வுகளே நம்மை இப்படி சலிப்படையச் செய்கின்றன. அதுவும் இன்னொருவர் செய்து பெயர் வாங்கும் போது, அவர்மேல் வெறுப்பு உண்டாகி அவரின் செயலில் உள்ள குறைகளை அலசத்தொடங்கிவிடுகிறோம்.

'இமேஜ் ஓவர்லோட்' எனச் சொல்வார்களே, அது போல கண்டதையும் வரைந்து தள்ளும் வித்தையில், ஆட்களையும் மிருகங்களையும் பார்த்துப் பழகியோருக்கு, வெறும் கோடுகளினால் உறுவான  ஒன்று ஓவியமாகத் தெரிவதில்லை. அது அவர்களுக்கு கிறுக்குத்தனமாக தோன்றுவதில் வியப்புமில்லை.

ஆனால், அதுவே பின்னர் 'மோடர்ன் ஆர்ட்' ஆக கலை உலகில் புகழ்பெறும்போது அதை உணர்ந்து பாராட்ட வேண்டுமேயின்றி அதை வெறுக்கக்கூடாது.

இதற்கு நம்மை நாம் சற்று மேலே உயர்த்திக்கொள்வது முக்கியம்.  இது சாத்தியமானால், நாம் நம்மை நெறிபடுத்தத் தொடங்கிவிட்டோம் என்று பொருள். அடுத்தவர் குறைகளை மட்டுமே பார்த்திருந்த நமக்கு அவர்களின் நிறைகளும் இனி தெரியத்தொடங்கும்.

No comments:

Post a Comment