Thursday 21 November 2013

சபதங்களும் சாபங்களும்...

இன்றைய வெகு விரைவான வாழ்க்கையில் சபதங்களும் சாபங்களும் புராண காலத்தில் இருந்ததை விட அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.

பொதுவில் பாதிக்கப்படுவோரின் ஆளுமையினை வெளிப்படுத்தும் வார்த்தைகளாகவே இவ்விரண்டும் இருக்கின்றன.

அதிகப்படியான கோபம், அதிகப்படியான பாதிப்பு அல்லது இவற்றினால் ஏற்படும் விரக்தியே ஒருவர் சபதமிடவும், சாபமிடவும் காரணமாகிறது.

ஆயினும் சாதாரணமாக ஏற்படும்  சண்டையில் வெளிவரும் சுடுசொற்களும், கடும் வார்த்தைகளும் சாபங்களாகாது.
" நீ நல்லா இருக்க மாட்டே...
நாசமா போவ..."
என்பது போன்ற வார்த்தைகளுக்கு அது போன்ற சூழ்நிலைகளில் சக்தி இல்லை" என்கிறார் " மனிதவியல் மாற்றங்கள்"எனும் புத்தக ஆசிரியர், எனது நண்பர் திரு இளவரசு அவர்கள். "ஒருவரின் ஆத்திரம் சாபமாகிவிடாது. அது சாபமாக, அவருக்கு இறையருள் வேண்டும்".

நண்பர் சொல்வதைக் கேட்க சற்று ஆச்சரியமாக இருந்தாலும், புராணங்களை நினைத்துப் பார்க்கையில், தவத்தில் வலிமை வாய்ந்த மகான்களும், மகரிஷிகளுமே சபிக்கவும், சாபமிடவுமாக இருந்திருக்கின்றனர் என்பது உண்மையாகப் பட்டது.  அதில் ஒரு நியாயம் இருப்பதாகவும் தோன்றியது. ஞானமில்லையேல் கோபம் எல்லை மீறும் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்கு சபிக்கத் தொடங்கிவிடுவார்களே....

ஆக, தவ வலிமை மிக்கவர்களிடம் ( அல்லது வயதில் மூத்தோரிடம் ) சற்று நாவடக்கத்துடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும், நம்மை பல வம்புகளிலிருந்து காத்திடும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

சாபம் அழிக்கும் குணத்தினை இலக்காகக் கொண்டிருந்தால், சபதம் சாதிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதைக் காணலாம்.  அங்குமிங்குமாக ஓரிரு இடங்களில் " நெகட்டிவ்வான" தாக்கத்தை சபதம் செய்வோர் காட்டியிருக்கின்றனர், பாஞ்சாலி சபதம், கண்ணகி சபதம் போன்றவற்றை உதாரணங்களாகச்  சொல்லலாம். விபரீதங்கள் அதிகமிருந்தாலும், தீர்க்கதரிசனங்களாக இவை இன்றளவும் பேசப்படுகின்றன.

உணர்ச்சியின் மிகுதியால் " நான் இதைச் செய்வேன், அதைச் சாதிப்பேன் " என நல்ல காரியங்களுக்காக சபதமிடுவோர்தான் அதிகம்.

தங்களின் திட்டமிட்ட, தீர்மானமான முடிவொன்றினை ஊரார் முன் அறிவிப்பதே சபதமாகிறது.

சாபத்துக்கு தவ வலிமை எப்படி முக்கியமோ, அதுபோல சபதத்துக்கு மனவலிமை மிக மிக அவசியம்.  இல்லையேல், வெறும் வாய்மொழி வார்த்தையாக " சவடால் பேர்வழி" என ஒருவரை முத்திரை குத்தி அடையாளம் காண மட்டுமே பயன்படும்.


No comments:

Post a Comment